You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தற்கொலை எண்ணத்துக்கான காரணம் என்ன? விடுபடுவது எப்படி?
- எழுதியவர், ரம்யா சம்பத்
- பதவி, மனநல மருத்துவர்
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
செப்டம்பர் 10-ஆம் நாள். உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
முன்னோக்கியே நகர்கின்ற உங்கள் வாழ்க்கையை சற்றே பின் நோக்கியும் யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு தெரிந்த யாரையாவது தற்கொலையால் இழந்ததுண்டா? இல்லை என்றாலும், நாளிதழ்களிலும் செய்திகளிலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற விஷயத்தை அவ்வப்போதுகேட்டு வருந்தியதுண்டா?
தற்கொலைகளை தடுக்க முடியுமா? எதனால் இந்தத் துயரச் சம்பவங்கள் ஏற்படுகின்றன? இந்த கேள்விகளை குறித்து சிந்திக்கவும், உங்களுடைய பங்கை எப்படி வெளிப்படுத்துவது என்று சொல்வதுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
23 வயதான விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அவருடைய கணவரின் சர்க்கரை நோய் மாத்திரைகளை மொத்தமாக விழுங்கிவிட்டார். உடலின் சர்க்கரையின் அளவு அபாயகரமாக குறைந்து, அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு மனநல மருத்துவராக அவருடைய மனோநிலையை ஆராய நான் முற்பட்டேன். இளம் வயதிலேயே தாயை இழந்த அவர் (தாயும் குடும்ப சூழ்நிலை காரணமாக தூக்கிட்டு உயிரிழந்ததாக கூறினர்), தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து, பட்டப்படிப்பை முடித்து, தனியார் கம்பெனியில் வேலையும் செய்து வந்தார். கலகலப்பாக இருக்கும் அவர், சின்ன சின்ன ஏமாற்றங்களை எளிதாக எடுத்துக் கொள்ள சிரமப்பட்டார். அவருக்கு அலுவலகத்தில் ஆறுதலாக இருந்த சிவாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விமலாவின் தந்தைக்கு இதில் உடன்பாடு இல்லை. அலுவலகத்தில் ஏமாற்றங்கள், குடும்ப சிக்கல்கள் என பலவும் அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. தனக்கென்று யாரும் இல்லை என்ற எண்ணம், நாம் தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு அவரை நிம்மதியிழக்கச் செய்தது.
தூக்கமின்மை, அழுகை, அலுவலகத்தில் கவனக்குறைவு போன்ற மனஅழுத்தத்தின் இதர அறிகுறிகளும் அவரை விட்டுவைக்கவில்லை. 'நான் எல்லோருக்கும் பாரமாகி விட்டேன்" என்று தோன்றிய எண்ணம், 'நான் இனி வாழக்கூடாது" என்ற தற்கொலை எண்ணமாக மாறியது. அதன் விளைவுதான், கணவரின் மாத்திரைகளை விழுங்கி அவர் உயிரை மாய்த்துக் கொள்ள எடுத்த இந்த விபரீத முடிவு.
உலகில், ஒரு வருடத்தில் 8,00,000 தற்கொலைகள் நிகழ்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு 40 நொடிகளில் நாம் ஒரு உயிரை தற்கொலையினால் இழக்கின்றோம். அந்த உயிர் ஒரு குழந்தையாகவோ, ஆசிரியராகவோ, மனைவியாகவோ இருக்கலாம். தற்கொலை முயற்சிகளோ அதை விட 25 மடங்கு அதிகமாக இருக்கின்றன என்கிறது ஆய்வு.
தற்கொலைகள் ஏன் நிகழ்கின்றன?
பரீட்சையில் தோல்வி, அதனால் ஒரு மாணவன் தற்கொலை செய்கிறான் என்றால், அந்த சூழ்நிலையில் இருந்த மற்ற மாணவர்கள் ஏன் அந்த விபரீத முடிவை எடுக்கவில்லை. எது அவர்களை காப்பாற்றியது?
தற்கொலைகள் ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போல தோன்றினாலும், உண்மை அதுவல்ல. ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் உண்டு. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது. மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களை தற்கொலையால் இழந்தால், அவர்களுக்கு அதே எண்ணம் ஏற்படுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்து உண்டு. இதைத்தவிர, உளவியல் ரீதியான பிரச்சனைகள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம்.
உலகளவில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம். நம்முடைய பாட்டி, தாத்தாக்கள் பெரிய சுனாமியை எதிர்த்து நின்று ஜெயித்தபோது, வாழ்க்கையில் ஒரு சிறு அலை இன்றைய தலைமுறையினரை ஏன் அடித்துச் செல்கிறது? உளவியல் ரீதியாக இதை 'Resilience' என்கிறோம். ஒரு பந்தை தரையில் தட்டினால், அது மீண்டும் மேலே எழுவது போல் நாம் ஒவ்வொருவர் உள்ளிலும் சவால்களை சமாளிக்கும் தன்மை புதைந்து கிடக்கிறது.
நவீன உலகில் பறக்கும் நாம், கைபேசிகளையும், கணிணிகளையும் மட்டுமே உற்ற நண்பர்களாகப் பார்க்கிறோம். சந்தோஷமான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் நாம், நம்முடைய துக்கங்களையும், ஏமாற்றங்களையும் பகிர முடிகிறதா? நான் அழுதால் சாய்வதற்கு தோளும் இல்லை. என் பிரச்சனைளை கேட்பதற்கு செவியும் இல்லை. 'Blue Whale Challenge", "Momo Challenge" என்று குழந்தைகளின் வாழ்வை கேள்விகுறியாக்கும் சவால்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
தன் குழந்தைகளுக்கு இல்லை என்ற சொல்லே இருக்கக் கூடாது என்று பார்த்து, பார்த்து வளர்க்கும் பெற்றோர், அவர்களுக்கு எதிர்காலத்தில் சமூகத்தில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவத்தை பழக்க மறக்கிறார்கள். தகாத உறவுநிலைகள், போதை பழக்கம், வேலையின்மை என சமூகத்தை அச்சுறுத்தும் எல்லா விஷயங்களும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றன. உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகள் ஒன்றோடு ஒன்று இணையும் போது, ஒரு நபர் தற்கொலை முயற்சி செய்வதற்கான ஆபத்து பன்மடங்கு உயர்கிறது.
தற்கொலை குறித்த தவறான பார்வை
நம்மிடையே தற்கொலையை குறித்து சில தவறான புரிதல்கள் நிலவுகிறது. மன பலவீனம் உடையவர்கள் மட்டுமே தற்கொலை எண்ணத்தால் தூண்டப்படுகிறார்கள் என்று எண்ணாதீர்கள். தற்கொலை எண்ணம் என்பது பல்வேறு சூழலில், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணமே‚ தற்கொலை முயற்சிகள் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி நிகழ்ந்து விடுவதில்லை.
பொதுவாக, அந்த நபர் தனது தற்கொலை உணர்வுகளை யாரேனும் ஒருவரிடமாவது பகிர்ந்து கொள்கிறார். அது நிராகரிக்கப்படும்போதே, நம்பிக்கை இழந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். 'எனக்கு வாழப் பிடிக்கவில்லை", "நான் பாரமாகி விட்டேன்", "நான் இறப்பதே மேல்" என்று உங்களிடம் யாராவது சொன்னால் அதை 'சும்மா சொல்கிறார்கள்", 'தானாகவே சரியாகிவிடும்" என்று எண்ணிவிடாதீர்கள். அவர்களுடைய மனச்சோர்வின் வெளிப்பாடாக அந்த வார்த்தைகள் இருக்கலாம்.
நீங்களும் தற்கொலையை தடுக்கலாம்
ஒருவரிடம் தற்கொலை எண்ணம் மேலோங்கி இருப்பதை அறிய வெளிப்படையாக பேசுதல் அவசியம். நாம் தற்கொலைப் பற்றி பேசுவதால் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் தவறானது. மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவரிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். சரியான சிகிச்சை மனச்சோர்வையும், தற்கொலை எண்ணத்தையும் மாற்றும்.
சட்டத்தின் பார்வையில், தற்கொலை முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் மாறி, அது சிகிச்சை தரப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது. இந்த வருடம் உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான கருப்பொருள் "Working together to Prevent Suicide" என்பதே. தற்கொலை தடுக்கப்படக் கூடிய ஒன்றுதான். கூட்டு முயற்சி தற்கொலையின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைக்கும் என்பதில் ஐயமில்லை.
இதற்கு முதல்படி, தற்கொலைப் பற்றிய விழிப்புணர்வை, உங்கள் சமூக வட்டத்தில் ஏற்படுத்துங்கள். மனச்சோர்வு, மனநல மருத்துவ சிகிச்சை முறைகளால் குணப்படுத்தக்கூடிய ஒன்று என்பதை உணருங்கள். உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ, முன்பு போல் உற்சாகமாக இல்லை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து பேசுகிறார்கள் என்றால், அவர்களை விட்டு விலகாதீர்கள். அவர்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் புதைந்து கிடக்கிறதா என்பதை கனிவாகப் பேசி கண்டறியுங்கள்.
என்ன செய்வது என்று தெரியமால் தவறான முடிவை எடுக்கும் பலருக்கு உங்களுடைய ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்கு சரியான வழிகாட்டுதலும், மிக முக்கியம். தற்கொலை எண்ணம் மாறி, உற்சாகத்துடன் மீண்டு வரும் ஒருவரின் புன்னகை நமக்கு ஏற்படுத்தும் மனநிறைவை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தற்கொலையை தடுப்பதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு.
வாழ்க்கை இருட்டாகத் தெரிகிறதா? அச்சம் வேண்டாம்‚ நீங்கள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
பிற செய்திகள்:
- உங்கள் எதிர்காலத்துக்கு ஒரு கோடி ரூபாய் போதுமா? உண்மையில் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்?
- கீழடி நாகரிகம்: "இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும்" - மு.க. ஸ்டாலின்
- பருமனான பெண்களுக்கு ப்ரா தயாரிப்பதில் புரட்சி செய்யும் பெண்
- செப்டம்பர் 11 தாக்குதல்: அமெரிக்காவின் 'இதயத்தை' காயப்படுத்திய பயங்கரவாதிகள்
- இயற்கை வேளாண்மைக்கு மாறியதால் இலங்கையில் உணவுப் பஞ்சமா - உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்