You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நோபல் பரிசு: ஸ்வாந்தே பாபோவுக்கு மருத்துவ துறைக்காக பெறுகிறார்; நியாண்டர்தால் மனிதர்களை ஆய்வு செய்தவர்
மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாந்தே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித பரிணாமம் குறித்த இவருடைய பங்களிப்புகளுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அழிந்துபோன நியாண்டர்தால் இன மனிதர்களின் மரபுக் குறியீட்டை கண்டறிந்தது உள்ளிட்ட சாத்தியமற்ற பணியை பேராசிரியர் ஸ்வாந்தே பாபோ செய்துள்ளதாக, நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.
ஆதிமனிதர்களின் ஒரு வகையை சேர்ந்த டெனிசொவன்கள் குறித்த கண்டுபிடிப்புகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார்.
நம்முடைய பரிணாம வரலாறு மற்றும் மனிதர்கள் எவ்வாறு இந்த பூமியில் பரவினர் என்பது குறித்தும் அதிகம் அறிவதற்கு இவருடைய கண்டுபிடிப்புகள் உதவியுள்ளன.
நாம் எங்கிருந்து வந்தோம், நம் முந்தைய மனித இனங்கள் அழிந்துபோன நிலையில், ஹோமோ சேப்பியன்ஸ் இனமான நாம் மட்டும் எப்படி தொடர்ந்து நீடிக்கிறோம் என்பது போன்ற பல அடிப்படையான கேள்விகளுக்கு விடைகளை அறியும் வகையிலான பணிகளை ஸ்வாந்தே பாபோ மேற்கொண்டுள்ளார்.
முக்கிய கண்டுபிடிப்புகள்
மனித மரபணு குறித்த ஆராய்ச்சிகள் 1990களில் வேகமெடுத்தன. ஆனால், அவையெல்லாம் பழமையான டிஎன்ஏக்களின் புதிய மாதிரிகள் மீதான ஆராய்ச்சிகளாக இருந்தன.
இதற்கு மாறாக, ஸ்வாந்தே பாபோவின் ஆர்வம், பழமையான, அழிந்துபோன நம் மூதாதையர்களின் மரபணு குறியீடு மீது இருந்தது. அதனை கண்டறிவது சாத்தியமே இல்லாதது என பலரும் நினைத்தனர். ஆனால், 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் எலும்பின் ஒருபகுதியிலிருந்து அதன் டிஎன்ஏவை முதன்முறையாக வரிசைப்படுத்தினார் ஸ்வாந்தே பாபோ.
இந்த ஆய்வு முடிவின் மூலம், ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் பெரும்பான்மையாக வாழ்ந்த நியாண்டர்தால் மனித இனமானது, நவீன கால மனிதர்கள் மற்றும் மனிதக் குரங்கிடமிருந்து வேறானவை என தெரியவந்தது.
ஹோமோசேப்பியன்கள் உள்ளிட்ட நவீன மனிதர்களை உள்ளடக்கிய இனக்குழுக்களையும், அழிந்துபோன மனித இனங்களையும் ஆராய்வது ஸ்வாந்தே பாபோவின் முக்கிய ஆராய்ச்சியாக உள்ளது.
நியண்டர்தால் டிஎன்ஏ மற்றும் உலகெங்கிலும் உள்ள மனிதர்களுக்கு இடையிலான தொடர் ஒப்பீடுகள், அவர்களின் டிஎன்ஏ ஐரோப்பா அல்லது ஆசியாவிலிருந்து வரும் மனிதர்களுடன் நெருக்கமாகப் பொருந்துவதாகக் காட்டியது.
இது, 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்த பிறகு, ஹோமோ சேப்பியன்கள் நியாண்டர்தால் மனித இனத்துடன் உடலுறவு கொண்டதாகவும் குழந்தைகளை பெற்றதாகவும் நமக்குச் சொல்கிறது.
இந்த பாரம்பரியத்தை தற்போதும் நீங்கள் காணமுடியும். அதாவது, 1-4% நவீன மனிதர்களின் டிஎன்ஏ, நியாண்டர்தால் மனித இனத்திடமிருந்து வந்தது. இது தொற்று மீது நம் உடல் எதிர்வினையாற்றுவதன் திறனை பாதிக்கிறது.
டெனிசொவன் மனித இனம்
மனித பரிணாமம் குறித்த இவரின் மற்றொரு பங்களிப்பு 2008ம் ஆண்டில் நிகழ்ந்தது. சைபீரியாவில் 40,000 ஆண்டு பழமையான மனித விரலின் எலும்பை டெனிசோவா குகையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
அதன் டிஎன்ஏ மாதிரியை பேராசிரியர் ஸ்வாந்தே பாபோ வரிசைப்படுத்தினார். இது முன்பு அறியப்படாத டெனிசொவன் மனித இனத்தின் உடையது என்பது இந்த ஆய்வு முடிவின் வாயிலாக தெரியவந்தது.
மேலும், ஹோமோ சேப்பியன் மனித இனம் டெனிசொவன் இனத்துடனும் கலந்து இனப்பெருக்கம் செய்தது என்பது ஆய்வின் வாயிலாக தெரியவந்தது. தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் 6% பேரின் டிஎன்ஏ டெனிசொவன் இனத்தைச் சேர்ந்ததாகும்.
இந்த மரபணு பரம்பரையில் சில, குறைந்த அளவிலான ஆக்ஸிஜனை சமாளிக்கும் வகையில் உடலுக்கு உதவுகிறது, மலைப்பாங்கான இடங்களில் உயிர்வாழ்வதற்கு உதவுகிறது. இது இன்றைய திபெத்தியர்களிடம் காணப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்