சத்யேந்திரநாத் போஸ்: கூகுள் கொண்டாடிய இந்த இந்திய விஞ்ஞானி செய்த இமாலய சாதனை என்ன?

சத்தியேந்திரநாத் போஸ்

பட மூலாதாரம், Google

படக்குறிப்பு, சத்யேந்திரநாத் போஸ் பங்களிப்பை கொண்டாடும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்
    • எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
    • பதவி, பிபிசி தமிழ்

கூகுள் தேடுபொறியை வழக்கமாகப் பயன்படுத்துகிறவர்கள் தேடு பட்டைக்கு மேல் இருக்கும் கூகுள் பெயரைப் பார்த்திருப்பார்கள்.

ஆனால், சில நாள்களில் அந்த கூகுள் பெயர் இடம் பெறும் இடத்தில் ஒரு வரைகலை தோன்றும். ஒரு நபரையோ, நிகழ்வையோ கொண்டாடும் வகையில் அவ்வப்போது கூகுள் வெளியிடும் இந்த வரைகலைக்கு டூடுள் என்று பெயர்.

இன்று ஜூன் 4, 2022 அன்று கூகுள் வெளியிட்ட டூடுள் எதைப் பற்றித் தெரியுமா?

இந்தியாவில் தோன்றி, 20ம் நூற்றாண்டில் இயற்பியலுக்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கிய இந்திய விஞ்ஞானி சத்தியேந்திரநாத் போஸ் உருவம்தான் டூடுளாக வரையப்பட்டிருந்தது.

யார் இந்த சத்யேந்திரநாத் போஸ்?

சத்யேந்திரநாத் போஸ்

பட மூலாதாரம், Wikipedia

படக்குறிப்பு, சத்யேந்திரநாத் போஸ்

1894ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி கல்கத்தாவில் பிறந்த சத்யேந்திரநாத் போஸ் இயற்பியலில் கணிதத்தில் ஆற்றியவை இமாலய சாதனைகள். கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் தனது 15வது வயதில் இளம் அறிவியல் படிப்பு தொடங்கியவர், பிறகு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் செயல்முறை கணிதத்தில் பட்டமேற்படிப்பு படித்தார்.

20-ம் நூற்றாண்டில் இயற்பியலைப் புரட்சிகரமாக மாற்றியமைத்தது குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற அணுவினும் நுண் பொருள்கள் பற்றிய அறிவியல்தான். இந்த அறிவியல் பிரிவின் உருவாக்கத்தில் சத்யேந்திர நாத்தின் கோட்பாட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு.

இவற்றுக்காக அவர் உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசோ, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவோ பெறவில்லை. ஆனால் அறிவியல் உலகம் அவரை சும்மா விடவில்லை. இரண்டு முக்கிய இடங்களில் அவரது பெயரை சூட்டி சத்யேந்திர நாத் போசுக்கு அழியாப் புகழை அளித்தது அறிவியல் உலகம்.

எங்கெங்கே சத்யேந்திர நாத்துக்கு பெரும்புகழ் அளித்தது அறிவியல் உலகம் என்று பார்ப்போம்.

போசான்

1. அணுவுக்குள் இருக்கும் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான், போட்டான், நியூட்ரினோ, குவார்க் போன்ற துகள்கள் பெயர்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதிகம் பரவலாக கேள்விப்படாத எண்ணற்ற துகள்களும் உள்ளன. அணுவுக்கு அடிப்படையாக அமைந்த இந்த துகள்களை நாம் 'அணுவுட் துகள்கள்' என்று அழைப்போமா?

சரி.

இந்த அணுவுட் துகள்களில் இரண்டு வகை உண்டு. மேலும் பகுக்க முடியாதவை. மேலும் பகுக்கப்படக்கூடியவை. மேலும் பகுக்க வாய்ப்புள்ள துகள்களை கூட்டு அணுவுட் துகள்கள் என்றும், மேலும் பகுக்க முடியாதவற்றை அடிப்படை அணுவுட் துகள்கள் என்றும் அழைக்கிறார்கள்.

கூட்டு அணுவுட் துகள்களை மேலும் மேலும் பிரித்தால் அப்போது கடைசியில் பகுக்க முடியாத அடிப்படை அணுவுட் துகள்கள்தான் கிடைக்கும். எனவே, உலகத்தில் காணப்படும் பொருள்கள் அனைத்தையும் பகுத்துப் பகுத்துப் பார்த்தால் கடைசியில் இந்த பகுக்க முடியாத அடிப்படை அணுவுட் துகள்களே மிஞ்சும்.

அடிப்படை துகள்கள் அனைத்தையும் இரண்டு வகையாக பிரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். தம்மளவில் சுழலாமல் இருக்கிற அல்லது முழு சுற்றுகளாக சுழல்கிற துகள்கள் போசான் வகையைச் சேர்ந்தவை.

அரை குறை சுழல்களாக சுற்றுகிற துகள்கள் ஃபெர்மியான் வகையை சேர்ந்தவை.

ஆக உலகில் உள்ள எல்லா பொருள்களையும் பகுத்துக்கொண்டே போனால் பகுக்க முடியாத நிலை வரும்போது எல்லா துகள்களையும் இரண்டே வகையாகப் பிரிக்க முடியும் என்றால் அவற்றில் ஒருவகை துகளுக்கு போசான் என்று பெயர். சத்யேந்திரநாத் போஸ் நினைவாகத்தான் இந்தத் துகள்களுக்கு போசான் என்று பெயர் சூட்டப்பட்டது.

பின்னாளில் கடவுள் துகள் என்று கொண்டாடப்பட்ட ஹிக்ஸ் போசான்கூட இந்த போசான் வகைதான்.

இப்படி போசான் என்று பெயர் சூட்டியவர் பால் டைராக் என்ற விஞ்ஞானி. அவர் இந்தப் பெயரை சும்மா கொடுத்துவிடவில்லை. சத்யேந்திரநாத் போசும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் சேர்ந்து உருவாக்கிய போஸ் - ஐன்ஸ்டீன் புள்ளியியல் என்ற கோட்பாட்டில் விவரித்துள்ளபடியே குறிப்பிட்ட வகைத் துகள்கள் இயங்குவதைப் பார்த்துதான் அவற்றுக்குப் போஸ் பெயரை சூட்டினார் அவர்.

உலகில் பொருள்கள் 7 நிலை

2. அறிவியல் உலகம் போசுக்கு அளித்த இன்னொரு பெருமை என்ன தெரியுமா?

பொருள்களின் நிலைகள் என்ன என்றால், திட, திரவ, வாயு நிலைகள் என்று பள்ளி மாணவர்கள் சொல்லிவிடக்கூடும். ஆனால், நவீன விஞ்ஞானம் பொருள்களில் ஏழு நிலைகள் இருப்பதாக வகுத்துள்ளது. திட, திரவ, வாயு நிலைகள் தவிர மேலும் 4 நிலைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு நிலைக்கு 'போஸ் - ஐன்ஸ்டீன் கன்டன்சேட்' என்று பெயர். துகள்கள் அலைகளைப் போல நடந்துகொள்ளும் அதி உறை நிலைக்குதான் இந்தப் பெயர் சூட்டப்பட்டது. பொருள்களின் 7 நிலைகளில் ஒன்றுக்கு ஒருவர் சூட்டப்படுவது எவ்வளவு பெருமை!

ஐன்ஸ்டீன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐன்ஸ்டீன்

இன்று கூகுள் டூடுள் போட்டுக் கொண்டாடுவதில்கூட இந்த 'போஸ் ஐன்ஸ்டீன் கண்டன்சேட் நிலை'க்கு ஒரு தொடர்பு உண்டு. அது என்ன என்று பிறகு பார்ப்போம்.

புதிய கோட்பாடு உருவாக்கம்

1917 வாக்கில் சத்யேந்திரநாத் போஸ் கல்லூரியில் இயற்பியல் கற்பிக்கத் தொடங்கினார். பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திய சத்தியேந்திர நாத்துக்கு அணுவுட் துகள்கள் எண்ணப்படும் விதம் தொடர்பில் சில கேள்விகள் எழுந்தன. அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினார். ஏற்கெனவே இருந்த முறைக்கு மாற்றாக தம் ஆய்வில் தாம் கண்டவற்றை 'பிளாங்க் விதியும், ஒளி குவாண்டா கருதுகோளும்' (Planck's Law and the Hypothesis of Light Quanta) என்ற தலைப்பில் கட்டுரையாக எழுதி 'தி பிலாசபிகல் மேகசின்' என்ற புகழ் பெற்ற சஞ்சிகைக்கு அனுப்பி வைத்தார் போஸ். ஆனால், அந்த சஞ்சிகை போஸ் எழுதிய கோட்பாட்டை நிராகரித்துவிட்டது.

ஐன்ஸ்டீனோடு தொடர்பு

தாம் எழுதிய கோட்பாட்டை 'தி பிலாசபிகல் மேகசின்' நிராகரித்ததைக் கண்டு மனம் தளராத போஸ் அந்தக் கோட்பாட்டை அப்போது புகழ் பெற்றுவிட்ட மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அஞ்சலில் அனுப்பிவைத்தார்.

போசான்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போசான் - எல்லாத் துகள்ளையும் இரண்டு பிரிவாகப் பிரித்தால் அவற்றில் ஒரு வகைக்கு போசான் என்று பெயர்.

அதைப் படித்ததும், அது மிக முக்கியமான கோட்பாடு என்பதை ஐன்ஸ்டீன் புரிந்துகொண்டார். அத்துடன் உடனடியாக அந்தக் கோட்பாட்டை பலதரப்பட்ட புலப்பாடுகளில், ஆய்வுகளில் பொருத்திப் பார்த்தார்.

இதையடுத்து போசின் கோட்பாடு குவாண்டம் கருத்தியலில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக மாறியது. அவருக்கு இந்திய அரசு பின்னாளில் பத்ம விபூஷன் விருது வழங்கியது. இந்தியாவில் அறிஞர்களுக்கு அரிதாக வழங்கப்படும் தேசியப் பேராசிரியரர் என்ற அங்கீகாரமும் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறுகிறது கூகுள் வெளியிட்ட குறிப்பு.

நன்றி சத்யேந்திரநாத்

2022 ஜூன் 4ம் தேதி சத்யேந்திரநாத் போசுக்கு புகழ் சேர்க்கும் வகையில் டூடுள் வெளியிட்ட கூகுள் நிறுவனம், அது தொடர்பான குறிப்பை இப்படி முடித்தது: "இயற்பியல் உலகை புரட்சிகரமாக மாற்றி அமைத்ததற்கு நன்றி சத்யேந்திரநாத் போஸ். உங்கள் கண்டுபிடிப்பு குவாண்டம் இயந்திரவியலை உண்மையிலேயே உலுக்கிவிட்டது!".

ஏன் இந்த நாளில் இந்தப் பெருமை?

அதெல்லாம் சரிதான். சத்யேந்திரநாத் போஸ் பெருமையை அங்கீகரிக்கும் வகையில் டூடுள் வெளியிட ஜூன் 4-ம் தேதியை கூகுள் தேர்ந்தெடுத்தது ஏன்?

இது அவர் பிறந்த நாளா?

இல்லை.

ஒருவேளை இது அவரது நினைவு நாளோ?

அதுவும் இல்லை.

வேறு என்னதான் காரணம்?

தனது கோட்பாட்டை 'தி பிலாசபிகல் மேகசின்' நிராகரித்தவுடன் சோர்ந்துபோய் அதை போஸ் கைவிட்டிருந்தால், என்ன ஆகியிருக்கும்? அப்படிச் செய்யாமல் அந்த கோட்பாட்டை 1924 ஜூன் 4-ம் தேதி ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி வைத்தார் சத்யேந்திரநாத் போஸ்.

சத்தியேந்திரநாத் போசை பெருமைப்படுத்தும் வகையில் டூடுள் வெளியிட கூகுள் தேர்ந்தெடுத்தது இந்த தேதியைத்தான்.

இப்படி அவர் தமது கோட்பாட்டை ஐன்ஸ்டீனுக்கு அஞ்சல் செய்ததால்தான் உடனடியாக அந்தக் கோட்பாடு உலகின் கவனத்தை ஈர்த்தது. பிறகு ஐன்ஸ்டீனோடு சேர்ந்து போஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டு போஸ் - ஐன்ஸ்டீன் புள்ளியியல் கோட்பாட்டை உருவாக்கவும் இதுவே வழி வகுத்தது.

அந்த கோட்பாட்டின் விளைபொருளாக கண்டுபிடிக்கப்பட்டதே 'போஸ் ஐன்ஸ்டீன் கண்டன்சேட்' என்ற நிலையும்கூட.

காணொளிக் குறிப்பு, ஒரு கிலோ மஞ்சல் 1,800 ரூபாய் - அதிர வைக்கும் விலை உயர்வு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: