You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிலவின் மண்ணில் இரண்டே நாட்களில் வளர்ந்த செடிகள் - அறிவியல் சொல்லும் செய்தி என்ன?
விஞ்ஞானிகள் முதன்முறையாக நிலாவின் மண்ணில் தாவரங்களை வளர்த்துள்ளார்கள். நிலவில் நீண்ட காலம் தங்குவதைச் சாத்தியமாக்குவதற்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.
1969 முதல் 1972 ஆம் ஆண்டு வரையிலான அப்போலோ பயணத்தின் போது சேகரிக்கப்பட்ட சிறிய அளவிலான மண் மாதிரிகளை கிரெஸ் எனப்படும் தாவரத்தை வளர்க்கப் பயன்படுத்தினார்கள்.
அவர்களுக்கு ஆச்சர்யம் தரும் விதமாக, அந்த மண்ணில் இரண்டு நாட்களுக்குப் பிறகு விதைகள் முளைத்துள்ளன.
"நாங்கள் எவ்வளவு ஆச்சர்யப்பட்டோம் என்பதைச் சொல்லவே முடியாது," என்று ஃப்ளோரிடா பல்கலைக்கழக பேராசிரியர் ஆன்னா-லிசா பால் கூறினார். இவர், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறித்த ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியராவார்.
"ஒவ்வொரு தாவரமும், நிலவின் மண் மாதிரியில் இருந்தாலும் சரி கட்டுப்பாட்டில் இருந்தாலும் சரி, ஆறாவது நாள் வரை அவை ஒரே மாதிரியாக இருந்தன," என்று அவர் கூறுகிறார்.
அதன் பிறகு, அவற்றில் வித்தியாசங்கள் தோன்றின. நிலவு மண்ணில் வளர்க்கப்படும் தாவரங்கள் வளர்ச்சியில் அழுத்தத்தைக் காட்டத் தொடங்கி, மெதுவாக வளர்ச்சி குன்றியது.
ஆனால், இந்த ஆய்வில் சம்பந்தப்பட்டவர்கள், இதுவொரு திருப்புமுனை என்றும் பூமிக்குரிய தாக்கங்களில் ஒன்றைக் கொண்டிருப்பது தெரியவருவதாகவும் கூறுகிறார்கள்.
"இந்த ஆராய்ச்சி நாசாவின் மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்வது குறித்த நீண்டகால ஆய்வு இலக்குகளில் முக்கியமானது. ஏனெனில், எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு, நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் காணப்படும் வளங்களை உணவுக்கான ஆதாரங்களாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்," என்கிறார், நாசா தலைவர் பில் நெல்சன்.
"இந்த அடிப்படை தாவர வளர்ச்சி ஆய்வு, பூமியில் உணவுப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் தாவரங்கள் எவ்வாறு அங்குள்ள அழுத்தங்களைச் சமாளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. மேலும், இது வேளாண் கண்டுபிடிப்புகளை உருவாக்க நாசா எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான ஒரு முக்கிய உதாரணம்.
ஆராய்ச்சியாளர்களுக்கு இதிலுள்ள சவால் என்னவென்றால், பரிசோதனை செய்வதற்கு அதிகளவிலான நிலவின் மண் இல்லை. 1969 முதல் மூன்று வருட காலப்பகுதியில், நாசா விண்வெளி வீரர்கள் சந்திர மேற்பரப்பில் இருந்து நிலவின் பாறைகள், கூழாங்கற்கள், மணல் மற்றும் தூசு ஆகியவற்றை 382 கிலோ அளவுக்குச் சேகரித்து வந்தார்கள்.
பல்லாண்டுக் காலமாக பூட்டி வைக்கப்பட்டிருந்த மாதிரிகளில் இருந்து பரிசோதனைக்காக ஃப்ளோரிடா பல்கலைக்கழக குழுவிற்கு ஒரு செடிக்கு ஒரு கிராம் மண் என்ற விகிதத்தில் நிலவின் மண் மாதிரி வழங்கப்பட்டது.
1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக 2025-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள ஒரு பயணத்தில் மனிதர்களை நிலவில் தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
நிலவில் முளைத்த தாவரம்
2019-ஆம் ஆண்டு ஜனவரியில், சீனாவின் சாங்'இ4 ரோபோட்டிக் ஆய்வு விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட விதைகள் முளைத்ததாக சீனாவின் தேசிய விண்வெளி முகமை தெரிவித்தது.
நிலவில் உயிரின வளர்ச்சி முதன்முறையாகக் காணப்பட்டது மிக முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் நீண்டகால நோக்கில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாக இது கருதப்பட்டது.
சாங்'இ4 நிலவின் மறுபக்கத்தில் தரையிறங்கிய பின் மேற்கொள்ளப் பட்ட முதலாவது ஆய்வு முயற்சியில் கிடைத்த இந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது நிலவின் மண் மாதிரிகளைப் பயன்படுத்தி தாவரங்கள் முளைவிடுவதோடு, அவற்றின் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்துவதற்கான முயற்சியிலும் முன்னேற்றம் கிடைத்துள்ளது.
பூமியை நோக்கியே இருக்கும் நிலவின் பக்கத்தில் அல்லாமல், மறுபுறத்தில் இருளாக இருக்கும் பகுதியில் தரையிறங்கி சீனாவின் சாங்'இ4 விண்கலம் ஆய்வு மேற்கொண்டது.
2019-ஆம் ஆண்டு, ஜனவரி 3 ஆம் தேதி தரையிறங்கிய இந்த விண்கலத்தில், அந்தப் பகுதியில் உள்ள நிலவின் மண்ணை ஆய்வு செய்வதற்கான கருவிகள் இருந்தன.
அதற்கு முன்பாக, சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் தாவரங்கள் வளர்க்கப் பட்டுள்ளன. ஆனால் சீனாவின் சாங்'இ4 விண்கலம் 2019-ஆம் ஆண்டில் அதே முயற்சியை நிலவில் சாத்தியப்படுத்தியது.
நிலவின் மண்ணில் தாவரங்கள் வளர்வதற்கான திறன் இருப்பது, நீண்டகால விண்வெளித் திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு உதவும். இரண்டரை ஆண்டு காலம் வரை பிடிக்கக்கூடிய, செவ்வாய் கிரகப் பயணம் போன்ற, விண்வெளித் திட்டத்துடன் இணைந்ததாக இது இருக்கும்.
விண்வெளி வீரர்கள் உணவுத் தேவைக்காக பூமிக்குத் திரும்பி வருவதற்கான தேவை இல்லாமல், விண்வெளியிலேயே தங்களுக்கான உணவை அறுவடை செய்து கொள்வதற்கான வாய்ப்பு இந்த ஆய்வுகளின் முலம் கிடைக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்