பாகிஸ்தான் சிறுமிக்கு இந்தியாவில் புதுவாழ்வு: இலவச சிகிச்சையால் திரும்பிய இயல்பு வாழ்க்கை

    • எழுதியவர், ரியாஸ் சுஹைல்
    • பதவி, பிபிசி செய்தியாளர், கராச்சி

"அவள் பிறந்தபோது நன்றாகத்தான் இருந்தாள். ஆனால் அவளுக்கு எட்டு அல்லது பத்து மாதங்கள் இருக்கும் போது அவள் கழுத்து சாயத்தொடங்கியது. இதற்கு முன்பு தனது சகோதரியின் கைகளில் இருந்து அவள் தவறி விழுந்துவிட்டாள். அதுதான் காரணமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். உள்ளூர் மருத்துவரிடம் கொண்டு சென்றோம். மருத்துவர் மருந்துடன் கழுத்துக்கு பெல்ட்டையும் கொடுத்தார். நாங்கள் ஏழைகள் என்பதால் மேற்கொண்டு சிகிச்சை பெற முடியவில்லை."

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தார் பாலைவனத்தில் வசிக்கும் 13 வயது அஃப்ஷீனின் தாயார் ஜமீலா பீபி இதை தெரிவித்தார். குழந்தை பருவத்திலிருந்தே அவரது மகளின் தலை இடதுபுறமாக 90 டிகிரி சாய்ந்திருந்தது.

ஆனால், இப்போது அஃப்ஷீன் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்தியாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு இந்திய மருத்துவர் அஃப்ஷீனின் வாழ்க்கையில் ஒரு 'தேவதூதன்' போல வந்தபோது இது சாத்தியமானது.

அஃப்ஷீனின் குனிந்த தலையை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அவருக்குப் புதிய வாழ்வைக் கொடுத்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக அஃப்ஷீன் இந்த நிலையில் இருந்ததால், நடக்கவும், சாப்பிடவும், பேசவும் முடியாமல் சிரமப்பட்டார்.

"சிறுவயதில் இருந்தே அவள் தரையில் படுத்துக்கொண்டே இருப்பாள். அங்கேயே சாப்பிடுவாள்," என்று அஃப்ஷீனின் தாயார் ஜமீலா பீபி தெரிவித்தார். அஃப்ஷீனின் தந்தை ஒரு மாவு ஆலையில் வேலை செய்து வந்தார். ஆனால் புற்றுநோயால் அவதிப்படும் அவர் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார்.

"சிறுவயதில் குழந்தையின் கழுத்தை நாட்டு வைத்தியர் போன்ற ஒருவரிடம் காட்டினேன். அவர் கழுத்தை திருப்பியதால் பிரச்னை அதிகரித்தது. முன்பு அவளால் கழுத்தை நகர்த்த முடிந்தது. ஆனால் அதன் பிறகு அவள் கழுத்து ஒரு பக்கமாக சாய்ந்துவிட்டது," என்று அவரது தந்தை கூறினார்.

அஃப்ஷீனுக்கு நான்கு சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள் உள்ளனர்.

மருத்துவ முகாம் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்கள்

மட்டி நகரில் வசிக்கும் 13 வயது அஃப்ஷீன், 2017 ஆம் ஆண்டு, உள்ளுரில் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாமில் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டபோது, டாக்டர் திலீப் குமார் அவளைப் பரிசோதித்தார். அதன் பிறகு அவளது நோய் மற்றும் பிரச்னைகள் குறித்த செய்திகள், ஊடகங்களில் வர ஆரம்பித்தது.

நடிகர் அஹ்சான் கான் ஃபேஸ்புக்கில் அஃப்ஷீனின் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் இந்த பெண்ணின் வலி மற்றும் நோய் குறித்து பேசியதோடு, "அஃப்ஷீனுக்கு நம் உதவி தேவை. இது தவிர அவரது தந்தைக்கும் புற்றுநோய் உள்ளது" என்று எழுதினார்.

பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி சேனலான ARY இன் 'தி மார்னிங் ஷோ' நிகழ்ச்சியின் தொகுப்பாளரான சனம் பலோச், அஃப்ஷீனையும் அவரது தாயார் ஜமீலா பீபியையும் நிகழ்ச்சிக்கு அழைத்தார். அதன் பிறகு அஃப்ஷீனின் வேதனை மற்றும் நோய் குறித்து சமூக ஊடகங்களில் நிறைய பேச்சு தொடங்கியது.

ஆரம்ப உதவிக்குப் பிறகு காணாமல் போன சிந்து அரசு

சமூக வலைதளமான ட்விட்டரில் அஃப்ஷீனின் படங்கள் வைரலானபோது, பிடிஐ கட்சியில் இருந்து பிபிபியில் இணைந்த தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாஸ் பலோச், "அஃப்ஷீனின் முழுமையான சிகிச்சையை சிந்து அரசு மேற்கொள்ளும்," என்று ட்விட்டரில் ஒரு செய்தியை எழுதினார். இதையடுத்து ஆகா கான் மருத்துவமனையில் அஃப்ஷீன் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

பிபிபி தலைவர் ஃபர்ஹல் தால்பூர் முழு விஷயத்தையும் கேட்டறிந்திருப்பதாகவும், இப்போது அஃப்ஷீனின் முழு சிகிச்சையையும் அவர் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு வருவதாகவும் மருத்துவமனையில் பிபிசியிடம் நாஸ் பலோச் கூறினார்.

அஃப்ஷீன் ஆகா கான் மருத்துவமனையில் சிறிது காலம் தங்கியிருந்தார். அதன் பிறகு அவளது பெற்றோர் அவளை அழைத்துச் சென்றுவிட்டனர். "இந்த அறுவை சிகிச்சையின் போது அவர் உயிர் பிழைக்க 50 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக ஆகா கான் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்," என்று அஃப்ஷீனின் சகோதரர் யாகூப் கம்பர் பிபிசியிடம் கூறினார்.

அஃப்ஷீனின் பெற்றோர் இதைப் பற்றி சிந்திக்க மருத்துவர்களிடம் நேரம் கோரினர். அதன் பிறகு தங்கள் மற்றொரு மகளின் திருமணத்தில் மும்முரமாகிவிட்டனர். இதனால் அஃப்ஷீனின் சிகிச்சையை முடிக்க முடியவில்லை.

"தங்கையின் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தாரிடம் பேசி சம்மதம் பெற்றேன். பின்னர் PPP தலைவர்களையும், சிந்து அரசையும் தொடர்பு கொண்டேன். ஆனால் சாதகமான பதில் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தேன்," என்று அஃப்ஷீனின் சகோதரர் குறிப்பிட்டார்.

'தேவர்கள் போல வந்த இந்திய மருத்துவர்கள்'

ஒரு பிரிட்டிஷ் செய்தித்தாளின் செய்தியாளரான அலெக்ஸாண்ட்ரியா தாமஸ், 2019 இல் அஃப்ஷீன் கம்பரின் உடல்நிலை மற்றும் அவரது குடும்பத்தின் நிதி நிலை குறித்து ஒரு செய்திக்கதையை வெளியிட்டார். அதன் பிறகு அஃப்ஷீன் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார்.

"ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் என்னைத்தொடர்பு கொண்டு, அஃப்ஷீனை அங்கு அழைத்து வர வேண்டும் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கராச்சியில் உள்ள தாருல் சுகூன் சன்ஸ்தாவைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்," என்று யாகூப் தெரிவித்தார்.

"நாங்கள் தாருல் சுகூனுக்குச் சென்றோம். பாஸ்போர்ட்டை பெறுமாறு அவர்கள் கூறினர். அதன் பிறகு விசா செயல்முறை தொடங்கியது. இந்த நேரத்தில், கோவிட் தொற்றுநோய் உலகில் பரவியது. எங்கள் பயணம் அங்கேயே நின்றுவிட்டது."

"கடந்த ஆண்டு, அலெக்ஸாண்ட்ரியா தாமஸ், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள டாக்டர் கோபாலன் கிருஷ்ணனைத் தொடர்புகொண்டார். அவர் உங்களுடன் பேசுவார் என்றும் கூறினார். பின்னர் டாக்டர் எங்களிடம் ஸ்கைப்பில் பேசினார். நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள். இங்கே இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று சொன்னார்," என்று யாகூப் குறிப்பிட்டார்.

" அறுவை சிகிச்சையின் போது அஃப்ஷீனின் இதயம் துடிப்பதை நிறுத்தலாம். நுரையீரல் வேலை செய்வதை நிறுத்தலாம் என்றும் அவர் கூறினார். மேலும் நாங்கள் பார்ப்பதற்கு சில யூடியூப் வீடியோக்களையும் அனுப்பினார்" என்றார் யாகூப் கம்பர்.

"நாங்கள் மருத்துவ காரணங்களின் அடிப்படையில் விசாவிற்கு விண்ணப்பித்தோம். எங்களுக்கு விசா கிடைத்தவுடன் நாங்கள் டெல்லிக்கு புறப்பட்டோம். எங்களுக்கு பாகிஸ்தான் அரசோ அல்லது வேறு எந்த அமைப்போ உதவவில்லை. வெளிநாட்டிலிருந்து மக்கள் எங்களுக்கு உதவினார்கள். இதன் மூலம் நாங்கள் கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா வந்தோம்."

இந்தியாவில் அறுவைசிகிச்சை மற்றும் உதவிக்கு முறையீடு

யாகூப் கம்பர் நிதி திரட்டும் இணையதளமான 'Go Fund for Me' இல் உதவி கோரினார். முதல் கட்டமாக அவருக்கு 29 ஆயிரம் டாலர்கள் கிடைத்தது. இந்தியாவில் சிகிச்சை மற்றும் செலவுக்காக மீண்டும் அவர் முறையிட்டார்.

அஃப்ஷீனின் சாய்ந்த கழுத்தில் ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்கு முன் இரண்டு சிறிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இக்காலகட்டத்தில் தனக்கு பல மருத்துவர்களுடன் தொடர்பு இருந்ததாகவும், ஆனால் டாக்டர் கிருஷ்ணனைப் போன்ற சிறந்த மற்றும் கருணையுள்ளம் கொண்ட மருத்துவரைப் பார்த்ததில்லை என்றும் யாகூப் கம்பர் கூறுகிறார். அவரது முயற்சியால், இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருந்தது

அஃப்ஷீனை சந்தித்த பிறகு, அவளுக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அவள் நீண்ட காலம் வாழ முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது என்று அறுவை சிகிச்சை வெற்றியடைந்த பிறகு, டாக்டர் கிருஷ்ணன் ஊடகங்களிடம் கூறினார். "உலகில் இதுபோன்ற ஒரு பாதிப்பு ஏற்பட்டது அநேகமாக இது முதல்முறையாக இருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன்," என்றார் அவர்.

மூளை பிரச்னை காரணமாக ஆறாவது வயதில் நடக்கவும் பேசவும் கற்றுக்கொண்ட அஃப்ஷீனின் கழுத்து, ஒரு வயதில் இருந்தே சாயத்தொடங்கியது.

கழுத்து சிறிது நேரம் நேராக ஆவதற்காக முதலில் ஹேலோ க்ராவிட்டி ட்ராக்ஷனை அவர் பயன்படுத்த வேண்டியிருந்தது.

டாக்டர் மனோஜ் ஷர்மா, டாக்டர் ஜெயலலிதா, டாக்டர் சேத்தன் மெஹ்ரா மற்றும் டாக்டர் பானு பந்த் ஆகியோர் அடங்கிய டாக்டர் கிருஷ்ணன் தலைமையிலான குழு, பிப்ரவரி 28 அன்று ஆறு மணி நேர அறுவை சிகிச்சையின் போது அஃப்ஷீனின் கழுத்தை அவரது முதுகு தண்டுவடத்தில் இணைத்தது. இதற்குப் பிறகு, கழுத்தை நேராக வைத்திருக்க ஒரு தடி மற்றும் திருகை பயன்படுத்தி கழுத்து,செர்வைக்கல் முதுகெலும்புடன் இணைக்கப்பட்டது.

அஃப்ஷீன் புன்னகைக்கும் படத்தை ட்விட்டரில் பதிவிட்ட யாகூப் கம்பர், "இந்தப் புன்னகைக்கான பெருமை, அறுவை சிகிச்சை மூலம் கழுத்தை நேராக்கிய டாக்டர் கோபாலன் கிருஷ்ணனுக்குச் சேரும்" என்று தலைப்பு அளித்துள்ளார்.

"நீங்கள் மிகவும் நல்லவர். எல்லா ட்ரீட்மென்ட்டும் இலவசம். எங்களுக்காக தேவதூதனைப்போல வந்துள்ளீர்கள் என்று அவரிடம் நாங்கள் சொன்னோம். டாக்டர் கிருஷ்ணன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஸ்கைப்பில் அஃப்ஷீனை பரிசோதிப்பார்."

இடையூறுகள் மற்றும் சிரமங்கள் இருந்தபோதிலும், யாகூப் மனதை தளரவிடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தார். பாகிஸ்தானின் பின்தங்கிய பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் தனது சகோதரிக்கு அறுவை சிகிச்சை செய்வதில் இறுதியாக வெற்றியடைந்தார். இப்போது அஃப்ஷீன் சிரிக்கிறாள், நன்றாக பேசுகிறாள் என்று யாகூப் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :