You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தது எப்படி?
திரைக்கலைஞர் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு, நுரையீரலில் பிரச்னை ஏற்பட்டிருந்தது. இதுதொடர்பான சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனில்லாத நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஏழு மணியளவில் அவர் உயிரிழந்தார்.
பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை கடந்த 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார் மீனா. இந்தத் தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்குப் பிறகு கடுமையான நுரையீரல் பாதிப்பால் ஆக்சிஜன் சிலிண்டருடன் சிகிச்சைபெற்று வந்தார்.
ஒரு கட்டத்தில், அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்ற நிலையில், அதற்காகப் பதிவுசெய்யப்பட்டது. இதற்குப் பிறகு இருதயத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. மாற்று உறுப்புகள் கிடைக்காத நிலையில், நேற்று மாலை வித்யாசாகர் உயிரிழந்தார்.
இதற்கிடையில், அவரது மரணத்திற்கான காரணம் குறித்து பல்வேறு செய்திகள் வலம்வரும் நிலையில், சக திரைக்கலைஞரான குஷ்பு விளக்கமொன்றை அளித்தார்.
"ஊடகங்கள் சற்று பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மீனாவின் கணவருக்கு 3 மாதங்களுக்கு முன்பாக கோவிட் ஏற்பட்டது. அதனால், அவரது நுரையீரலின் நிலை மோசமடைந்தது. கோவிட் காரணமாக அவர் மரணமடைந்ததாகக் கூறி தவறான செய்தியை பரப்பாதீர்கள். அச்சத்தை ஏற்படுத்தாதீர்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மீனாவின் கணவர் உடலுக்கு ரஜினிகாந்த், சரத்குமார், குஷ்பு, சினேகா, பிரசன்னா, ரகுமான், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இன்று பிற்பகலில் வித்யாசாகரின் உடலுக்கு அவரது மனைவி மீனா, குழந்தை நைனிகா உள்ளிட்டோர் இறுதிச் சடங்குகளைச் செய்த பிறகு, அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்