ஜோ ரூட் : 'ஒருபாலுறவுக்காரராக இருப்பதில் தவறில்லை' - இங்கிலாந்து கேப்டனின் பதிலடிக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Shaun Botterill
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட்டின்போது, மேற்கிந்திய வேகப்பந்துவீச்சாளரான கேப்ரியல் கூறிய கருத்துக்கு பதிலளித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தலைமைப்பண்பு மற்றும் பக்குவத்துடன் நடந்து கொண்டதாக முன்னாள் வீராங்கனையான எபோனி ரெய்ன்போர்ட்-பிரென்ட் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் ஊடகம் வெளியிட்ட ஒரு காணொளி கிளிப்பில், ''இந்த சொல்லை ஒருவரை அவமானப்படுத்துவதற்காக பயன்படுத்த வேண்டாம். ஒருபாலுறவுக்காரராக இருப்பதில் தவறொன்றும் இல்லையே' என்று கேப்ரியலிடம் ஜோ ரூட் கூறியது பதிவாகியுள்ளது.
30 வயதான கேப்ரியலை அவர் பயன்படுத்திய வார்த்தைக்காக போட்டி நடுவர் எச்சரித்தார். ஆனால், அவர் பயன்படுத்திய வார்த்தை எது என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக ஜோ ரூட் நடந்துகொண்டதை குறிப்பிட்ட ரெய்ன்போர்ட்-பிரென்ட், ''கண்ணியமாகவும், பொறுப்பாகவும் நடந்து கொண்டதற்கு பாராட்டுக்கள், ஜோ ரூட்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜோ ரூட்டை தூண்டும்விதமாக கேப்ரியல் ஆரம்பத்தில் என்ன சொன்னார் என்று தெரியாவிட்டாலும், ஜோ ரூட் பதிலளித்த விதம் அவரின் தலைமைபண்பை பறைசாற்றுவதாக இருந்தது.
''ஒரு இங்கிலாந்து கேப்டனாக பொறுப்பாக நடந்து கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக ஜோ ரூட் நடந்து கொண்டார்'' என்று இது குறித்து ரெய்ன்போர்ட்-பிரென்ட் லேயும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Shaun Botterill
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே செயின்ட் லூசியாவில் நடைபெற்றுவரும் மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்டின் மூன்றாவது நாளின் முடிவில் இந்த சம்பவம் பற்றி கேட்கப்பட்டபோது ஜோ ரூட் எந்த விளக்கமும் தரவில்லை. ஆனால், தனது அற்புதமான சதம் மூலம் இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு ஜோ ரூட் எடுத்து சென்றுள்ளார்.
''உலகம் பரந்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டிய காலகட்டத்தில், இது போன்ற விஷயத்துக்கு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பதில் அளிக்க வேண்டியதில்லை என்ற போதிலும், அவர் அழகாக இதனை அணுகியது மற்றும் நடந்து கொண்டது பாராட்டுக்குரியது'' என்று ரெய்ன்போர்ட்-பிரென்ட் குறிப்பிட்டார்.
இதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக ஜோ ரூட் நடந்துகொண்டது சமூகவலைத்தளங்களில் பரவலான பாராட்டுக்களை பெற்றுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












