You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் உடல்நலம்: இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆபாசப் படங்களைப் பார்த்தால் என்னவாகும்?
- எழுதியவர், எம்.மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
(பாலியல் நலம் குறித்து பிபிசி தமிழ் வெளியிட்டு வரும் தொடரின் மூன்றாவது பாகம் இது)
தாம்பத்ய உறவில் திருப்தியில்லை, கருத்தரிப்பதில் சிக்கல் ஆகிய பிரச்னைகளுடன் பாலியல் நிபுணரின் ஆலோசனைக்குச் சென்றனர் கிருஷ்ணா - மாலா தம்பதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
அவர்களைப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்கள் இருவருக்கும் உடல் ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் இருவரிடமும் தனித்தனியே விவரங்களைக் கேட்கும்போது, தன்னுடைய கணவர் இரவு இரண்டு மணி வரை ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாக பாலியல் நிபுணரிடம் கூறியிருக்கிறார் மாலா.
சமூக ரீதியாக தம்மை நன்றாக நடத்துவதாலும், மரியாதைக்குரியவர் என்பதாலும் இது குறித்து யாரிடமும் பேச முடியவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். இந்தத் தகவலின் அடிப்படையில் கணவர் கிருஷ்ணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறுகிறார், மகப்பேறு மற்றும் பாலியல் சிகிச்சை நிபுணர் ஜெயராணி காமராஜ்.
ஆபாசப் படங்களைப் பார்ப்பதால் எல்லோருக்கும் இதேபோன்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமா, ஆபாசப் படங்கள் பார்ப்பதை பாலியல் கல்வியுடன் இணைக்க முடியுமா, ஆபாசப் படங்கள் பார்ப்பதற்கு ஒருவர் அடிமையாகிவிட்டார் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது என்பன போன்ற கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்திருக்கிறார்.
ஆபாச படம் பார்ப்பது நல்லதா கெட்டதா?
ஆபாசப் படம் பார்ப்பது கொரோனா காலத்தில் பெருகி இருப்பதாகவும் பலருக்கு அது வடிகாலாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சிலவகையான பாலியல் சிகிச்சைகளுக்கு ஆபாசப் படங்கள் பயன்படுகின்றன. பாலியல் பிரச்னைகளுடன் வருவோருக்கு தூண்டுதல் என்ற வகையில் இதைக் கொள்ளலாம். தம்பதிகள் பரஸ்பர ஒப்புதலுடன் பார்ப்பதிலும் தவறில்லை. ஆனால், 18 வயதுக்குக் குறைந்தவர்கள் இதைப் பார்ப்பது ஆபத்தானது. பாலியல் கல்வியிலும் ஆபாசப் படங்களைச் சேர்த்துக் கொள்ள முடியாது.
ஆபாச படம் பார்ப்பது பார்ப்பது எவ்வித மனநலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்?
தனிமையில் இருப்பவர்கள் ஆபாசப் படம் பார்ப்பது மன அழுத்தத்தையும் குழப்பத்தையும் குறைக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், தொடர்ச்சியாக ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது, அதுவே எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மன அழுத்தமும் மனக்குழப்பமும் அதிகரிக்கிறது.
அளவுக்கு அதிகமாக ஆபாசப் படங்களைப் பார்ப்பது தாம்பத்ய உறவில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. கற்பனையான, சாத்தியமில்லாத பாலியல் முறைகளை மனம் எதிர்பார்க்கத் தொடங்குவதால், தம்பதிக்கு இடையே ஏமாற்றம் ஏற்படுகிறது.
ஒருவர் ஆபாச படத்துக்கு அடிமையாகி விட்டார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒரு வாரத்தில் 17 முதல் 24 நிமிடங்கள் வரை மட்டுமே ஆபாசப் படங்களைப் பார்ப்பது பாதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. சுமார் 75 சதவிகிதம் பேர் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்கு குடும்ப ரீதியாகவோ, மனநிலையிலோ எந்த வகையாலான சிக்கலும் ஏற்படுவதில்லை.
இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களுக்கு குறைந்த நேரம் ஆபாசப் படங்களைப் பார்த்தாலும், அவற்றைப் பார்ப்பது தீவிரமாகவும், கட்டாயமாகவும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் பார்க்கும் எண்ணம் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் ஏறக்குறைய 13 சதவிகிதம் பேர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் ஏறக்குறைய 11 சதவிகிதம் பேர். வாரத்தில் 110 நிமிடங்களுக்கு மேல் இவர்கள் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்கள். இவர்களுக்கு படபடப்பு, கோபம், எரிச்சல், தனிமை என பல பிரச்னைகள் இவர்களுக்கு இருக்கும். ஆண்களில் பலருக்கு காலை நேர விரைப்பு இருக்காது.
ஆபாச படம் அதிகமாக பார்ப்பவர்களுக்கு சிகிச்சை தேவையா?
நிச்சயமாகத் தேவை. ஆபாசப் படங்கள் அதிகமாகப் பார்க்கும் ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் மூளையில் பிரச்னைகள் ஏற்படுகின்றன எனக் கண்டறியப்படுகிறது. நினைவுத் திறன், தூக்கமின்மை, நுண்ணறிவுக் குறைவு, கவனக்குறைவு போன்றவை ஏற்படுகின்றன. இவற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது தொடர்பான முழுமையான பேட்டி:
பிற செய்திகள்:
- யோகி ஆதித்யநாத்: அஜய் மோகன் முதல்வர் 'மகாராஜா' ஆக மாறியது எப்படி?
- மலேசியா மழை: 100 ஆண்டுகளுக்கு பிறகு கதி கலங்க வைக்கும் காட்சிகள்
- யூ-டியூப் பார்த்து மனைவிக்குப் பிரசவம்: இறந்து பிறந்த குழந்தை - என்ன நடந்தது?
- தாய்மை அச்சுறுத்துகிறதா? - குழந்தை பெற்றுக்கொள்ளத் தயங்கும் இளம் தலைமுறை
- ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் அமலாக்கத் துறை விசாரணை - பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்