You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சைபர் குற்றங்கள்: ஜெராக்ஸ் கடை முதல் வசீகர குறுஞ்செய்திகள் வரை - தொடரும் நூதன மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?
- எழுதியவர், நீச்சல்காரன்
- பதவி, கணினித் தமிழ் ஆர்வலர், சென்னை
(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினோராம் கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
தங்கம் விலை, பெட்ரோல் விலை என்று தினசரி செய்தியாக சைபர் கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்களும் பெருகிக்கொண்டே உள்ளன.
பொதுவாக எல்லா தொழிலிலும் மோசடிகள் நடந்தாலும் இணையம் என்று வரும் போது பலருக்குப் புதிதாக இருப்பதாலும், நவீனத்தின் மீதுள்ள கவர்ச்சியாலும் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள். இணையத்தைப் பயன்படுத்துபவர்களிடம் நம்ப வைத்து பணம்பறித்தல், ஆசைகாட்டி ஏமாற்றுதல், ஆபாசம் காட்டி மிரட்டுதல், போக்கு காட்டி திருடுதல் எனப் பல வழிகளில் குற்றங்கள் நடப்பதை நாம் அறிவோம்.
ஓட முடியாது, ஒளிய முடியாது என்பது இந்த இணையவழிக் குற்றங்களுக்குச் சரியாகப் பொருந்தும். இணையத்தின் கறுப்புப் பக்கங்களான இத்தகைய குற்றங்கள் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமல்லாமல் பயன்படுத்தாத அல்லது விட்டு விலகியிருப்பவர்களிடமும் நடந்து வருகின்றன. இவை எப்படியெல்லாம் நடக்கின்றன, எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது.
பணம் பறிப்பு
ஒரே பாடலில் பணக்காரனாகும் கதாநாயகன் போல ஒரே நாளில் பணக்காரராக ஒவ்வொருவர்க்குள்ளும் ஒரு மோகம் இருக்கும். அதுதான் ஏமாற்றுக்காரரின் தேவை.
இணையவாசிகளை ஏமாற்ற மின்னஞ்சல், வாட்சப் என போலியான விளம்பரச் செய்தி அனுப்புவது போல இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.
உதாரணமாக செல்போன் டவர் அமைத்துத் தருகிறோம், ஆஸ்திரேலியக் கப்பலில் வேலை வாங்கித் தருகிறோம், முத்ரா திட்டத்தில் மானியமாகக் கடனளிக்கிறோம், வெளிநாட்டிலிருந்து சிறப்புப் பரிசு வந்திருக்கிறது அதைக் கொடுக்கிறோம், கொரோனா நிவாரணநிதி அளிக்கிறோம், வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறோம் என்று நேரத்திற்கு ஏற்றவாறு பேசுவார்கள். நம்பிக்கையை அதிகரிக்க போலியான மின்னஞ்சல், போலியான இணையதளத்தைக் கூடக் கொடுப்பார்கள்.
இவ்வாறாக பெரும் நம்பிக்கையை உருவாக்கிவிட்டு முன்பணம் அல்லது சேவைக் கட்டணம் அல்லது சுங்கக் கட்டணம் என்று ஏதாவது சொல்லி, பணத்தைக் கட்டச் சொல்வார்கள். நமக்கும் ஆசை கண்ணை மறைப்பதால் கேள்வியே கேட்காமல் கேட்கும் தொகையை கட்டிவிடுவோம். அதன் பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்வோம். எனவே தெரியாத நபர்களை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் அல்லது ஒன்றிற்கு இருமுறை விசாரித்து முடிவெடுக்கலாம்.
தரவு திருட்டு
சில நேரங்களில் பணமாகக் கேட்காமல் அறியாமையைப் பயன்படுத்த வங்கி அதிகாரியாக ஆதார் சரிபார்க்கிறோம் என்றோ, வருமான வரித்துறையினராக பான் சரிபார்க்கிறோம் என்றோ, ஆதார் - பான் அட்டை இணைக்கிறோம் என்றோ, தொலைத்தொடர்புத் துறையினராக KYC (Know Your Customer) சரிபார்ப்பு என்றோ, கூரியர் வந்துள்ளது அடையாளத்தைச் சரி பார்க்கிறோம் என்றோ, கொரோனா தடுப்பூசி போடப் பதிவு செய்யச் சொல்லியோ கறாராகவும் பேசுவார்கள்.
இவர்களை நம்பி பல தகவல்களைக் கொடுப்போம். குறிப்பாக, பற்று அட்டையின் (Debit card) எண், ரகசிய எண் என்று நேரடியாகக் கொடுத்து ஏமாறுபவர்கள் உண்டு.
சில நேரம் ஓடிபி எண் மட்டும் கொடுத்து ஏமாறுபவர்களும் உண்டு. அதாவது அட்டை என்னிடம் தானே இருக்கு எப்படி ஏமாற்ற முடியும் என நினைக்கலாம். ஆனால் அட்டை இல்லாமல் அட்டை எண்ணுடன் ரகசிய எண் மட்டும் கொடுத்து, பணத்தை எடுக்க முடியும். குறிப்பாக வெளிநாட்டு வங்கிகளில் பரிவர்த்தனை செய்தால் குறுஞ்செய்தி கூட இல்லாமல் பணம் மாற்றமுடியும். யாரென்றே தெரியாதவருக்குக் கட்டாயம் OTP-யைப் பகிரக் கூடாது. குறைந்தபட்சம் எதற்கான OTP என்பதை குறுஞ்செய்தியில் படித்து அறிந்து பின்னர் முடிவெடுக்கலாம்.
வங்கியில் பணமில்லை என்றுகூட அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். உங்கள் OTP மூலம் கணக்கில் நுழைந்து, உங்கள் பெயரில் கடன் வாங்கி அந்தப் பணத்தைத் திருடிச் செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. நீங்கள் கொடுக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்று மெல்லிய மிரட்டல்கள் வந்தாலும் இத்தகைய தகவல்களைப் பகிரவேண்டாம். வங்கியைத் தொடர்பு கொண்டு நிலையறிந்து செயலாற்ற வேண்டும்.
தூண்டுகளவு (Phishing)
உங்கள் தொலைப்பேசி எண் அதிர்ஷ்டசாலியாகத் தேர்வாகியுள்ளது. உங்களுக்கு நாங்கள் லட்சக்கணக்கில் பரிசு வழங்கவுள்ளோம் என்று ஆசை வார்த்தையுடன் இணையத்தளங்களில் இருந்து கைப்பேசிகளுக்குக் குறுஞ்செய்திகள் வரலாம்.
இலவச டேட்டா, இலவச கல்வி உதவித் தொகை என்று நூற்றுக் கணக்கான காரணங்களைச் சொல்லி SMS-களில் உலாவும் வதந்திகளைச் சரிபார்க்காமல் யாருக்கும் முன்னகர்த்தாதீர்கள். விளம்பரங்களுக்கு வரும் குறுஞ்செய்தியில் உள்ள உரலிகளை (URL) ஆராயாமல் சொடுக்க வேண்டாம். அந்த உரலி மூலம் ஏதேனும் நச்சு மென்பொருள் தரவிறக்கமாகலாம் அல்லது உங்களது கருவியின் கட்டுப்பாட்டை அபகரிக்கலாம். பொதுவாகவே ஆசைகாட்டி வரும் குறுஞ்செய்திகள் நம்பகத்தன்மையற்றவை. அதை நீக்கிவிடுவதே நல்லது.
பண மோசடிகள்
பணம் எடுக்கும் எந்திரமே ஆனாலும் முன்பின் தெரியாதவர்களிடம் உங்கள் பற்று அட்டையைக் கொடுக்க வேண்டாம். அவர் ஏமாற்றுக்காரர் என்றால் அட்டையை மாற்றிக் கொடுக்கக்கூடும் அல்லது அட்டையின் அடையாளத்தை நகலெடுக்கக் கூடும். இதன் மூலம் இணையவழியில் ரகசிய எண்கள் இல்லாமலும் பணத்தை எடுக்கமுடியும்.
வைஃபை அட்டை என்றால் PoS என்ற கருவியின் அருகே கொண்டு சென்றாலே ரகசிய எண் இல்லாமல் சிறிய அளவு பணத்தை எடுக்கமுடியும். பொதுவாக வங்கி சார்ந்து ஏமாற்றப்பட்டாலோ, தகவல்களை திருடப்பட்டாலோ உடனே வங்கியைத் தொடர்பு கொண்டு கணக்கினைப் பூட்ட வேண்டும். இதன்மூலம் எந்த புதுப் பரிவர்த்தனையும் யாராலும் செய்ய முடியாது. குறைந்தபட்ச பாதுகாப்பினை உறுதிசெய்யலாம். அதன் பின்னர் சைபர் கிரைம் காவல்துறையில் புகாரளிக்க வேண்டும்.
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யுங்கள் பிட்காயினில் முதலீடு செய்யுங்கள் என்று அந்தக் கால ஈமு கோழி போலப் பல திட்டங்கள் தொழில்நுட்ப உலகில் உள்ளன. இணையம் தெரியாத பலரும் இதில் முறையற்ற நிறுவனங்களிடம் சிக்கி ஏமாறுகிறார்கள். சேர்ந்தவுடன் சிறிய லாபத்தை அளித்து ஏமாற்றி, பின்னர் பெரும் தொகையைச் சுருட்ட வாய்ப்புள்ளது. அந்நியச் செலாவணி, தங்கம், பங்கு வர்த்தகம் என்று சட்டரீதியான வர்த்தகத்திலும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் போட்டு ஏமாற்றுவதுண்டு.
கோழியிலோ தேக்குமரத்திலோ ஏமாந்தால் அந்தப் பொருளையாவது பார்க்கமுடியும். ஆனால் தொழில்நுட்பத்தில் இவற்றில் எதையும் கண்களால் பார்க்க முடியாது. எனவே தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளாமல் பெரும் முதலீடுகள் செய்யக் கூடாது.
பல்லூடகக் குற்றங்கள்
அடுத்த வகையான குற்றங்கள் காணொளி வாயிலாக நடப்பவை. நம்பிக்கையின் பேரில் பழகியவர்கள் பின்னர் ஏதோ ஒரு காரணத்தில் முரண்படும் போதும் பழைய அந்தரங்கப் படங்களையும் காணொளிகளையும் இணையத்தில் பரப்பிவிடுவார்கள். இச்சூழல் மனத்திடத்துடன் காவல்துறையில் புகாரளித்து எதிர்கொள்வதே சரியான முடிவு.
சில வேளைகளில் நண்பர்கள் மூலம் தவறுதலாகக் கசிந்த காணொளிகளால் சிக்கல்கள் நிகழ்வதுண்டு. வேடிக்கைக்காக பட்டா கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாடி, அந்த ஒளிப்படங்கள் வெளியே கசிந்து கைதான சம்பவங்களும் உண்டு.
கவன ஈர்ப்பிற்கு மாடியிலிருந்து நாயைத் தூக்கிப் போட்டு பதிவு செய்த காணொளி, கைது வரை கொண்டு சென்ற சம்பவங்களும் உண்டு. கைப்பேசி பழுது நீக்கும் கடை வழியாகப் பரவிய பல்லூடகக் கோப்புகளும் ஆபத்தைத் தர வல்லவை.
இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 67ன் படி சட்டத்திற்குப் புறம்பான விசயங்களை இணையத்தில் யார் பகிர்ந்தாலும் அதன் மூலகர்தாவும் குற்றவாளியாவார். அதாவது தனிப்பட்டமுறையில் நீங்கள் உதித்த சொற்கள், செய்த செயல் எதுவும் யாரையும் பாதிக்காதெனில் குற்றமல்ல. ஆனால் அதனை இணையத்தில் ஏற்றுவதால் பொது அமைதி சிதைவதால் நீங்கள் குற்றவாளியாகக் கருதப்படுவீர்கள். எனவே பொதுவில் பகிர முடியாத எந்தவொன்றையும் காணொளியாகப் பதிவு செய்யாதீர்கள். நீங்கள் அறிந்தோ அறியாமலோ அது பொதுவெளிக்கு வந்தே தீரும் என்பதை உணரலாம்.
பொது இடங்கள், விடுதி, துணிக்கடைகள் போன்ற இடங்களில் ரகசியக் கேமிராக்கள் மூலம் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டு அல்லது விற்பனை செய்து சைபர் குற்றங்கள் நிகழ்கின்றன. அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
போலிக் கணக்கு
நீங்கள் ஒரு பிரபலம் என்றாலோ அல்லது பிரபலத்தின் நண்பரென்றாலோ உங்கள் பெயரில் போலி கணக்குகள் இணையத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. உங்களைப் புண்படுத்த வேண்டும் என்றல்ல உங்கள் பெயரில் மற்றவர்களை ஏமாற்ற இவ்வாறு நடக்கலாம்.
மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி ஏமாற்றியவர் அண்மையில் கைதாகினார். பிரபல நடிகர் பெயரில் திருமணம் செய்து கொள்வதாக இணையம் வழியாக ஒரு பெண் ஏமாற்றப்பட்டுப் புகாரளித்த சம்பவங்களும் உள்ளன. பிரபலங்கள் ஒருபுறமிருக்க உங்கள் பெயரைப் பயன்படுத்தி, அவசரத்தில் உள்ளேன் பணம் அனுப்பச் சொல்லி உங்கள் நண்பர்களைத் தொடர்பு கொள்ளக்கூடும். நீங்கள் தான் பணம் கேட்கிறீர்கள் என்று உங்கள் நண்பர்கள் பணமளித்து ஏமாறக்கூடும். எனவே சமூகத் தளத்தில் தொடர்பு இல்லாவிட்டலும் சமூகத் தளத்தில் இயங்குபவர்களுடன் நட்பில் இருப்பது ஒருவகையான பாதுகாப்பு. இணையம் வழியாக நண்பர்கள் யாரேனும் பணம் அனுப்பச் சொன்னால் எப்போதும் பயன்படுத்தும் கணக்கிற்கு அனுப்புங்கள் அல்லது வேறு வகையில் தொடர்பு கொண்டு உறுதி செய்துவிட்டுப் பணம் அனுப்பலாம்.
உங்களது செல்போன் தொலைந்து போனால் அந்த எண்ணை உடனே தடைசெய்ய வேண்டும். மேலும் அதில் திறந்திருக்கும் செயலிகளையும் நிறுத்த வேண்டும். அதாவது ஜிமெயில், பேஸ்புக் என்று இருந்தால் அவற்றின் கடவுச் சொல்லை மாற்ற வேண்டும். கூகிளின் 'Find My Device', ஆப்பிளின் 'Find My iPhone' வசதி மூலம் மீட்க முயலலாம் அவ்வாறு அல்லாத போது காவல்துறையில் புகார் அளிப்பது முக்கியம். காரணம் அந்தக் கைப்பேசி வழியாக ஏதேனும் சட்டவிரோத செயல் நடந்திருந்தால் உங்களது புகார் தான் உங்களைப் பாதுகாக்கும்.
ஆதார் அட்டை, கடவுச் சீட்டு போன்ற அடையாள அட்டைகளை நகலெடுக்கும்போது உங்களுக்கே தெரியாமல் கூடுதல் நகலெடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில், அதுவும் கூட தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தப்படலாம்.
மேலும், அடையாள அட்டைகளின் நகலை யாரிடம் பகிர்ந்தாலும் இன்ன நோக்கத்திற்குப் பகிர்வதாகக் கையெழுத்திடலாம். இதன் மூலம் உங்கள் ஆவணத்தைக் கொண்டு எளிதில் வேறு யாரும் பயன்படுத்த முடியாது. இவ்வாறு போலி சிம், அட்டை வங்கிக் கொடுப்பதும், போலியான வங்கிக் கணக்கினைத் தொடங்கித் தருவதும் என முழுநேரத் தொழிலாக 15 ஆண்டுகள் செய்துவந்த கூட்டத்தை டெல்லியில் சில மாதங்கள் முன்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளதை நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம்.
யாருடைய ஆதார் அட்டையையும் சில தகவல்களை அளிப்பதன் மூலம் இணையத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளமுடியும் என்பதால் இவ்வகை குற்றங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. இம்மாதிரி அடுத்தவரின் அடையாள அட்டையைக் கொண்டு மாதத் தவணையில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி நூதன முறையில் மோசடி நடந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது. பொதுவாக உங்களது ஆதாரைக் கொண்டு வாங்கிய தொலைப்பேசி எண்களை இந்த முகவரியில் சரிபார்க்க முடியும். தொடர்பில்லாத எண் ஏதேனும் இருந்தால் அங்கேயே புகாரளிக்கலாம்.
இவை மட்டுமல்ல இணையத்தில் பல்வேறு வகையான குற்றங்களும் நடைபெறுகின்றன. அவற்றை உரிய இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவிற்குப் புகாரளிக்கலாம். இந்தியாவில் https://cybercrime.gov.in/ என்ற முகவரியிலோ 1930 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 112 என்ற அவசர எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.
இலங்கை நாட்டினர் https://cert.gov.lk/ என்ற முகவரியில் புகாரளிக்கலாம். ஆக இணையத்திலிருந்து வெளியே இருந்தாலும் இணையம் தொடர்பான மோசடிகளும் குற்றங்களும் நம்மைச் சுற்றி நடக்கின்றன. இணையத்தைவிட்டு விலகியிருந்தாலும், இணையத்தில் இருந்தாலும் இணையம் தொடர்பான குற்றங்கள் குறித்து மிகவும் விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்.
(பொதுவெளியில் நீச்சல்காரன் என்று அறியப்படும் கணினித் தமிழ் ஆர்வலரான கட்டுரையாளர் இராஜாராமன், சென்னையில் உள்ள பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணிபுரிகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் கணினித் தமிழ் விருது மற்றும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டக் கணிமை விருதை இவர் பெற்றிருக்கிறார்)
தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்