You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்
- எழுதியவர், மானிட்டரிங் பிரிவு
- பதவி, பிபிசி
இலங்கையில் கடந்த ஞாயற்றுக் கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 310 பேர் இறந்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை.
ஐஎஸ் என சுருக்கமாக கூறப்படும் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழு இதுவரை இலங்கையில் நடந்த தாக்குதல்கள் குறித்து எந்தவித பொறுப்பையும் கோரவில்லை. இந்நிலையில் ஐஎஸ் ஆதரவாளர்கள் இலங்கையின் தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் நடந்த கொடூர தாக்குதலை கொண்டாடி இருக்கிறார்கள்.
இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் நடந்த தற்கொலை குண்டுதாரி தாக்குதல்களில் குறைந்தது 500 பேர் காயமடைந்துள்ளனர்.
ஞாயற்றுக்கிழமை தாக்குதல் நடந்த பிறகு ஐஎஸ் ஆதரவாளர்கள் டெலிகிராம் மெசேஜிங் செயலியில் இந்த தாக்குதல் தொடர்பாக விரைவாக எதிர்வினையாற்றினார்கள். குறிப்பாக இந்த தாக்குதல் தொடர்பாக பிரதான ஊடங்களில் வெளியான புகைப்படங்கள், காணொளிகளை இதில் பகிர்ந்தார்கள்.
அல்-கய்தாவின் சில ஆதரவாளர்களும் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை பாராட்டினார்கள்.
தாக்குதல்களுக்கான எதிர்வினைகள்
ஐஎஸ் இந்த தாக்குதல் தொடர்பாக எதுவும் கூறாத நிலையிலும் இந்த குழுவின் ஆதரவாளர்கள் சிரியா மற்றும் இராக்கில் ஐஎஸ்ஸுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக இந்த தாக்குதல் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
பிரதான ஊடகங்களால் அடையாளப்படுத்தப்படும் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் என கூறப்படும் ஜஹ்ரான் ஹாஷிமின் பேஸ்புக் பக்கத்தின் ஸ்நாப்ஷாட் ஐஎஸ் ஆதரவாளர்களால் பரவலாக பகிரப்பட்டது.
ஐஎஸ் தலைவர் அபு பகர் அல் - பக்தாதிக்கு விசுவாசம் காட்ட உறுதிமொழியேற்க ஜஹ்ரான் ஹாஷிம் அழைப்பு விடுத்ததாக கோரினர் ஜிகாதிகள் குழுவின் ஆதரவாளர்கள்.
'' இந்த செய்தி உண்மையெனில், இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்க வேண்டியது அவசியமாகிறது'' என ஐ எஸ் ஆதரவு டெலிகிராம் சேனல் கூறுகிறது.
பல்வேறு ஐஎஸ் ஆதரவு டெலிகிராம் சேனல்களும் தற்கொலை குண்டுதாரிகளை பாராட்டியுள்ளனர் மேலும் கடவுள் அவரை ஏற்றுக்கொள்வார் என எழுதியுள்ளனர்.
ஐஎஸ்ஸுக்கு எதிரானவர்கள் மீது கடும் வலி தரும் தாக்குதல் இது என சில சேனல்கள் கூறியுள்ளன. இந்த குண்டுவெடிப்பில் அயல்நாட்டினர் பலர் இறந்துள்ளனர் என அமெரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டணி குறிப்பிடுகிறது.
குறைந்தது 35 அயல்நாட்டினர் இறந்ததாக பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
''தேவாலயங்களில் இரத்தம் சிந்தும் நாள்கள் ஆரம்பித்துவிட்டன. ஆகையால் ஓ நாத்திகர்களே சந்தோஷமாக இருங்கள்'' என ஒரு டெலிகிராம் பயனர் எழுதியிருக்கிறார்.
'' கிறித்தவர்களுக்கு ஈஸ்தர் திருநாள் வாழ்த்துகள், இயேசுவின் துரோகிகளே...இது உங்களுக்கான வெகுமதி'' என பிரபல ஐஎஸ் ஆதரவு முன்டாஸிர் மீடியாவில் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல அல்-கய்தா ஆதரவாளர் வராதட் அல்- மஜித் இந்த தாக்குதலை போற்றும் விதமாக தொடர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் ஐ எஸ்
2016-ம் ஆண்டு இலங்கை நுண்ணறிவு பிரிவு அந்நாட்டில் ஐஎஸ் அமைப்பு இல்லை என ஒரு விசாரணையின் முடிவில் கூறியது.
இருப்பினும் தமிழ் பேசும் ஐஎஸ் ஆதரவாளர்கள் டெலிகிராமில் ஜிகாதிகள் பரப்புரையை பரப்புவது கவனிக்கப்பட்டது.
ஏப்ரல் 17-ம் தேதி டெலிகிராமில் இஸ்லாமிய அரசு - தமிழ் எனப் பெயரிடப்பட்ட ஒரு சேனலில் இணையும்படி ஐஎஸ் ஆதரவாளர்களால் பலருக்கும் ஒரு இணைப்பு பகிரப்பட்டது.
முன்னதாக ஏப்ரல் 15-ம் தேதி டெலிகிராமில் ''தி ஸ்ட்ரேஞ்சர்ஸ் சேனல்'' என்றொரு தமிழ் பக்கமும் ஜிகாதிகள் ஆதரவாளர்களால் விளம்பரப்படுத்தப்பட்டது.
சில செய்தியறிக்கைகள் கூறுவதன் படி, 'அல் -குர்பா மீடியா' என்ற பெயரில் பேஸ்புக்கில் ஜஹ்ரான் ஹாஷிம் தனது காணொளி விரிவுரைகளை பகிர்ந்திருக்கிறார்.
ஐஎஸ் அமைப்பு இதற்கு முன் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் பல்வேறு பகுதிகளில் தேவாலயங்களை குறிவைத்திருக்கிறார்கள்.
2018-ல் இந்தோனீசிய நகரமான சூரபயாவில் தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதல்கள் நடைபெற்றன. 2019-ல் பிலிப்பைன்ஸில் ஜோலோ நகரத்தில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்றுக்கொண்டது.
ஐ எஸ் அமைப்பின் எதிரி ஜிகாதிகள் குழுவான அல்-கய்தா இதற்கு முன்பு ஏற்கனவே இந்தியா, பர்மா, இலங்கையில் உள்ள புத்த மதத்தவர்களை எச்சரித்த வரலாறு உண்டு. ''முஸ்லிம் மீதான உங்கள் தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால் ஜிகாதிகளின் பதிலடியை சந்திக்க நேரிடும்'' என அல்-கய்தா எச்சரித்திருந்தது.
இருப்பினும், நியூசிலாந்தில் சமீபத்தில் ஒரு மசூதியில் கொடூர தாக்குதல் நடந்தபின்னர் அதற்கு எதிர்வினையாக இஸ்லாமியர் அல்லாதவர்களை தேவாலயம் மற்றும் வழிபாட்டுத்தளங்களை குறிவைக்க கூடாது என அல்-கய்தா அறிவுறுத்தியிருந்தது. இஸ்லாமில் அப்படிச் செய்வதற்கு தடை என்றும் அந்த அமைப்பு கூறியது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்