அன்பின் தருணமா? இரையின் இறுதி நிமிடமா? இந்த ஆண்டின் சிறந்த காட்டுயிர் ஒளிப்படங்கள்

    • எழுதியவர், எல்லா ஹேம்ப்லி
    • பதவி, பிபிசி நியூஸ் காலநிலை மற்றும் அறிவியல்

இந்தப் படத்தில் காணப்படும் போனோபோ குரங்கு, தனது அன்புக்குரிய செல்லப் பிராணியை போல ஒரு சிறிய கீரிப்பிள்ளையைகையின் கதகதப்பில் ஏந்தியிருக்கிறது. ஒருவேளை அப்படியில்லாமல், அந்த கீரிப்பிள்ளையின் தாயைக் கொன்றுவிட்டு குட்டியை இரவு உணவுக்காக குட்டியைக் கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம்.

காங்கோ ஜனநாயக் குடியரசில் உள்ள கிறிஸ்டியன் ஜீக்லர் இந்த சுவாரஸ்யமான படம் எடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் சார்பில், 58வது முறையாக நடத்தப்படும் இந்த ஆண்டுக்கான சிறந்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் போட்டியில் அவருடைய கவர்ச்சிகரமான ஒளிப்படம் மிகவும் பாராட்டப்பட்ட படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கிறிஸ்டியன் ஜீக்லர், அந்தக் குரங்கு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கீரிப்பிள்ளை குட்டியை கையில் பிடித்திருந்தது என்றார்.

அதைச் சாப்பிடத் திட்டமிட்டிருக்கலாம். போனோபோ குரங்குகள் இரையைப் பிடிக்கும்போது, உடனடியாகக் கொல்லாது. அதற்கு மாறாக, இரை உயிரோடு இருக்கும்போதே சாப்பிடத் தொடங்கும் என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவற்றை ஆய்வு செய்து வரும் லுய்கோட்டலே போனோபோ திட்டத்தின் இயக்குநர் டாக்டர் பார்பரா ஃப்ரூத் கூறுகிறார்.

ஆனால், சிலநேரங்களில் உணவு மிகவும் அதிகமாக இருந்தால், மீதமிருக்கும் உயிருள்ள இரையை செல்லப் பிராணிகளைப் போல் போனோபோ கருதும். பொதுவாக, அத்தகைய உயிரினங்கள் பின்னாளில் உணவாக எடுத்துக்கொள்ளப்படும். ஒளிப்படத்தில் காண்பது ஒருவேளை அப்படிப்பட்ட நடத்தையாகக் கூட இருக்கலாம் என்று டாக்டர் ஃப்ரூத் நம்புகிறார்.

அதேவேளையில், போனோபோ குரங்குகள், மென்மையான குணம், பச்சாதாபம், அமைதியான இயல்புக்குப் பெயர் போனவை என்றும் அவர் கூறுகிறார்.

கேமராவை வேடிக்கை பார்த்த திமிங்கிலம்

ரிச்சர்ட் ராபின்சன் எடுத்த இந்தப் படத்தில், அவரும் அவருடைய ஒளிப்படக்கருவியும் இந்த இளம் சதர்ன் ரைட் திமிங்கிலத்துக்கு ஒரு வசீகரப் பொருளாக மாறின. அவருக்கும் இந்தத் திமிங்கிலத்திற்குமான சந்திப்பு 30 நிமிடங்களுக்கு நீடித்தது. திமிங்கிலம் அவரைச் சிறிது நேரம் சுற்றிவிட்டு நீந்திச் சென்றது. பிறகு மீண்டும் இன்னொரு முறை திரும்பி வந்து பார்த்துச் சென்றது.

19, 20ஆம் நூற்றாண்டுகளில் திமிங்கிலங்கள் தீவிரமாக வேட்டையாடப்பட்டன. இவற்றை வேட்டையாடுவது தடை செய்யப்பட்ட பிறகு, இப்போது இந்த சதர்ன் ரைட் திமிங்கிலங்களின் எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரித்து வருகிறது.

பிரிவு: காட்டுயிர் உருவப்படங்கள்

மேகமாய் பரவியிருந்த பாசிகள்

லேப்லேண்டில் உள்ள போசியோவில் அமைந்துள்ள ஸ்நார்க்கெல் ஏரியில் ஒளிப்படக் கலைஞர் டினா டோர்மெனென், ஆங்கிலத்தில் பெர்ச் என்றழைக்கப்படும் கெண்டை வகையைச் சேர்ந்த மீன்களின் கூட்டத்தைச் சந்தித்தார்.

காலநிலை மாற்றம் மற்றும் நீர் வெப்பமயமானதால், அதிகப்படியாக வளர்ந்திருந்த பாசிகள் மேகம் போன்ற தோற்றத்தை ஏரியில் ஏற்படுத்தியிருந்தன. இந்த அதிகப்படியான பாசிகளின் பரவல், உயிர்வளியை அதிகமாகப் பயன்படுத்தும்போது, வெளிப்புறத்திலிருந்து சூரிய ஒளி ஊடுருவுவதைத் தடுக்கும்போது, அது நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதைச் சிக்கலாக்கும்.

பிரிவு: நீருக்கு அடியில் எடுக்கப்பட்ட ஒளிப்படம்

தொலைந்துபோன வெள்ளப்பெருக்கு

டச்சு ஒளிப்படக் கலைஞர் ஜாஸ்பர் டோவெஸ்ட், ஜாம்பேசி நதி ஆணையத்தின் நிலைய மேலாளரான லுபிண்டா லுபிண்டாவை அவரது புதிய வீட்டின் முன்(வலது) படமெடுத்தார். குறைந்த நீர் மட்டம் காரணமாக, அவருடைய முந்தையை வீடு இருந்த அளவு உயரத்திற்கு அவர் இந்த வீட்டைக் கட்ட வேண்டியிருக்கவில்லை. காலநிலை மாற்றம் மற்றும் காடழிப்பு ஆகியவை காரணமாக ஜாம்பேசி நதியின் வெள்ளப்பெருக்கு சமவெளி அதிக வறட்சியைச் சந்தித்துள்ளது.

துருவக் கரடி

1992 முதல் கைவிடப்பட்ட ரஷ்யாவின் கொலியுச்சின் தீவுக்கு, உணவு தேடிச் சென்ற 20-க்கும் மேற்பட்ட துருவக் கரடிகள் அங்கே கைவிடப்பட்ட மனிதக் குடியிருப்புகளில் குடியேறின. காலநிலை மாற்றம் கடல்பரப்பின் பனிக்கட்டி அளவைக் குறைப்பதால், துருவ கரடிகள் வேட்டையாடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. அந்தச் சிரமம், அவற்றை மனித குடியிருப்புகளுக்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறது. ஒலி குறைவான ட்ரோன் கேமரா, இந்த ஒளிப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்டது.

பிரிவு: காட்டுயிர் உருவப்படங்கள்

மரத் தவளைகளின் இனப்பெருக்க கொண்டாட்டம்

விடியற்காலையில் இனப்பெருக்க நேர ஒளிப்படத்தைப் பதிவு செய்வதற்காக நெஞ்சளவு தண்ணீரில் தேடித் திரிந்து, ஒளிப்படக் கலைஞர் இந்தப் படத்தை எடுத்தார். பெண் சறுக்கும் மரத் தவளைகள் பனை ஓலைகளில் ஒரே நேரத்தில் சுமார் 200 முட்டைகளை இடும்போது, ஆண் தவளைகளின் இணைசேர்வதற்கான அழைப்புகளையும் அந்தச் சூழலில் கேட்க முடியும். இந்த முட்டைகள் பொறிந்து வெளியாகும் தலைப்பிரட்டைகள் நேராக தண்ணீருக்குள் விழுகின்றன.

பிரிவு: நடத்தைகள் - நீர்நில வாழ்விகள் மற்றும் ஊர்வனங்கள்

8 வயது சிறுவன் எடுத்த மிரண்ட மான் படம்

ஜோஷுவாவுக்கு இப்போது 8 வயதாகிறது. ஆனால், லண்டனில் உள்ள ரிச்மண்ட் பூங்காவில் கடுமையான பனிப்பொழிவின்போது ஸ்டாக் எனப்படும் இந்த மான் வகையை படமெடுத்த போது, ஜோஷுவாவுக்கு 6 வயது. சிறு குழந்தையாக இருந்தபோது பொம்மை கேமராவை பயன்படுத்தத் தொடங்கியவன், இந்த ஒளிப்படத்தைப் பதிவு செய்வதற்குச் சில காலம் முன்பு தான் ஒரு சிறு கேமராவுக்கு முன்னேறினான். "அது ஏறக்குறைய பனிக் குளியல் எடுப்பதைப் போல் இருந்தது," என்கிறான் ஜோஷுவா.

பிரிவு: 10 வயது மற்றும் அதற்குக் கீழுள்ளவர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: