‘அச்ரேக்கர் சார்! என் பேட்டிங் பற்றி இன்றாவது ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களா! சச்சின் நெகிழ்ச்சி

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

2013, நவம்பர் 16, மும்பை வாங்கடே மைதானம் மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டது. 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாடி வந்த சச்சின் டெண்டுல்கர் ஓய்வுபெற்ற நாள் அது.

மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள், முன்னணி வீரர்கள், முன்னாள் வீரர்கள் என்று பலர் குழுமியிருக்க, சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை செதுக்கிய பலர் குறித்து நினைவுகூர்ந்தார்.

தனது பயிற்சியாளர் அச்ரேக்கர் குறித்து குறிப்பிடுகையில், ''நான் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் இன்னும் கொஞ்சம் ரன்கள் அடித்திருக்கலாம், இப்படி இந்த ஷாட் அடித்திருக்கக்கூடாது என்று எப்போதும் எனக்கு ஆலோசனை கூறுவார். நான் திருப்தியடைந்து விடக்கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு கூறியிருக்கலாம். ஆனால், அச்ரேக்கர் சார்! இன்றாவது நீங்கள் ஒருவார்த்தை என் பேட்டிங்கை பாராட்டி ஒரு வார்த்தை பேசலாம். ஏனென்றால், இன்றோடு நான் ஒய்வு பெறுகிறேன்'' என்று அப்போது சச்சின் கூறினார்.

தனது குருவின் இறுதி சடங்கில் பூத உடலை சுமந்த சச்சின் டெண்டுல்கர்

மாஸ்டர் பேட்ஸ்மேன் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் உள்பட இந்திய மற்றும் உலக அளவில் பல முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சியளித்து உருவாக்கிய பயிற்சியாளரான ரமாகாந்த் அச்ரேக்கர் புதனன்று மும்பையில் காலமானார்.

சிறந்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சரியர் விருது பெற்ற அவருக்கு வயது 87.

அதிய வயதானதால் ஏற்படும் நோய்களினால் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்ததாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.

சச்சின் தவிர பிரபல வீரர்களான பிரவீன் ஆம்ரே, வினோத் காம்ப்ளி, சமீர் டீகே மற்றும் பல்வீந்தர் சிங் சாந்து போன்றோருக்கும் அச்ரேக்கர் பயிற்சியளித்துள்ளார்.

தனது 11-வது வயதில், 15 வயதுகுட்பட்டோருக்கான கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாமில் முதன்முதலாக அச்ரேக்கரை சந்தித்தது குறித்து 'Playing it My way' என்ற தனது சுயசரிதை புத்தகத்தில் சச்சின் டெண்டுல்கர் நினைவுகூர்ந்துள்ளார்.

''அதற்கு முன்பு நான் வலைப்பயிற்சியில் ஈடுபட்டதில்லை. அன்று பலர் பேட்டிங் செய்ய காத்திருந்தனர். எனது முறை வந்தபோது நான் திருப்திகரமாக பேட்டிங் செய்யவில்லை. எனது பேட்டிங் முடிவடைந்த பின்னர், சார் என் அண்ணன் அஜித்தை அழைத்து, நான் மிகவும் சிறுவனாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்'' என்று சச்சின் அச்ரேக்கரை முதன்முதலில் சந்தித்த தனது அனுபவத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

சிறிது காலம் கழித்து என்னை அழைத்து வரலாம் என்று அஜித்திடம் அச்ரேக்கர் கூறியதாக அப்புத்தகத்தில் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

'விலைமதிப்பில்லாத ஒரு ரூபாய் நாணயம்'

பிறகு அவரது மாணவனாக இருந்த காலகட்டத்தில், மும்பை நகரம் முழுவதிலும் எண்ணற்ற போட்டிகளில் என்னை அச்ரேக்கர் விளையாட வைப்பார். அப்போதெல்லாம் அவரது ஸ்கூட்டரில் எண்ணற்ற முறைகள் மும்பை நகரை வலம் வந்தது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது என்று அந்த புத்தகத்தில் சச்சின் நினைவுகூர்ந்துள்ளார்.

''சிறு வயதில் நான் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அப்போது எனது பயிற்சியாளராக இருந்த அச்ரேக்கர், நான் பேட் செய்யும்போது எனது ஸ்டெம்புக்கு மேல் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைப்பார். நான் எதிர்கொள்ளும் பந்தில் அவுட்டாகவிட்டால் அந்த நாணயத்தை நான் எடுத்து கொள்ளலாம். அப்படி நான் சேகரித்த நாணயங்கள் விலைமதிப்பில்லாவை'' என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல ரமாகாந்த் அச்ரேக்கர் மிகவும் கண்டிப்பான பயிற்சியாளர் என்று குறிப்பிட்டு மற்றொரு சம்பவத்தையும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

'ஒருமுறை அச்ரேக்கர் சார் இல்லை என நினைத்து, பயிற்சிக்கு செல்லாமல் மைதானத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, திடீரென வந்த அவர், பயிற்சி செய்யாமல் என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என கேட்டு கன்னத்தில் பளார் என அறைவிட்டார். அதிலிருந்து நான் ஒரு நாள்கூட பயிற்சி செய்யாமல் இருந்ததில்லை என்றார் சச்சின்.

ஒரு பிரபல வீரரை உருவாக்குவதில் பயிற்சியாளரின் பங்கு என்ன என்பது பற்றி கிரிக்கெட் பயிற்சியாளர் சங்கர் பிபிசி தமிழிடம் உரையாடினார்.

''13,14 வயதில் தன்னிடம் அறிமுகப்படுத்தப்படும் ஒரு சிறுவன் அல்லது சிறுமியை மாநில, தேச அல்லது சர்வேதேச அளவில் முன்னணி வீரர், வீராங்கனையாக மாற்றும் பயிற்சியாளர் அந்த வீரருடன் பல ஆண்டுகளாக அவர் முழுமையாக பயணம் செய்வார்'' என்று சங்கர் விளக்கினார்.

''தனது மாணவனின் பலம், பலவீனம், எது அவருக்கு நன்மை பயக்கும், அந்த மாணவர் எந்த சூழலில் எவ்வாறு நடந்து கொள்வார் என்று ஒரு பயிற்சியாளருக்கு நன்கு தெரியும். அந்த மாணவரின் பெற்றோர் அவர் குறித்து எவ்வளவு தெரிந்து வைத்திருப்பார்களோ அந்த அளவு பயிற்சியாளருக்கும் தெரியும்'' என்று அவர் கூறினார்.

''எந்த பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் , தனது மாணவன் சிறந்த வீரனாக உலக அரங்கில் உருவெடுப்பதை கண்டு பெருமிதம் அடைவதே பெரும்பாலான பயிற்சியாளர்களின் மனோபாவம்'' என்று தெரிவித்தார்.

''சச்சின் மட்டுமல்ல பல முன்னணி வீரர்களை உருவாக்கியவர் அச்ரேக்கர். கிரிக்கெட், கிரிக்கெட், கிரிக்கெட் மட்டுமே தனது வாழ்வு என்று வாழ்நாளை கழித்தவர். தனது மாணவர்கள் விளையாட்டில் மிக சிறந்து விளங்க வேண்டும் என்று மிகுந்த அக்கறை கொண்டவர்'' என்று சங்கர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே, அச்ரேக்கரின் மறைவையொட்டி ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: