நியாண்டர்தால்கள் வரலாறு: கரடியின் தொடை எலும்பில் புல்லாங்குழல் செய்த விசித்திரம்

1995-ஆம் ஆண்டு ஒரு வித்தியாசமான எலும்பை தொல்லியலாளர் இவான் டர்க் கண்டுபிடித்தார். கிடைத்த இடம் ஐரோப்பிய நாடானா ஸ்லோவேனியாவில் உள்ள திவ்ய பாப் குகை. பூமியின் பழைய கற்கால அடுக்கைத் தோண்டும்போது நியாண்டர்தால்களின் தீமூட்டும் இடம், கல் மற்றும் எலும்புக் கருவிகளுக்கு அருகே இந்த எலும்பால் ஆன பொருள் கிடைத்தது.

"திவ்ய பாப் குகையில் கிடைத்த எலும்பு மனித வரலாற்றில் மிகவும் முக்கியமானது. மனிதன் எப்படி மனிதனாக உருவெடுத்தான் என்று தெரிந்து கொள்வதில் இது முக்கியமானது. நியாண்டர்தால்கள் வெறும் காட்டு மிராண்டிகள் என்ற ஒருபக்கச் சார்பான வாதத்தையும் இது மாற்றுகிறது " என்கிறார் ஸ்லோவேனிய தேசிய அருங்காட்சியத்தைச் சேர்ந்த பீட்டர் டர்க்.

ஒன்று முதல் இரண்டு வயதான ஒரு குகைக் கரடிக் குட்டியின் எலும்பில் இருந்து இந்தப் பொருள் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எலும்பு பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதில் நான்கு துளைகள் இருந்தன. நான்கு துளைகளும் ஒரே நேர் கோட்டில் இருந்ததையும் ஆய்வாளர்கள் கவனித்தனர்.

அந்தப் பொருளின் ஒரு முனை கூராக்கப்பட்டிருந்தது.

அது என்னவென்று ஆராய்ச்சியாளர்கள் முதலில் குழம்பினர். நீண்ட ஆராய்ச்சியை மேற்கொண்டனர். பின்னர் புதிருக்கு விடையைத் தெரிந்து கொண்டனர். அந்தத் துளைகள் அனைத்தும் ஏதோ ஒரு விலங்கு கடித்ததால் உருவானது என்ற முந்தைய எண்ணம் தவறானது என்று தெரியவந்தது. அது நியாண்டர்தால்களின் கைகளால் செய்யப்பட்ட புல்லாங்குழல் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

தொல்லியலாளர்களின் கணக்குப்படி அந்தப் புல்லாங்குழல் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது.அதுவே உலகின் மிகவும் பழமையான இசைக்கருவி.

"உறுதி செய்வதற்காக குகைக் கரடிக்குப் பதிலாக தற்கால கரடிக் குட்டியின் தொடை எலும்புகளைப் பயன்படுத்தினோம். துளைகள் எப்படி வந்தன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக கரடிக் குட்டி, கழுதைப் புலிகள் ஆகியவற்றின் பற்களைப் பயன்படுத்தினோம். கரடியின் கோரைப் பற்கள் காரணமாகவே அந்தத் துளைகள் உருவாகி இருக்கின்றன என்பது தெரியவந்தது. கழுதைப்புலி, சிங்கம் ஆகியவற்றின் மூலம் இது ஏற்பட்டிருக்காது என்பதும் தெரியவந்தது" என்கிறார் பீட்டர் டர்க்.

"எனினும் எலும்பின் மையப்பகுதியில் நான்கு துளைகள் வரிசையாக இருப்பது எப்படி என்ற மர்மம் தொடர்ந்து நீடித்து வந்தது.ஒரு விலங்கு கடிக்கிறது என்றால் அது ஓரங்களில்தான் கடிக்கும். ஆனால் இந்த எலும்பில் மையப் பகுதியில் துளைகள் இருந்தன. அதே போல் நடுவில் துளைகள் இருந்தாலும் எலும்பில் எந்தப் பிளவும் ஏற்படவில்லை. அது மிகக் கவனமாக துளையிடப்பட்டிருக்கிறது. அதற்காக முன்னதாக எலும்பு உடைந்துவிடக்கூடாது என்பதற்காக கவனமாகத் தயார் செய்யப்பட்டிருந்தது."

இது ஒரு இசைக்கருவிதானா என்பதை உறுதி செய்வதற்காக இசையியல் ரீதியாக விஞ்ஞானிகள் இதை ஆய்வு செய்தனர். அதற்காக கிடைத்த எலும்பைப் போன்றே நூற்றுக்கணக்கான மாதிரிகளைச் செய்தார்கள். மரம், விலங்கின் எலும்புகள், பீங்கான் என பலவகைப் பொருள்க இதற்குப் பயன்படுத்தப்பட்டன.

இந்தக் கருவியானது ஒரு அகன்ற பக்கத்தின் வழியாக ஊதப்பட்டது என்று ஆய்வின் தொடங்கத்தில் விஞ்ஞானிகள் நினைத்திருந்தார்கள். எலும்பின் ஒருபுறம் மிகவும் குறுகியதாக இருப்பதை பின்னர் ஆய்வாளர்கள் கவனித்தார்கள்.

"அந்த எலும்புக் கருவியை தலைகீழாக மாற்றினால் அதன் இசைக்கும் திறன் பல மடங்கு கூடியது. இது சுமார் 11.3 செ.மீ. நீளம் கொண்ட ஒரு இசைக்கருவியின் ஒரு பாகம் என்றும் அறியப்பட்டது. இது கிட்டதட்ட தற்போது இருக்கும் நவீன கால புல்லாங்குழலின் நீளம்." என்கிறார் இசைக் கலைஞர் ஜுபன் டிம்கோரோஸ்கியின் மகள் கேத்தின்கா.

இந்தக் கண்டுபிடிப்பை எல்லா தொல்லியல் ஆய்வாளர்களும் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. நியாண்டர்தால்களுக்கு இந்த அளவுக்கு கலை உணர்வு இருந்திருக்க வாய்ப்பில்லை என்று சில தொல்லியல் ஆய்வாளர்கள் வாதிட்டனர்.

நாம் இப்போது பயன்படுத்தும் புல்லாங்குழலை நியாண்டர்தால்கள் வடிவமைத்தார்கள் என்பது ஏற்றுக் கொள்வதற்கு கடினமான ஒரு வாதம்தான்.

தற்காலத்தில் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் இதுபோன்றவற்றைக் காண முடிகிறது. திவ்ய பாபேயில் கிடைத்த பொருள் நியாண்டர்தால்கள் இசை உணர்வுடன் இருந்தார்கள் என்பதை உறுதி செய்வதில் இன்னொரு படி முன்னோக்கி நகர்த்தியிருக்கிறது.

நியாண்டர்தால்கள் புல்லாங்குழலைப் பயன்படுத்தினார்கள் என்பது உறுதியாகிவிட்டது என்றே வைத்துக் கொண்டாலும், இன்னொரு கேள்வி புதிராகவே இருக்கிறது. அவர்கள் எதற்காக புல்லாங்குழலைப் பயன்படுத்தினார்கள்.

"இந்தக் கருவி ஒரேயொரு விசிலை உருவாக்கும் திறனை மட்டும் கொண்டிருந்ததாகக் கூட இருந்திருக்கலாம். அல்லது விலங்குகளக் கவர்ந்து வேட்டையாடுவதற்காக, அவற்றின் ஒலியை மறு உருவாக்கம் செய்வதற்காகவும் இருக்கலாம். சில அன்றாட நடவடிக்கைகளுக்காவும் இருந்திருக்கலாம்." என்கிறார் பீட்டர் டர்க்.

"சடங்குகள், துக்கம் ஆகியவற்றின்போது நியாண்டர்தால்கள் இசையைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நானும் எனது தந்தையும் நம்புகிறோம்" என்கிறார் கேத்தின்கா.

நியாண்டர்தால்கள் யார்?

நியாண்டர்தால் மனிதர்கள் யார் என நமக்கு கேள்வி எழலாம். உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக, நியாண்டர்தால் மனிதர்கள் மற்றும் தற்கால மனிதர்களின் முன்னோர்கள் குறித்து அறிவியல் ஆராய்ச்சிகள் நமக்கு இதுவரை சொன்னது என்ன என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களுடன் பிபிசி தமிழ் வெளியிட்ட சில கட்டுரைகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

நியாண்டர்தால்கள் நவீன மனிதர்களின் முன்னோர்களுடன் உடலுறவில் ஈடுபட்டார்களா?

ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உட்பட, நியண்டர்தால் டிஎன்ஏவை இன்று உயிருடன் உள்ள அனைவரிடமும் காணலாம், அவர்களின் மூதாதையர்கள் இந்தக் குழுவுடன் நேரடியாக தொடர்பு கொண்டதாக கருதப்படவில்லை.

2016ஆம் ஆண்டில், சைபீரியாவில் உள்ள அல்தாய் மலைகளில் இருந்து நியண்டர்தால்கள் சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நவீன மனிதர்களின் மூதாதையர்களுடன் தங்கள் மரபியலில் 1-7% பகிர்ந்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

மனித வரலாற்றில் இந்த அதிர்ச்சியூட்டும் அத்தியாயத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த கட்டுரையை படியுங்கள்.

நியாண்டர்தால் மனிதர்கள் - நவீன மனிதர்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தார்களா?

தெற்கு பிரான்சில் உள்ள குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குழந்தையின் பல் மற்றும் கல் கருவிகள், சுமார் 54,000 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவில் ஹோமோ சேபியன்ஸ் (தற்கால மனித இனம்) இருந்ததாகக் கூறுகிறது.

இது முன்பு நினைத்ததைவிடப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இரண்டு இனங்களும் நீண்ட காலத்திற்கு ஒன்றாக இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.

நியாண்டர்தால் மனிதர்கள் நம் முன்னோர்களுடன் போரிட்டார்களா?

40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நியாண்டர்தால் மனிதர்கள் அழிந்து போனதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

ஆனாலும், அந்தக் காலத்தில் வாழ்ந்த நமது மனித மூதாதையர்களுடன் ஏற்பட்ட போரில் அவர்கள் அழிந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக பரிணாம உயிரியல் வல்லுநர் நிக்கோலஸ் லாங்ரிச் தெரிவித்துள்ளார்.

மனிதகுலம் தோன்றியது எப்போது?

மனித குலத்தின் மூதாதையர்களின் புதைபடிம எச்சங்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்பு நினைத்திருந்ததைவிட இன்னும் மிக மிக தொன்மையானவை என ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.

இவற்றில், மனிதகுலத்தின் தொட்டில் என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவின் குகைகளில் புதைக்கப்பட்டிருந்த 'மிஸ்ஸர்ஸ் பிளெஸ்' (Mrs Ples) என அழைக்கப்படும் பண்டைய குகைவாழ் பெண்ணின் புதைபடிம எச்சங்களும் அடக்கம்.

34 லட்சம் முதல் 37 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரம்பகால மனிதர்களின் குழு பூமியில் சுற்றித் திரிந்ததாக, நவீன சோதனை முறைகள் பரிந்துரைக்கின்றன.

இருவேறு உயிரினங்கள் உடலுறவு கொண்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா?

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருவேறு உயிரினங்கள் உடலுறவு கொண்டதற்கான ஆதாரம் ரஷ்யாவின் குகையில் இருந்து கிடைத்துள்ளது.

நீண்ட காலத்திற்கு முன்னர், ரஷ்யாவின் குகை ஒன்றில் இருவேறு இனங்கள் ஜோடி சேர்ந்து வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த ஆதாரங்களில் இருந்து அந்த ஜோடிக்கு ஒரு மகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: