You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா இமாலய வெற்றி: 5 முக்கிய காரணங்கள் என்ன?
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
2019 ஐசிசி உலகக்கோப்பை தொடரில், இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் வியாழக்கிழமையன்று நடந்த லீக் போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 268 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 143 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்திய அணியின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணங்கள் குறித்து காண்போம்.
அதிரடியும், கட்டுக்கோப்பும் நிறைந்த கோலியின் பேட்டிங்
பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த மான்செஸ்டர் ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த இந்தியா தொடக்கத்தில் தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தவண்ணம் இருந்தன.
இந்திய அணித்தலைவர் விராட் கோலி மட்டும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி அணியின் ரன்குவிப்பில் தொய்வில்லாமல் பார்த்து கொண்டார். 82 பந்துகளில் 72 ரன்கள் குவித்த விராட் கோலி 39 ஓவர்கள் வரை களத்தில் இருந்தார். இது பிறகுவந்த பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
அசத்திய தோனி - பாண்ட்யா இணை
விராட் கோலி ஆட்டமிழந்த தருணத்தில் இந்தியா 250 ரன்களை தாண்டுவது சிரமம் என்ற கணிப்பை மீறி 268 ரன்கள் எடுக்க காரணம் தோனி மற்றும் பாண்ட்யா இணைதான்.
ரன்குவிப்புக்கு அனைத்து பேட்ஸ்மேன்களும் சிரமப்பட்ட ஆடுகளத்தில் 38 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த பாண்ட்யா, இந்திய அணி 250 ரன்கள் எடுக்க முக்கிய காரணம்.
அதேபோல் கடைசி ஓவர்களில் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு அரைசதம் எடுத்த தோனியின் ஆட்டம், இந்தியா 268 ரன்கள் எடுக்க காரணமாக அமைந்தது.
மீண்டும் ஜொலித்த முகமது ஷமி
ஆப்கானிஸ்தானுடன் நடந்த முந்தைய போட்டியில் தனது புயல்வேக பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் எடுத்த முகமது ஷமி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த போட்டியிலும் சிறப்பாக பங்களித்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர அதிரடி வீரர் கெயிலின் விக்கெட்டை வீழ்த்திய ஷமி, மிகவும் சிறப்பான பந்தின் மூலம் ஹோப்பின் விக்கெட்டை எடுத்தார்.
இறுதி ஓவர்களில் மேலும் இரண்டு விக்கெட்டை எடுத்த அவர், நடப்பு தொடரில் இரண்டே போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
அசத்திய பந்துவீச்சாளர்கள்
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 268 ரன்கள் குவித்த போதிலும், அணியின் பெரும் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றது பந்துவீச்சாளர்களே.
இந்த போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே வீசிய கேதார் ஜாதவ் தவிர அனைத்து இந்திய பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகள் எடுத்தனர்.
முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
மிக துல்லியமான பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்களை பெரிதும் தடுமாற வைத்து உலகக்கோப்பை தொடரின் முக்கிய தருணத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் அனைத்து அணியினரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் மோசமான பேட்டிங்
125 ரன்களில் மேற்கிந்திய தீவுகள் தோல்வியடைய முக்கிய காரணம் அந்த அணியின் பேட்டிங்தான். பல பேட்ஸ்மேன்கள் நம்பிக்கை குறைந்தநிலையில் பேட்டிங் செய்ததுபோல் தவறான ஷாட்களை விளையாடினர்.
கெயில் விக்கெட்டை தொடக்கத்தில் இழந்த அந்த அணி, வெற்றி பெற தேவையான அதிரடி ஆட்டத்தை எந்த கட்டத்திலும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா பெற்ற பெரும் வெற்றி குறித்து கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரகுராமன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''300 ரன்கள் எடுப்போம் என்ற எண்ணத்தில் தனது பேட்டிங்கை தொடங்கிய இந்தியா, பிட்ச்சின் தன்மை குறித்து அறிந்துகொண்டு முன்னெச்சரிக்கையுடன் விளையாடியது,'' என்று நினைவுகூர்ந்தார்.
''கோலியின் பேட்டிங் மற்றும் இறுதி ஓவர்களில் விளாசிய தோனி மற்றும் பாண்ட்யா ஆகியோர் 268 என்ற சவாலான ஸ்கோரை அணி எட்ட உதவினர்.''
''ஆனால், இந்தியாவின் மிகப்பெரும் வெற்றிக்கு அணியின் பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சுதான் காரணம். ஷமி மற்றும் பும்ரா இணை கடந்த போட்டிபோல இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடியது. இனிவரும் போட்டிகளில் எதிராணியினருக்கு இவர்கள் சிம்மசொப்பனமாக இருப்பர்,'' என்று மேலும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்