You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி: வாட்டிய வறுமையில் சளைக்காமல் போராடியவர்
- எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
- பதவி, பிபிசி தமிழ்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டப் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது. பல்வேறு விதமாக போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா, சீனா, ஜப்பான், இரான் உள்ளிட்ட 43 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை கோமதி மாரிமுத்து இலக்கை 2:02.70 நேரத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும், இந்த தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கமாகவும் இது அமைந்தது.
ஓட்டப்பந்தயம் தொடங்கியபோது ஆறாவது இடத்தில் இருந்த கோமதி, பிறகு வேகமாக மட்டுமின்றி சாதுர்யமாக செயல்பட்டு இரண்டு இலங்கை வீராங்கனைகளை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய கோமதி, கடைசி 200 மீட்டரில் கஜகஸ்தான் மற்றும் சீனாவை சேர்ந்த வீராங்கனைகளை கடந்து முதலிடத்தை பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
30 வயதாகும் கோமதி தான் பங்கேற்கும் மூன்றாவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார். இதற்கு முன்னர் 2013 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டிகளில் பங்கேற்ற கோமதியால் முறையே ஏழு மற்றும் நான்காவது இடத்தையே பெற முடிந்தது.
கோமதி மாரிமுத்து: தங்க மங்கை வெற்றி இலக்கை அடைந்த தருணம்
"இவ்வளவு பெரிய நிலைக்கு வருவார் என்று தெரியாது"
விவசாயத்தை தொழிலாக கொண்ட கோமதியின் குடும்பத்தில் ஒரு ஆண் உள்பட மொத்தம் நான்கு குழந்தைகள்; அதில் கோமதிதான் இளையவர். கோமதியின் வெற்றி குறித்து அவரது அண்ணண் சுப்ரமணியிடம் பேசியபோது, "பள்ளிக் காலத்திலிருந்தே தடகளத்தில் அதிக ஆர்வமுடையவராக கோமதி இருந்தார். ஒருகட்டத்தில், 'நான் தினமும் திருச்சிக்கு சென்று தடகள பயிற்சி எடுக்கவுள்ளேன்' என்று கோமதி கூறியபோது, நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். அதன் காரணமாக எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும்.
இருப்பினும், எங்கள் தந்தையின் தொடர் ஆதரவின் காரணமாகபல்வேறு வெற்றிகளை பெற்ற கோமதி படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறினார். கோமதிக்கு வருமான வரித்துறையில் பணி கிடைத்த ஓர் ஆண்டில் எங்களது தந்தை மறைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால், வெளியுலகத்திற்கு தெரியாத இந்த குக்கிராமத்தை கோமதி நாடறிய செய்வார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. என்னுடைய மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை" என்று உணர்ச்சி பொங்க கூறுகிறார் சுப்ரமணி.
தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாக களத்தில் போராடி வரும் கோமதி தற்போது குறிப்பிடத்தக்க சாதனையை செய்துள்ளதாகவும், ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவதே அவரது இலக்கு என்றும் அவர் மேலும் கூறினார்.
"மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவர்"
தோகா ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்க வேட்டையை தொடங்கி வைத்துள்ள கோமதியின் வாழ்க்கை பயணத்தை அறிந்துகொள்வதற்காக அவரது ஆரம்பகால பயிற்சியாளர் ராஜாமணியிடம் பேசினோம்.
"கோமதிக்கு அப்போது சுமார் 20 வயதிருக்கும். விளையாட்டில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆவலுடன் இருந்த அவருக்கு, முறையான பயிற்சியை சுமார் நான்காண்டுகளுக்கு அளித்தேன். தடகளத்திற்கான பயிற்சியை ஆரம்பித்த சில மாதங்களிலேயே மாவட்ட அளவிலும், பிறகு மாநில அளவிலும் கோமதி வெற்றிகளை குவிக்க தொடங்கினார்" என்று கூறும் ராஜாமணி, தான் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிவதாகவும், தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கோமதி போன்ற மாணவர்களுக்கு வழிகாட்டுவதை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருவதாகவும் கூறுகிறார்.
"திருச்சி நகரத்தின் மையப்பகுதியிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலுள்ள முடிக்கண்டம் என்னும் குக்கிராமத்தை சேர்ந்த இவர், தினமும் அதிகாலை 5:30 மணிக்கும், மாலை 5 மணியளவிலும் நடக்கும் தடகள பயிற்சிக்காக 30 கிலோ மீட்டர் தூரம் பயணித்தார்.
ஒரு பெண்ணாக தான் அனுபவிக்கும் உடல், மனநல பிரச்சனைகளை சுட்டிக்காட்டி கோமதி ஒரு நாள் கூட பயிற்சிக்கு முழுக்கு போட்டதில்லை. அவரது இந்த ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்தது.
கோமதி தனது வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு போகவே மூன்று கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருந்தது. இருப்பினும், அனைத்து சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிய கோமதி பல்கலைக்கழக அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்றவுடன், வருமான வரித்துறையில் பணி கிடைத்து கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வருகிறார்.
நான் பயிற்சியளித்த மாணவர்கள் இந்திய விமானப்படை முதல் ரயில்வே வரை பல்வேறு அரசு வேலைகளில் உள்ளனர். ஆனால், இவ்வளவு பின்தங்கிய நிலையிலிருந்து, மிகப் பெரும் சாதனை படைத்துள்ள கோமதி, அவரை போன்ற பலருக்கு எடுத்துக்காட்டாக உருவெடுத்துள்ளார். கடந்த பத்தாண்டுகளாக இடைவிடாது ஓடி வரும் கோமதி இதுவரை 500க்கும் மேற்பட்ட வெற்றிகளை குவித்துள்ளார்" என்று ராஜாமணி மேலும் கூறினார்.
"அந்த சந்தேக நபர் தனது பெயர் உமர் என்றார்": தேவாலய பாதிரியாரின் வாக்குமூலம்
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்