கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி - 5 முக்கிய காரணங்கள்

பட மூலாதாரம், Kerry Marshall/Getty Images
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றுள்ள நிலையில், அது தொடர்பான 5 முக்கிய காரணங்கள் இவை.
ஆஸ்திரேலிய தொடர் வெற்றி அளித்த நம்பிக்கை
கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்று வென்ற இந்தியா இப்போட்டியில் மிகவும் நம்பிக்கையுடன் வலிமையாக காணப்பட்டது.

பட மூலாதாரம், Kerry Marshall/Getty Images
களத்தில் இந்திய பந்துவீச்சாளர்களும், தடுப்பாளர்களும் ஆக்ரோஷமாக செயல்பட்டது அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
ஷமியும், சுழல் பந்துவீச்சாளர்களும்
தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் நியூசிலாந்து அணியினர் தடுமாறினர். குறிப்பாக சிறப்பாக பந்துவீசிய வேகப்பந்துவீச்சளர் முகமது ஷமி, மார்ட்டின் கப்தில் உள்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூசிலாந்து ஆடுகளங்கள் வேகபந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது வியப்பை ஏற்படுத்தியது.

பட மூலாதாரம், Kerry Marshall/Getty Images
குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முகமது ஷமி, குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகிய மூவரும் மொத்தமாக வீசிய 26 ஓவர்களில் 101 ரன்களை மட்டும் கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சூழலை கணிக்க தவறிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள்
ஆட்டம் தொடங்கியவுடன் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறியதற்கு பெரும் காரணம் அவர்கள் ஆடுகளம் மற்றும் பந்துவீச்சை சரியாக கணிக்க தவறியதுதான்.
குல்தீப் யாதவ், சாஹல் போன்ற பந்துவீச்சாளர்களை பல நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் இதுவரை அதிகமாக எதிர்காணாதது அவர்களை சந்திப்பதில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.
ஷிகர் தவான், கோலி அபாரம்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 103 பந்துகளை சந்தித்து 75 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது, இந்திய அணிக்குஅதிக வலிமை சேர்த்தது. இந்த போட்டியில் 5000 ரான்கள் கடந்த வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றுள்ளார்.

பட மூலாதாரம், Kerry Marshall/Getty Images
விரைவாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்தியர்களில் 118 இன்னிங்ஸ்களுடன் 2-ஆம் இடத்தைப் பிடித்தார். 114 இன்னிங்ஸ்களுடன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.
விரைவாக 5 ஆயிரம் ரன்களைக் கடந்த இடதுகை ஆட்டக்காரர்களின் பட்டியலில் பிரையன் லாரா உடன் ஷிகர் தவன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஷிகர் தவானோடு சேர்ந்த வீராட் கோலி பொறுப்பாக ஆடி 59 பந்துகளை சந்தித்து 45 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்தியாவுக்கு சாதகமாக மாறிய ஆடுகளம்
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணிக்கு ஆடுகளம் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சாதகமாக அமையவில்லை.
வேக பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் சுழல் பந்துவீச்சு பெரிதும் எடுபட்டது.
கனே வில்லியம்சன் எடுத்த அதிகபட்ச 64 ரன்களுக்கு அடுத்து, அதிகபட்ச ரன்களே ரோஸ் டெய்லரின் 24 ரன்கள்தான்.
ஆனால், இரண்டாவதாக இந்திய அணி ஆடிய நிலையில், இந்த ஆடுகளம் சாதகமாக அமைந்தது என்னலாம். நியூஸிலாந்தின் பந்துவீச்சை இந்திய அணியினர் எளிதாக அடித்து ஆடினர்.
அதனால்தான் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 34.5 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட ரன்களை குவித்து இந்தியா மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
பிற செய்திகள் :
- ஹிட்லரின் தளபதிக்கு பதிலாக சிறையில் ஆள்மாறாட்டம் நடந்ததா?
- ஆமைக்கறி உடலுக்கு நல்லதா? - உண்டவரின் உண்மை கதை
- சபரிமலைக்குச் சென்ற கனகதுர்காவை வீட்டில் நுழைய விடாமல் தடுத்த கணவர்
- கமலா ஹாரிஸ்: அமெரிக்க அதிபர் வேட்பாளராக முயலும் சென்னை தாயின் மகள்
- அமெரிக்காவில் முஸ்லீம்களுக்கு எதிரான சதி: பள்ளி சிறுவனின் துப்பும், நான்கு பேர் கைதும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












