பாலியல் ஆபாச படங்கள், முடக்கப்பட்ட இணையதளங்களை பார்க்க உதவும் விபிஎன் சேவைக்கு இந்தியாவில் தடை வருமா?

VPN

பட மூலாதாரம், MF3d / getty images

விர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க் எனப்படும் விபிஎன் சேவைகள் இந்தியாவில் தடை செய்யப்படலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன.

உள்துறைக்கான இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு, சமீபத்தில் விபிஎன் சேவைகளுக்கு இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

வி.பி.என் சேவை என்றால் என்ன, அதனால் என்ன பயன், இந்திய அரசு அதை ஏன் தடை செய்ய விரும்புகிறது என சில தகவல்களை இங்கே பார்ப்போம்.

வி.பி.என் சேவை என்றால் என்ன?

விர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க் என்பது ஒரு பொது இணையதள இணைப்புக்குள் இருக்கும் தனிப்பட்ட வலையமைப்பு ஆகும். இணையத்துக்குள் ஒரு சிறிய இணைய அமைப்பு போன்றது இது.

இந்த தனி அமைப்புக்குள் இருக்கும் அனைத்தும் மறையாக்கம் செய்யப்படும். வேறு சொற்களில் சொல்வதானால் இந்த விர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க்கினுள் என்ன நடக்கிறது என்பதை அறிய, இதன் வெளியே உள்ள இணையதளப் பயனர்களால் ஊடுருவவோ, கண்காணிக்கவோ முடியாது. ஒரு தனிப்பட்ட வி.பி.என் அமைப்புக்குள் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறிய முடியாது.

இணையதளம் அல்லது ஒரு லோக்கல் நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும் எந்த ஒரு கணினி அல்லது இணையத்தை பயன்படுத்தும் கருவியை அடையாளப்படுத்த ஒவ்வொரு கருவிக்கும் ஒரு தனிப்பட்ட முகவரி இருக்கும். இது ஆங்கிலத்தில் ஐ.பி முகவரி (IP address) என அழைக்கப்படுகிறது.

ஐ.பி முகவரி - வி.பி.என் இரண்டுக்கும் என்ன தொடர்பு?

இணையம் அல்லது ஒரு லோக்கல் நெட்வொர்க்கில் தகவல் பரிமாற்றத்திற்கு என உருவாக்கப்பட்டுள்ள விதிகளே இன்டர்நெட் ப்ரோட்டோகால் (Internet Protocol) எனப்படுகிறது.

Internet

பட மூலாதாரம், Getty Images

விர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க் பயன்படுத்தப்படும் போது, இந்த இன்டர்நெட் ப்ரோட்டோகால் முகவரியை இணையத்தில் இருக்கும் யாராலும் அறிய முடியாது. வி.பி.என் பயன்படுத்தி தரவுகள் பரிமாற்றம் செய்யப்படும்போது இணையத்தில் உங்களைக் கண்காணிக்கப்பவர்களால் என்ன தகவல்கள் அல்லது தரவுகள் பரிமாறப்படுகின்றன என்பதை அறிய முடியாது.

இதற்கு காரணம் வி.பி.என் பயன்படுத்தப்படும்போது அதைப் பயன்படுத்தும் கருவியின் உண்மையான ஐ.பி முகவரி வெளியே தெரிவதில்லை. வேறு ஏதோ ஒரு நாட்டில் இருப்பது போல, போலியான முகவரியே அந்தக் குறிப்பிட்ட இணையதளப் பயனர் பயன்படுத்துவது போல காட்டப்படும்.

வி.பி.என் பயன்படுத்துவதால் என்ன பயன்?

உண்மையான ஐ.பி முகவரி வெளியே தெரியாது என்பதால் வி.பி.என் மூலம் இணையத்தைப் பயன்படுத்துபவர் வேறு ஓர் இடத்திலிருந்து பயன்படுத்துவது போல தெரியும். உதாரணமாக தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் இன்டர்நெட் இணைப்பு பெற்ற ஒருவர், முடக்கப்பட்ட இணையதளத்தை பார்க்க விபிஎன் சேவையை பயன்படுத்தும்போது, அவர் வேறு ஏதோ ஒரு நகரிலோ நாட்டிலோ இருப்பதை போல இணைய குறிப்புகளில் பதிவாகும். அதனால், அவரை அடையாளம் காண்பது கடினமாகும்.

வி.பி.என் பயன்படுத்தப்படுவதால் ஒருவர் பயனாளியின் தனிப்பட்ட தகவல்கள் வெளியே கசியாது. உங்கள் இணையதள நடவடிக்கைகள் அனைத்தும் உங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனத்தால் முழுதும் சேமித்து வைக்கப்படும்.

ஆனால் வி.பி.என் பயன்படுத்தும்போது, நீங்கள் இணையத்தில் எதைத் தேடுகிறீர்கள், எந்த இணையப் பக்கத்துக்குச் செல்கிறீர்கள், எந்தெந்தத் தரவுகளை பரிமாற்றம் செய்கிறீர்கள், இணையம் மூலம் யாரைத் தொடர்பு கொள்கிறீர்கள் என்பதை உங்களது இணைய தள சேவை வழங்குநர் கூட அறிய முடியாது. இதனால் உங்கள் தனிப்பட்ட தரவுகளின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

வி.பி.என் சேவை அந்தக் கருவியின் உண்மையான ஐ.பி முகவரியை வெளிப்படுத்தாமல் போலியான ஐ.பி முகவரியை உண்டாக்கி பயனாளி வேறு இடத்திலிருந்து இணையத்தை பயன்படுத்துவது போல ஒரு தோற்றத்தை உண்டாக்கும். இதனால் வி.பி.என் பயன்படுத்தப்படும் நாட்டில் அல்லது பிராந்தியத்தில் தடை செய்யப்பட்ட இணையதளங்களை கூட வி.பி.என் மூலம் அணுக முடியும்.

இது மட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்களால் தங்களது நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுமே தங்கள் லோக்கல் நெட்வொர்க்கை அணுகக்கூடிய வகையில் இணைய பாதுகாப்புக்காக வி.பி.என் பயன்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட தரப்புகள் ஹேக்கிங் செய்யப்படாமல் பாதுகாப்பாக இருக்கும்.

வி.பி.என் பயன்படுத்துவதால் உண்டாகும் சிக்கல்கள் என்ன?

இணைய குற்றத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது ஆன்லைன் நடவடிக்கைகள் எதுவும் கண்காணிக்கப்படாமல் இருப்பதை தடுப்பதற்காக வி.பி.என் சேவையை பயன்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

வி.பி.என் இணையதள சேவை இந்தியாவில் தடை செய்யப்படுமா?

பட மூலாதாரம், Getty Images

வி.பி.என் பயன்படுத்தும்போது, வேறு ஒரு நாட்டில் இருந்து அந்த ஆன்லைன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது போல ஐ.பி முகவரி போலியாகக் காட்டப்படுவதால் இணையக் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிவது காவல்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.

இதனால் இன்னும் விரிவான கண்காணிப்பு நடவடிக்கைகளில் விசாரணையாளர்கள் ஈடுபட வேண்டிய கட்டாயம் உள்ளது.

வி.பி.என் சேவையை பயன்படுத்தும் குற்றவாளிகள் இணையத்தில் அநாமதேயமாக இருக்க முடிகிறது என்பதால் இதை இந்தியாவில் தடை செய்து இணைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உள் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.

வி.பி.என் தடை செய்யப்பட்டால் என்னாகும்?

டோரென்ட் இணையதளங்கள், ஆபாசப் பட இணையதளங்கள் மற்றும் ஒருநாட்டில் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்ட பிற இணையதளங்களை வி.பி.என் மூலம் பயன்படுத்தி வந்தவர்கள் இந்தத் தடை அமலுக்கு வந்தபின் அந்த இணைய தளங்களை அணுக முடியாது.

உதாரணமாக சில நாடுகளில் ஃபேஸ்புக், கூகுள் போன்ற இணையதளங்களுக்கு தடை அல்லது கட்டுப்பாடு உள்ளது. எனினும் வி.பி.என் சேவை மூலம் அவற்றை அந்த நாட்டில் உள்ளவர்களால் அணுகமுடியும். அதுபோல இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல இணையதளங்களும் வி.பி.என் சேவை வாயிலாக பார்க்க முடிகின்றன அது இனிமேல் முடியாது.

வி.பி.என் தடை செய்யப்பட்டாலும் அதன் சேவையை போலவே இணைய உலகில் வேறு 'ப்ராக்சி' சர்வர் இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் ஓர் அரசு சட்டபூர்வமாக முடக்கிய இணைய தளங்களை அதன் பயனரால் பார்க்க முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :