பார்க்கர்: சூரியனுக்கு மிகவும் அருகில் சென்று நாசா விண்கலம் சாதனை

பட மூலாதாரம், NASA-JHU-APL
- எழுதியவர், ஜோனாதன் அமோஸ்
- பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்
சூரியனின் புற வளிமண்டலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்கலம் ஒன்று கடந்து சென்றுள்ளது. இது ஒரு வரலாற்றுத் தருணம் என்று நாசா தெரிவித்துள்ளது.
நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe) விண்கலம் இவ்வாறு சூரியனின் புற வளிமண்டலம் வழியாகக் கடந்து சென்றுள்ளது.
'கொரோனா' என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியின் வழியாக பார்க்க சோலார் ப்ரோப் கடந்து சென்றுள்ளது. (கொரோனா என்றால் லத்தீன் மொழியில் கிரீடம் என்று பொருள்.)
இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இது நிகழ்ந்திருந்தாலும் அந்த விண்கலம் கொரோனா வழியாகத்தான் கடந்து சென்றது என்பது, தரவுகளின் பகுப்பாய்வுகள் மூலம் இப்போதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மிகவும் அதிகமான வெப்பம் மற்றும் கதிர்வீச்சு ஆகியவற்றை பார்க்கர் விண்கலம் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் சூரியன் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்த புதிய தகவல்களை இதன் மூலம் தற்போது பெற முடிந்துள்ளது.
நிலவில் மனிதன் கால் பதித்ததைப் போல...
"நிலவில் மனிதன் தரையிறங்கியது நிலவு எவ்வாறு உருவானது என்பதை அறிவியலாளர்கள் அறிந்துகொள்ள எவ்வாறு உதவியதோ, அதைப்போல சூரியனின் புற வளிமண்டலத்தைத் தொட்டதும் மனித குலத்துக்கு ஒரு மிகப்பெரிய முன்னேற்றம். பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான சூரியன் குறித்தும், அது சூரிய மண்டலத்தின் மீது செலுத்தும் தாக்கம் குறித்தும் அறிந்து கொள்ள இது உதவும்," என்று நாசாவின் சூரிய இயற்பியல் பிரிவில் இயக்குநர் நிக்கோலா ஃபாக்ஸ் தெரிவித்துள்ளார்.
நாசாவால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விண்வெளித் திட்டங்களில் பார்க்கர் சோலார் ப்ரோப் திட்டம் சாகசம் மிகுந்த திட்டங்களில் ஒன்றாக உள்ளது.
பார்க்கர் விண்கலனை திரும்பத் திரும்ப சூரியனுக்கு மிகவும் அருகில் அனுப்பி, அதைக் கடந்துசெல்ல வைப்பதே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த விண்வெளித் திட்டத்தின் நோக்கமாகும்.
ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் கிலோ மீட்டர் எனும் மிக அதிக வேகத்தில் இந்த விண்கலம் பறந்து செல்லும்.சூரியனின் வளிமண்டலத்தில் மிகவும் வேகமாக நுழைந்து விட்டு வேகமாக வெளியேற வேண்டும் என்பதே இந்த விண்கலத்தை அதிக வேகத்தில் பயணிக்க வைப்பதற்கான நோக்கமாக உள்ளது.

பட மூலாதாரம், NASA
சூரியனைச் சுற்றி இருக்கும் சூழல் குறித்து அளப்பதற்கான கருவிகள் இந்த விண்கலத்தின் பொருத்தப்பட்டுள்ளன. வெப்பத்தை தாங்கும் அடர்த்தியான ஓர் அறனும் பார்க்கரின் வெளிப் பகுதியில் உள்ளது.
ஆல்வேன் கிரிட்டிக்கல் பவுண்டரி ( Alfvén critical boundary) என்று அழைக்கப்படும் சூரியனின் புற வளிமண்டலப் பகுதியின் விளிம்பு ஒன்றை, இந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி பார்க்கர் விண்கலம் கடந்து சென்றது.
இது கொரோனா என்று அழைக்கப்படும் பகுதியில் புறவெளியாகும். சூரியனின் ஈர்ப்பு விசை மற்றும் காந்தவிசையால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சூரியப் பொருட்கள் இந்த விளிம்பிலிருந்துதான் விண்வெளிக்குள் நுழைகின்றன.
1.3 கோடி கிலோ மீட்டர் தொலைவில்
ஃபோட்டோஸ்பியர் (photosphere) என்று அழைக்கப்படும் பூமியிலிருந்து தென்படக்கூடிய சூரியனின் மேற்பரப்பிலிருந்து 1.3 கோடி கிலோ மீட்டர் தொலைவில் பார்க்கர் விண்கலம் பறந்து சென்றுள்ளது.
பார்க்கர் விண்கலத்தில் இருந்து திரட்டப்பட்ட தரவுகள் மூலம் இந்த விண்கலம் ஆல்வேன் கிரிட்டிக்கல் பவுண்டரிக்கு, மேலும் கீழும் ஐந்து மணி நேரத்தில் மூன்று முறை கடந்து சென்றுள்ளது என்பது தெரியவந்துள்ளதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் ஸ்டூவர்ட் பேல் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், S R HABBAL AND M DRUCKMÜLLER
"இந்தப் பகுதிக்குள் சூரியனின் நிலை முற்றிலும் மாறுவதை எங்களால் காண முடிந்தது. கொரோனாவுக்கு உள்ளே சூரியனின் காந்தப்புலம் வலிமை மிக்கதாக உள்ளது. இது சூரிய துகள்களின் நகர்வின் மீது ஆதிக்கம் செலுத்தியது. இங்கு பார்க்கர் நுழைந்தபோது சூரியனுடன் உண்மையாகவே தொடர்பில் இருந்த பொருட்கள், இந்த விண்கலத்தை சூழ்ந்திருந்தன," என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
கொரோனா - புரியாத புதிர்
இந்தக் கொரோனா எனும் மண்டலம் மீது அறிவியலாளர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் இதற்குள் நிகழும் சில முக்கிய நிகழ்வுகள் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.
சூரியனின் மேற்பரப்பில் வெப்பநிலை சுமார் 6000 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கிறது. ஆனால் கொரோனாவில் நிலவும் வெப்பநிலை பல கோடி டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இந்தப் பகுதியில்தான் மின்னூட்டபட்ட துகள்களான எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் ஆகியவையும் ஐயனிகளும் திடீரென வேகம் எடுத்து ஒலியை விட அதிகமான வேகத்தில் வீசும் சூரியக் காற்றில் நகர்கின்றன.
இது எவ்வாறு நடக்கிறது என்பதும் அறிவியலாளர்களுக்கு இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.
"பூமி மற்றும் பூமியை கடந்து பயணிக்கும் சூரிய காற்றின் இயக்கத்தின் சுவடுகள், அந்த காற்று சூரியனை கடந்து பயணிக்கும் பொழுது அழிக்கப்பட்டு விடுகின்றன என்பதுதான் பிரச்னையாக உள்ளது," என ஜான் ஹாப்கின்ஸ் அப்ளைடு ஃபிசிக்ஸ் லெபோரட்டரி என்னும் ஆய்வகத்தின் நூர் ரோவாஃபி கூறுகிறார்.
இதனால்தான் இதுவரை விவரங்கள் அறியப்படாத இந்த பகுதி வழியாக பார்க்கர் விண்கலம் பயணிப்பது, கொரோனாவுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய உதவும் என்று அவர் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், NASA's Goddard Space Flight Center/Mary P. Hrybyk-
இனிவரும் காலங்களில் பார்க்கர் விண்கலம் கொரோனாவின் ஆழமான பகுதிகளுக்கு கடந்து செல்லும் பொழுது இன்னும் மேலதிகமான தரவுகளை வழங்கும் என்று அதைக் கட்டுப்படுத்தும் அறிவியலாளர்களால் அறியமுடியும்.
2025ஆம் ஆண்டு வாக்கில் சூரியனின் மேற்பரப்புக்கு மேலே 70 லட்சம் கிலோ மீட்டர் வரை இந்த விண்கலம் கடந்து செல்ல முடியும்.
பார்க்கர் விண்கலனில் மட்டுமல்ல, பிற சூரிய வான் நோக்கு நிலையங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும் பூமியில் உள்ள ஒவ்வோர் உயிர்களுடனும் நேரடித் தொடர்புடையதாக இருக்கும்.
நமக்கு பார்க்கர் விண்கலத்தால் என்ன பயன்?
சூரியனின் வெளிப்புறத்தில் நிகழும் மிகப்பெரிய வெடிப்புகள் பூமியின் காந்தப் புலத்தையே அதிர வைக்கும் தன்மை உடையவை.
அப்படி நடந்தால் பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் அனைத்தும் செயலிழக்கும்; பூமியில் தொலைத்தொடர்புகள் அனைத்தும் பாதிக்கப்படும்; மின்சார எழுச்சி காரணமாக பூமியில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடையக் கூடும்.
இவ்வாறான சூரியப் 'புயல்கள்' உண்டாவதை முன்கூட்டியே கணிக்க அறிவியலாளர்கள் முயன்று வருகிறார்கள்.
அவற்றை பற்றிய புதிய மற்றும் மதிப்புமிக்க தகவல்களை அறிந்து கொள்வதற்கு பார்க்கர் விண்கலம் பெரிதும் உதவியாக இருக்கும்.
பார்க்கர் விண்கலம் மூலம் திரட்டப்பட்ட சமீபத்திய தகவல்கள் நியூ ஆர்லியன்சில் நடக்கும் அமெரிக்ன் ஜியோபிசிகல் யூனியனின் இலையுதிர்காலக் கூட்டத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












