உளவியல்: பாராட்டுகளைவிட விமர்சனங்களின் நினைவுகள் ஆயுள் முழுதும் நம்மோடு வருவது ஏன்?

நம்மில் பெரும்பாலானோர் அன்றாட வாழ்க்கையில் அவமானங்கள், கேலிகள், மோசமான கருத்துக்களை எதிர்கொண்டிருப்போம். ஆனால், அப்படி மலைபோல் குவியும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நமக்கு சொல்லித் தரப்படவில்லை.

குழந்தைகளாக இருக்கும்போது நம்மிடம் ஒருவர் நம்மை தாக்கினால் மட்டுமே நமக்கு வலி ஏற்படும், வார்த்தைகள் நம்மை காயப்படுத்தாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால், நாம் வளரும்போது ஏற்படும் அனுபவங்களின் வாயிலாக, இது உண்மைக்கு அப்பாற்பட்டது என்பதையும் உடலில் ஏற்படும் காயங்கள் சிறிது நாட்களில் ஆறிவிடலாம், ஆனால், எதிர்மறை கருத்துக்கள் நம் ஆயுள் முழுதும் ஆறாத வடுவாக இருக்கும் என்பதை பெரியவர்களானபின் புரிந்துகொண்டிருப்போம்.

பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களால் அமைதியாக கூறப்படும் விமர்சனமாக இருந்தாலும் சரி அல்லது நண்பர் அல்லது காதலர்/காதலியுடனான கடும் விவாதத்தின்போது வீசப்படும் கொடூரமான கருத்தாக இருந்தாலும் சரி, அவற்றின் எதிர்மறை விளைவுகளால், நேர்மறை கருத்துக்களை காட்டிலும் விமர்சனங்களை நன்றாக நினைவில் வைத்துக்கொள்கிறோம்.

எதிர்மறை உணர்ச்சிகளின் விளைவுகள், நேர்மறையானவற்றைவிட நம்மை அதிகம் பாதிப்பதற்கு நாம் எதிர்மறை சார்புடன் இருப்பது காரணமாக இருக்கிறது. இது அச்சுறுத்தல்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தவும் ஆபத்துக்களை பெரிதுபடுத்தவும் செய்கிறது என, குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூக உளவியலாளரும் 'தி பவர் ஆஃப் பேட்: அண்ட் ஹவ் டூ ஓவர்கம் இட்' என்ற புத்தகத்தின் இணை ஆசிரியருமான ராய் பௌமெய்ஸ்டெர் கூறுகிறார்.

இந்த உலகின் இருண்ட பக்கத்தில் கவனம் செலுத்துவது அழுத்தம் தரக்கூடியதாக இருந்தாலும், இயற்கை பேரிடர்கள் முதல் கொள்ளைநோய்கள், போர்கள் என அனைத்தையும் எதிர்கொண்டு, அதற்கு தகுந்த முறையில் தயார்நிலையில் இருப்பதற்கும் மனிதர்களுக்கு அவை உதவியாக இருந்திருக்கின்றன.

ஆபத்துக்கள் மீதான ஆர்வம்

ஆபத்துக்கள் குறித்த ஆர்வம் கொண்டவர்களாகவே மனிதர்கள் உள்ளனர். பிறந்த எட்டு மாதங்களான குழந்தைகள், ஆபத்து இல்லாத தவளையைவிட, பாம்பை பார்ப்பதற்குத்தான் ஆர்வம்கொள்ளும். 5 வயதில் மகிழ்ச்சியான மனிதர்களைவிட கோபமான அல்லது பயம்மிக்க முகங்களை காணவே முக்கியத்துவம் அளிக்கும்.

பிரச்னைகளுக்கு முதலில் கவனம் செலுத்துவது ஒரு சிறந்த உத்தியாக இருக்கிறது என ராய் பௌமெய்ஸ்டெர் கூறுகிறார். "எதிர்மறையான பிரச்னைகளை முதலில் சமாளித்து அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். அவற்றால் ஏற்படும் விளைவுகளை நிறுத்த வேண்டும்" என்கிறார் அவர்.

எதிர்மறை தாக்கத்தை எவ்வாறு கடப்பது என்பதை நாம் கற்றுக் கொள்ளும் வரை, அது உலகத்தைப் பற்றிய நமது பார்வையையும் அதற்கு நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதையும் சிதைக்கிறது என்று அவர் நம்புகிறார்.

கெட்ட செய்திகள் மீது ஈர்ப்பு

உதாரணமாக, பார்வையாளர்களை அதிகம் ஈர்ப்பதற்காகவும், செய்தித்தாள்களை அதிகம் விற்பதற்காகவும் பத்திரிகையாளர்கள் அதிகமாக கெட்ட செய்திகளையே நோக்கிச் செல்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது பாதி உண்மையாக இருக்கலாம். ஆனால், பேரழிவு கதைகளை நோக்கி வாசகர்கள் இயற்கையாகவே கவரப்படுவதாகவும் அதனை மற்றவர்களிடத்தில் பகிர்ந்துகொள்வதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நடப்பதற்கு சாத்தியமில்லாத ஆபத்துக்கள் குறித்த வதந்திகள், நன்மை பயக்கும் வதந்திகளை விட எளிதாக மக்களிடையே பரவுகின்றன.

கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் பங்கேற்றவர்கள் எந்த செய்திகளுக்கு அதிக நேரம் செலவழிக்கின்றனர் என கண்காணிக்கப்பட்டது. அதில், பெரும்பாலும் அவர்கள் நேர்மறையான அல்லது நடுநிலையான செய்திகளைவிட ஊழல்கள், பின்னடைவுகள், பாசாங்குத்தனம் உள்ளிட்ட கெட்ட செய்திகளையே அதிகம் தேர்ந்தெடுத்து படிக்கின்றனர். நடப்பு நிகழ்வுகள் மற்றும் அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள், அவற்றிலும் கெட்ட செய்திகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அவர்களிடம் கேட்டபோது தாங்கள் நல்ல செய்திகளையே விரும்புவதாக கூறினார்கள்.

செய்தித்தாள்களில் நாம் எந்த செய்திகளை படிக்கிறோமோ அல்லது தொலைக்காட்சிகளில் எதனை பார்க்கிறோமோ அது நம் பயத்தை அதிகப்படுத்தும். உதாரணமாக தீவிரவாதம் குறித்த பயத்தை சொல்லலாம். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் தீவிரவாத குழுக்களால் கொல்லப்பட்டவர்கள், அதே காலகட்டத்தில் தங்களின் குளியல் தொட்டிகளில் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கையைவிட குறைவானது என, ராய் பௌமெய்ஸ்டெர் தன் புத்தகத்தில் கூறுகிறார்.

ஒரு சிறிய கெட்ட அனுபவம் அந்த நாள் முழுவதிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மகிழ்ச்சியான உணர்வுகளைவிட எதிர்மறை உணர்ச்சிகள் நீண்டகாலம் நீடிக்கும் என்பதற்கான ஆதாரங்களை பகுப்பாய்வு செய்துள்ளார், செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் பிரெயின் சயின்சஸ் துறை பேராசிரியர் ராண்டி லார்சென். நல்ல சம்பவங்களைவிட மோசமான சம்பவங்கள் குறித்து நாம் அதிக நேரம் சிந்திப்பதாக அவர் கண்டறிந்துள்ளார்.

நம் காதலர்/காதலியிடமிருந்தோ, குடும்பத்தினர் அல்லது நண்பரிடமிருந்தோ வரும் காயம் தரும் கருத்துக்களில் மூழ்காமல் இருப்பது கடினமானது. "எனக்குத் தெரியாதவர்களிடமிருந்து வரும் எதிர்மறை கருத்துக்களைவிட நான் விரும்பும் நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்து வரும் எதிர்மறை கருத்துக்கள் குறித்து அதிகம் சிந்திப்பேன்" என்கிறார், ராய் பௌமெய்ஸ்டெர். இது, நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் நம்மிடம் எப்படி நடந்துகொள்கின்றனர் என்ற நம்முடைய எதிர்பார்ப்புகளால் ஏற்படுகிறது.

சில நிகழ்வுகளில், நமக்கு விருப்பமானவர்களிடமிருந்து வரும் எதிர்மறை கருத்துக்கள், நீண்டகால அளவில் மனதளவில் காயங்களை ஏற்படுத்தி, மனக்கசப்புகளையும் ஏற்படுத்தி அந்த உறவு முறியும் அளவுக்கு சென்றுவிடுகிறது. "ஒரு உறவு நீடிக்குமா என்பதை ஒருவருடைய பார்ட்னர் செய்யும் நல்ல செயல்களால் தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக ஒரு பிரச்னைகளுக்கு அவர்கள் செய்யும் அழிவுகரமான எதிர்வினைகளே தீர்மானிக்கிறது," என, அமெரிக்காவின் கெண்டக்கி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தம்பதிகளைப் பின்தொடர்ந்த மற்றொரு ஆய்வில், திருமணத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்திய அளவு அவர்கள் பிரிந்துவிடுவார்களா என்பதைக் கணித்துள்ளது, விவாகரத்து செய்யும் தம்பதிகளிடையே எதிர்மறையின் அளவுகள் அதிகமாக இருந்துள்ளன.

சமூக ஊடகங்களின் விளைவுகள்

விமர்சனம் பெரிய அளவில் வரும்போது பெரிதளவில் பாதிக்கிறது, இதற்கு சமூக ஊடகம் களமாகிறது. 2019ஆம் ஆண்டில் அதிகமான விற்பனையான ஆல்பத்தை வெளியிட்டிருந்தாலும் தான் சமூக ஊடகங்களில் கமெண்ட்டுகளை பார்ப்பதில்லை என, அமெரிக்க பாடகி பில்லி எல்லிஷ் பிபிசி பிரேக்ஃபாஸ்ட் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். "அவை என் வாழ்வை அழிக்கிறது" என அவர் தெரிவித்தார். "நீங்கள் எவ்வளவு அதிகமாக கூலான விஷயங்களை செய்கிறீர்களோ அந்தளவுக்கு அவற்றை வெறுப்பவர்கள் அதிகமாவார்கள். முன்பைவிட இது இப்போது மோசமாகியுள்ளது" என்றார் அவர்.

சமூக ஊடகத்திலிருந்து வரும் எதிர்மறை கருத்துகளை சமாளிப்பதற்கான திறன் நம்மிடம் இல்லை என, ராய் பௌமெய்ஸ்டெர் எச்சரிக்கிறார். ஏனெனில், நமக்கு நெருக்கமானவர்களிடமிருந்து வருவதை எதிர்கொள்ளும் வகையிலேயே நம் மூளை பரிணமித்துள்ளது, நாம் முன்பின் அறியாத நூற்றுக்கணக்கான பேரிடமிருந்து வருவதை அல்ல.

எதிர்மறை கருத்துக்களை பெறுதல், அதனை உள்வாங்குதல் உள்ளிட்டவை மன அழுத்தம், பதற்றம், எண்ணக்குலைவு, வருத்தம் உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் என்கிறார், பிஹேவியரல் சயிண்டிஸ்ட் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸின் விசிட்டிங் ஃபெலோ லூசியா மச்சியா கூறுகிறார். "எதிர்மறை உணர்ச்சிகள் நம் உடலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், உடல் வலியை இன்னும் அதிகப்படுத்தும்" என்றும் அவர் கூறுகிறார்.

என்ன செய்யலாம்?

நமக்கு வயதாகும் போது எதிர்மறை எண்ணங்களைவிட பிரகாசமான பக்கங்களை நோக்கி சிந்திப்போம் என்பது குறித்து பல ஆராய்ச்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம் "நேர்மறை சார்பு" என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நடுத்தர வயதில் நேர்மறையான விஷயங்களை நினைவில்கொள்ள தொடங்குவோம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இளம் வயதில் தோல்விகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வோம் ஆனால், வயதாகும்போது அதற்கான தேவை குறைகிறது என, ராய் பௌமெய்ஸ்டெர் கூறுகிறார்.

எனினும், எதிர்மறை கருத்துக்கள் எந்த வயதிலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம், குறிப்பாக நாம் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கும்போது.

குறிப்பிட்ட குணாதிசயங்களுடன் உள்ளவர்கள் எதிர்மறை எண்ணங்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது பெரும் விவாதத்திற்குரிய ஒன்று என்கிறார், லூசியா மச்சியா.

"எல்லோருக்கும் எதிர்மறை கருத்துக்கள் வருகின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவற்றை சமாளிப்பதற்கு உதவலாம், நமது மனநலத்தை பாதுகாப்பதற்கான நல்ல உத்தியாக அது இருக்கலாம்" என்கிறார் அவர். "மற்றொரு பயனுள்ள உத்தி என்னவென்றால், எதிர்மறை கருத்துகள் அவற்றைப் பெறுபவரை விட அவற்றை உருவாக்கும் நபருடன் அதிகம் தொடர்புடையது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார் மச்சியா.

(பிபிசி ஃபியூச்சர் பகுதியில் சாரா கிரிஃபித்ஸ் எழுதியது)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: