மம்மி: முதல்முறையாக சிடி ஸ்கேன் மூலம் 3,000 ஆண்டுக்கு மேல் பழமையான பாரோ மன்னரின் முகம் கண்டுபிடிப்பு

சி டி ஸ்கேன் வெளிப்படுத்திய முதலாம் அமென்ஹோடெப் அரசின் மண்டை ஓடு

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, சி டி ஸ்கேன் வெளிப்படுத்திய முதலாம் அமென்ஹோடெப் அரசின் மண்டை ஓடு

ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் முதல் முறையாக, எகிப்தை ஆட்சி செய்த பாரோ மன்னர்களில் ஒருவரின் பதப்படுத்தப்பட்ட மம்மி உடலை டிஜிட்டல் முறையில் கட்டுகள் அவிழ்த்து பல ஆய்வுகளைச் செய்துள்ளனர்.

அதாவது உண்மையில் பதப்படுத்தப்பட்ட மம்மியின் உடலில் உள்ள கட்டுகள் மற்றும் முகமுடியை அவிழ்க்கவில்லை.

கம்ப்யூடெட் டோமோகிராபி (சிடி) என்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் கட்டுக்களைக் கடந்து உடலை ஆராய்ந்துள்ளனர். அதில் பாரோக்களைக் குறித்தும், அவர்கள் புதைக்கப்பட்டது தொடர்பான பல விஷயங்களையும் அது வெளிப்படுத்தியுள்ளது.

விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட உடல் முதலாம் அமென்ஹோடெப் என்கிற அரசருடையது என்றும், அவர் எகிப்தை கிறிஸ்துவுக்கு முன் 1525 முதல் 1504 காலத்தில் ஆட்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. அவரது உடல் டெய்ர் எல் பஹாரி என்கிற இடத்தில் 140 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.

மம்மியை பாதுகாக்கும் நோக்கில், அழகான முகமுடி மற்றும் உடலை பதப்படுத்தி வைத்திருக்கும் கட்டுக்களை அகழ்வாய்வாளர்கள் அவிழ்க்க மறுத்துவிட்டனர்.

"3,000 ஆண்டுகளாக கட்டுக்குள் மூடப்பட்டிருந்த அரசரின் முகம் எங்களுக்குக் கிடைத்தது" என்றார் கெய்ரோ பல்கலைக்கழகத்தின் கதிரியக்கவியல் பேராசிரியர் டாக்டர் சஹர் சலீம்.

இவர் தான் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்ப்படுத்தி முதலாம் அமென்ஹோடெப் அரசின் முகத்தைக் கண்டுபிடித்தது குறித்த கட்டுரையை எழுதி 'ஃப்ரான்டியர் இன் மெடிசின்' என்கிற சஞ்சிகையில் பிரசுரித்த ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாம் அமென்ஹோடெப் அரசின் முகம் எப்படி அவரது தந்தை முதலாம் அமோஸின் முகவெட்டை ஒத்திருந்தது என்பது தான் தனக்கு முதலில் வியப்பை ஏற்படுத்திய விஷயம் என்று கூறினார்.

டாக்டர் சஹர் சலீம் மம்மியுடன்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, டாக்டர் சஹர் சலீம் மம்மியுடன்

முதலாம் அமோஸ்தான் 18ஆவது எகிப்து ராஜ பரம்பரையில் முதல் அரசர். குறுகிய தாடை, சிறிய குறுகிய மூக்கு, சுருள் முடி, கொஞ்சம் முன்பக்கம் ஏந்தலாக இருக்கும் பற்கள் என அவரது முகம் இருந்தது என்கிறார் அவர்.

முதலாம் அமென்ஹோடெப் அரசர் 169 சென்டி மீட்டர் உயரம் கொண்டவராக இருக்கலாம், அதோடு அவர் கிட்டத்தட்ட 35 வயதில் இறந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

அவர் உயிரிழந்த போது நல்ல உடல் நலத்தோடு இருந்ததாக எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கைகள் குறிப்பிடுவதாக டாக்டர் சலீம் கூறினார்.எந்த வித நோயாளும் அவரது உருவம் மாற்றமடையவில்லை, எந்த வித புறக்காயங்களும் இல்லை என்று கூறினார். எனவே, அவர் நோய் தொற்றால் அல்லது வைரஸால் இறந்திருக்கலாம் என்கிறது அறிக்கை.

இந்த பரிசோதனைகள் மூலம், உடலை மம்மி முறையில் பதப்படுத்துவது குறித்தும் நிறைய விஷயங்கள் ஆராய்ச்சியாலர்களுக்கு கிடைத்திருக்கிறது. உதாரணமாக முதலாம் அமென்ஹோடெப் அரசர் தான் மார்பை ஒட்டி கைகள் கட்டப்பட்ட நிலையில் மம்மியாக பதப்படுத்தப்பட்ட முதல் பாரோ என்பது தெரிய வந்துள்ளது. மேலும் வழக்கத்துக்கு மாறாக, அவரது மூளையும் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது போக, முதலாம் அமென்ஹோடெப் அரசின் மம்மி 21ஆம் ராஜ பரம்பரையைச் சேர்ந்த பூசாரிகளாள் மிக அன்போடு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் முதலாம் அமென்ஹோடெப் அரசர் இறந்து கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்மி

பட மூலாதாரம், PA media

படக்குறிப்பு, மம்மி

முதலாம் அமென்ஹோடெப் மம்மியை ஸ்கேன் செய்த போது, அவர் உடலில் அவர் இறந்த பிறகு பல காயங்கள் ஏற்பட்டுள்ளதைக் காட்டியது. அது கல்லறைகளைச் சூறையாடும் திருடர்களால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முதலாம் அமென்ஹோடெப் அரசரின் மம்மியை பராமரித்த பூசாரிகள், அவரது தலைமையும், கழுத்தையும் ரெசின் என்கிற ஒரு வித பசை பூசப்பட்ட நூலைக் கொண்டு இணைத்ததும் தெரிய வந்ததுள்ளது.

முதலாம் அமென்ஹோடெப் மன்னரின் மம்மியில் 30 ஆபரணங்கள் மற்றும் தனித்துவமான தங்க மணிகளைக் கொண்ட தங்க அங்கி போன்றவையும் இருந்தது என்றும், அது போன்ற ஆபரணங்களை பூசாரிகள், அடுத்தடுத்த பரோக்கள் அணிந்து கொள்வதற்காக உடலிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்கிற கருத்தை இது நிராகரிப்பதாகக் கூறினார் டாக்டர் சஹர் சலீம்.

முதலாம் அமென்ஹோடெப் அரசரின் உடல், பூசாரிகளால் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு டெய்ர் எல் பஹரி (லக்சர் பகுதியில் கோபுரங்கள், கோயில்கள் நிறைந்த வளாகம்) என்கிற இடத்தில், உடலைப் பாதுகாக்க வேண்டி மீண்டும் புதைத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: