காதல்: பிரிந்து பிரிந்து சேரும் காதலர்களுக்கு பின்னால் இருக்கும் உளவியல் என்ன?

"நம் இருவருக்கும் இனிமேல் ஒத்துவராது" என்று முகத்தில் கண்ணீர் வழிந்தோடியபடி, ஜார்ஜிடம் சொன்னார் யேன்ஸ். இதைச் சொல்லிவிட்டு இதயம் நொறுங்க, விசும்பலுடன் வீடு திரும்பினார் அவர். ஆனால், இது முதன்முறையல்ல. கடந்த இரண்டு மாத காலத்தில் இது மூன்றாவது முறை. இந்த முறை யேன்ஸ் திரும்பி வரப்போவதில்லை என்றும் சொல்லியிருந்தார்.

"பழைய நினைவுகளைக் கிண்டிவிட்டு அதில் உழலுவதென்பது மனித வாழ்வில் இயல்பானது. சொல்லப்போனால், மூன்றில் இரண்டு பங்கு கல்லூரி மாணவர்கள் பிரிந்து சேர்ந்த காதலுடன்தான் இருக்கின்றனர். இதில் பாதிப்பேர் தங்கள் காதல் முறிவுக்குப் பிறகும் உடலுறவைத் தொடர்கின்றனர்.

திருமணத்துக்குப் பிறகும், உறுதிமொழிகள் பரிமாறப்பட்ட பிறகும் கூட, தன் முந்தைய காதலின் நினைவுகள் விவகாரத்திலிருக்கும் தெளிவின்மை தொடரத்தான் செய்கிறது. திருமணமான தம்பதிகளில் ஐந்தில் ஒரு தம்பதி பிரிந்து மீண்டும் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

உலகில் ஏராளமான கவிதைகளுக்கும், நாவல்களுக்கும், சினிமாக்களுக்கும் அடி நாதமாக அமைந்த இந்த - பிரேக் அப் செய்துவிட்டு மன்னிப்பு தேடும் - உணர்ச்சி, நம் உளவியலில் ஆழப்பதிந்துள்ளது என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான். ஆனால், ஏன் இது நடக்கிறது? முறிந்து போன ஒரு உறவை மீண்டும் மீண்டும் பரிசீலிப்பது ஏன்?

மூளையை ஸ்கேன் செய்யும்

"முதல் முதலாக உறவில் முறிவு ஏற்படும்போது, மனம் போராட்டமாக உணர்கிறது. யார் நிராகரித்தார்களோ அவரை மீண்டும் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் மனம் துடிக்கிறது" என்கிறார், கின்ஸ்லீ இன்ஸ்டிட்யூட் நரம்பியல் நிபுணரான ஹெலென் ஃபிஷர்.

ஹெலெனும் அவருடனான விஞ்ஞானிகளும் சுமார் 15 பேரிடம் ஒரு ஆய்வை நடத்தினர். மூளையை ஸ்கேன் செய்யும் (functional magnetic resonance imaging -fMRI) அந்த ஆய்வின்மூலம், அவர்களின் மூளைகள் கண்காணிக்கப்பட்டன.

அவர்களிடம், அவரவர்களது முன்னாள் காதலர்களின் புகைப்படங்கள் வழங்கப்பட்டன. அதைப் பார்க்கும்போது, அவர்களது மூளையில் உணர்ச்சியுடனும், காதலுடன் தொடர்புடைய மகிழ்ச்சியான சங்கடமான எல்லா நினைவுகளோடும் தொடர்புள்ள பகுதிகள் புத்துயிர் பெற்றன.

நிராகரிப்புக்குப் பிறகு, நீங்கள் அவர்களை காதலிப்பதை நிறுத்துவதில்லை. மாறாக, இன்னும் அதிகமாகக் காதலிக்கிறீர்கள் என்கிறார் ஹெலென்.

படங்களைப் பார்க்கும் அந்த நேரத்தில், நிராகரிக்கப்பட்ட காதலர்களின் உடலில் டோப்பமைன் மற்றும் நோர்ப்ன்ஃப்ரைன் ஆகிய ஹார்மோன்கள் அதிகரிக்கின்றன. மனித உடலில் அதிகரிக்கும் மன அழுத்தத்துடன் தொடர்புடையது இந்த நோர்பைன்ஃப்ரைன். இதனை `விரக்திக்கான ஈர்ப்பு` என்று சொல்கிறார் ஹெலென்.

நிராகரிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலரிடமும், செயல்பாட்டு நிலையில் இருப்பது நியூக்ளியஸ் அக்யூம்பென்ஸ் ஆகும். இது ஒரு மனிதருடைய, அதீத பற்றுடன் (அடிமையாகும் அளவுக்கு) தொடர்புடைய முக்கியமான மூளைப் பகுதி.

மொத்தத்தில், மீண்டும் இணைய வேண்டும் என்ற எண்ணம் எப்போது இருக்கிறது. தன் ஆய்வில் கலந்து கொண்டவர்கள் எல்லோருமே "தங்கள் பிரிந்து போன இணையைப் பற்றி மிகமிக அதிகமாக சிந்தித்தார்கள். அத்துடன் ஒரு உணர்ச்சிவசமான மறுசந்திப்பை எண்ணியும் ஏங்கினர்" என்கிறார் ஹெலென்.

பற்று வைத்தலில் மூன்று வகை

"ஒரு ஜோடி ஏராளமான குழப்பங்களை எதிர்கொண்டு பிரிந்தபிறகும் மீண்டும் தான் காதலித்துக்கொண்டிருப்பதாகவே கருதிக்கொள்கிறார்கள். எனவே இங்கு பிரச்னைகளோ முரண்களோ சரி செய்யப்பட்டனவா என்பது பொருட்டே அல்ல. வெறுமனே பிரிவு மட்டும் ஏற்பட்டால், தாம் மெல்ல மெல்ல சரியாகிவிட்டதாக உணர்ந்து, மனித மனம் மீண்டும் உறவைத் தொடர்கிறது" என்கிறார், பிரிந்து பிரிந்து சேரும் உறவுகள் குறித்து ஆய்வு செய்த டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசியர் ரீன் டெய்லி.

உளவியலில் மிகவும் பிரபலமான பற்றுதல் விதி (Attachment theory) குறித்தும் ரீன் டெய்லி பேசுகிறார். அதன்படி, பற்று வைத்தலில் மூன்று வகைகள் உண்டு. பாதுகாப்பான பற்று, பதற்றத்துடன் கூடிய பற்று, நிராகரிப்புடன் கூடிய பற்று. முதல் வகையைப் பொறுத்தவரை, ஆரோக்கியமான உணர்ச்சிமிக்க உரையாடல்கள் இடம்பெறும். ஆனால், இரண்டாவது வகையில், சுய சந்தேகங்கள் அதிகமாகி நெருக்கத்தை மீட்டெடுக்க பெரும் முயற்சி செய்பவர்களாக இருப்பர். ஆனால், மூன்றாவது வகையில், தன்னளவில் தன்னிறைவு பெற்ற இவர்கள் உணர்ச்சிவசமான உரையாடல்களுக்கு கிடைக்கமாட்டார்கள். அதேசமயம், நெருக்கத்தை தவிர்க்கும் தன் பழக்கத்துக்காக காரணங்களுடன் வாதிடுபர்களாகவும் இருப்பர்.

இந்த விதியின்படி, இரண்டு மற்றும் மூன்றாம் வகையினர் ஒருவரையொருவர் ஈர்த்துக்கொண்டு, பின்னர் முழுமையாக பிரியவும் முடியாமல் சிரமப்படுவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு ஆய்வு ரீதியிலான எந்த ஆதாரங்களும் இல்லை.

எப்படி சரி செய்வது?

உடைந்த மனதை சரிசெய்வது என்பது போதை பழக்கத்திற்கு சிகிச்சையளிப்பது போன்றது. "நீங்கள் அவர்களின் நினைவான பொருட்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களது சமூக ஊடகப் பக்கங்களை பார்ப்பதை நிறுத்துங்கள், அவர்களுடன் உங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று ஹெலென் கூறுகிறார். இதற்கு no-contact rule என்று பெயர்.

இந்த விதி "சில அறிவியல் அடிப்படைகளைக் கொண்டுள்ளது" என்றும் மியாமி பல்கலைக்கழக பேராசிரியர் ப்ரோகார்ட் கூறுகிறார். அதாவது, காலப்போக்கில் கோபம், துரோகம் மற்றும் பல கசப்பான உணர்ச்சிகள் குறைகின்றன என்கிறார் அவர்.

"ஒருவரை பிரேக்-அப்பில் இருந்து மீட்க, பயிற்சியாளர்களும் உண்டு. ஆனால், அவர்களின் பரிந்துரைகள் அறிவியல் ரீதியாக நம்பத்தகுந்ததாக இருக்காது. "பிரேக்-அப் பயிற்சியாளர்களுக்கு நரம்பியல், உளவியல், அறிவாற்றல் அறிவியல், தத்துவம் அல்லது சமூகப் பணி போன்ற தொடர்புடைய துறைகளில் சரியான பயிற்சியோ அல்லது கல்வியோ கூட இருக்காது" என்கிறார் ப்ரோகார்ட்.

பிரேக்-அப் பயிற்சிக்காக பணத்தைச் செலவழிப்பதற்குப் பதிலாக, சரியான தகவல்கள் கொண்ட, உறவுகள் குறித்த இலக்கியங்களைப் படிக்குமாறும் ப்ரோகார்ட் அறிவுறுத்துகிறார். ஆனால், ஒருவரை மீண்டும் வெல்வதற்காக உங்கள் அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிடுவதை குறித்தும் அவர் எச்சரிக்கிறார்.

உங்கள் முன்னாள் காதலருடன் நீங்கள் மீண்டும் இணைவதற்கு உத்திகள் எதுவும் இல்லை. ஆனால், தோல்வியுற்ற உறவில் என்ன தவறு நடந்தது என்பதைப் பற்றி நேர்மையுடன் பேச வேண்டும் என்கிறார் அவர்.

தங்கள் முந்தைய காதலுடன் சமரசம் செய்ய முடியாதவர்களுக்கு, மூளை விரக்தி நிலைக்குச் செல்லலாம். அதன்பிறகுதான், அந்த மனநிலையை ஏற்றுக்கொள்வது, பின் அலட்சியப்படுத்துவது, பின்னர் மீள்வது போன்றவை ஒன்றன்பின் ஒன்றாக நிகழும் என்கிறார் ஹெலென்.

"நீங்கள் தீவிர வலி மற்றும் கவலையை அனுபவிப்பீர்கள், ஆனால் இறுதியாக அதிலிருந்து மீள்வீர்கள்," என்று நிறைவு செய்யும் ஹெலென், "உங்களைத் தூக்கி எறிந்த நபரை நீங்கள் ஒருபோதும் மறப்பதில்லை. ஆனால், நீங்கள் அதிலிருந்து மீண்டு புதியவரை நேசிப்பீர்கள்" என்றும் தெரிவிக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: