You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இதய நோய்: அதீத ரத்த அழுத்தத்தில் இருந்து ஒட்டகச் சிவிங்கிகள் எப்படித் தப்பிக்கின்றன?
- எழுதியவர், பாப் ஹோம்ஸ்
- பதவி, அறிவியல் எழுத்தாளர்
உயரமாக இருப்பதால் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு மிக அதிகமான ரத்த அழுத்தம் தேவைப்படும். ஆனால் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு வரும் வேறு உடல் உபாதைகளிலிருந்து அவை தப்பித்துவிடுகின்றன. இது எப்படி சாத்தியம்?
ஒட்டகச் சிவிங்கி என்றாலே பலருக்கும் அதன் நீண்ட கழுத்துதான் நினைவுக்கு வரும். விலங்குக்காட்சி சாலைக்கோ சஃபாரிக்கோ செல்லும்போது அவசியம் பார்க்கவேண்டிய விலங்குகளின் பட்டியலில் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ஆனால் ஒரு இதய நோய் நிபுணருக்கு ஒட்டகச் சிவிங்கிகள் வேறு விதமான ஆச்சரியத்தைத் தருகின்றன.
உயர் ரத்த அழுத்தத்தால் பல லட்சம் மக்கள் இறந்துவரும் சூழலில், அதனால் வரும் ஆபத்துகள் இன்றியே ஒட்டகச் சிவிங்கிகள் வாழ்ந்து வருகின்றன.
இதுவரை ஒட்டகச் சிவிங்கிகளின் உடலில் நடக்கும் இயக்கத்தைப் பாதி மட்டுமே விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிந்துள்ளனர். அதிக அழுத்தத்தில் இருக்கும் உடல் உள்ளுறுப்புகள், மாறிய இதயத்துடிப்பு, ரத்தத்தை சேமித்து வைத்தல், ஒருவகையான ஆதரவு உறுப்பு போன்றவை இதில் அடங்கும்.
புவியீர்ப்பு விசைக்கு எதிராக...
தரையிலிருந்து 19 அடி (ஆறு மீட்டர்) வரை வளரக்கூடிய ஒட்டகச் சிவிங்கிகளுக்கு, இதயத்திலிருந்து புவியீர்ப்பு விசைக்கு எதிராக நெடுந்தூரம் பயணித்தால் மட்டுமே தலைவரை ரத்தம் பாயும். தலையில் உள்ள ரத்த அழுத்தம் 110/70 இருப்பதுதான் பாலூட்டிகளுக்கு இயற்கையானது.
தலையில் இந்த அழுத்தம் கிடைக்கவேண்டுமானால், ஒட்டகச் சிவிங்கிகளின் இதயத்தில் 220/180 அழுத்தம் இருக்கவேண்டும். அது ஒட்டகச் சிவிங்கிகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் இதே அளவு அழுத்தம் இருந்தால் மற்றவர்களுக்கு இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, கால்கள் வீக்கம் போன்ற பல சிக்கல்கள் ஏற்படும்.
ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாகவே இருந்தால் இதயத்தின் சுவர்கள் தடிமனாக மாறும். இடதுபக்க கீழறைகள் தடித்து விறைத்துப் போவதால் ஒவ்வொரு துடிப்பின்போதும் ரத்தம் நிரம்புவது குறையும். இதனால் டிஸ்டோலிக் இதய செயலிழப்பு ஏற்படுகிறது. உடல் சோர்வு, மூச்சிரைப்பு, உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை ஆகியவை ஏற்படுகின்றன. அமெரிக்காவில் வருடத்துக்கு ஏற்படும் 6.2 மில்லியன் இதய செயலிழப்புகளில் பாதி அளவு இப்படிப்பட்ட உபாதையால் வருபவை.
ஹார்வார்ட் - யூசிஎல்ஏவைச் சேர்ந்த இதய மருத்துவ நிபுணரும் பரிணாம உயிரியலாளருமான பார்பரா நாட்டர்சன்-ஹோரோவிட்ஸ் தமது மாணவர்களுடன் இணைந்து, ஒட்டகச் சிவிங்கிகளின் இதயத்தை ஆராய்ந்தார். அதிக ரத்த அழுத்தத்தால் ஒட்டகச் சிவிங்கிகளின் இடதுபக்கக் கீழறை தடிமனாகிறது என்றாலு அது விரைத்துப் போவதில்லை என்று கண்டறிந்தார். நார்த்தன்மை கொண்டதாகவும் இதயக் கீழறை மாறவில்லை.
அறைச் சுவர்கள் மாறாத அளவுக்கு ஐந்து மரபணு மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. 2016ல் நடந்த ஓர் ஆய்வில், இதயம், ரத்த அழுத்தம், ரத்த ஓட்டம் தொடர்பான பல மரபணு மாறுதல்கள் ஒட்டகச்சிவிங்கிகளின் உடலில் கண்டுபிடிக்கப்பட்டன. மார்ச் 2021ல், நார்த்தன்மை கொண்டதாக இதய அறையை மாற்றுவதற்கான மரபணுக்களில் மாறுதல் இருந்தது கண்டறியப்பட்டது.
ஒட்டகச் சிவிங்கிகளின் இதயத் துடிப்பு முறையும் வித்தியாசமானது. ஒட்டகச் சிவிங்கிகளின் உடலில் இதயத்தின் கீழறை நிரம்பும் நேரம் அதிகமாக இருக்கிறது என்று பார்பரா கண்டறிந்தார். (அவரது ஆய்வு முடிவுகள் இன்னும் பிரசுரிக்கப்படவில்லை). இதனால் ஒவ்வொரு இதயத்துடிப்பின்போதும் அதிகமான ரத்தம் உடலுக்குள் அனுப்பப்படுகிறது. ஆகவே தடிமனான சுவர் கொண்ட இதயமாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு ஒட்டகச் சிவிங்கியால் வேகமாக ஓடமுடிகிறது. "ஓடுகிற ஒரு ஒட்டகச் சிவிங்கியின் வீடியோவைப் பார்த்தாலே இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு அது தீர்வு கண்டுபிடித்துவிட்டது என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்" என்கிறார் பார்பரா.
அடுத்ததாக, பேறுகாலத்தின்போது உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பிரச்னைகளை ஒட்டகச் சிவிங்கிகள் எப்படி எதிர்கொள்கின்றன என்று பார்பரா ஆராய்ந்து வருகிறார். பேறுகாலத்தின்போது அதிக ரத்த அழுத்தம் இருந்தால் கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, தொப்புள்கொடி அறுந்துவிழுதல் போன்ற பல ஆபத்துகள் ஏற்படும். இது ப்ரீ எக்ளாம்சியா என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இதுபோன்ற பிரச்னைகள் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு வருவதில்லை. கர்ப்பமான ஒட்டகச் சிவிங்கிகளின் சூல்வித்தகத்தை (நஞ்சுக்கொடி) ஆராய்வதன் மூலம் இதற்கு பதில் கண்டுபிடிக்க முடியும் என்று பார்பரா நம்புகிறார்.
ஒட்டகச் சிவிங்கிகளின் கால்கள் வீங்குவதில்லையே ஏன்?
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களின் ரத்த நாளங்களிலிருந்து தண்ணீர் வெளியேறி திசுக்களில் சேர்ந்துவிடும். ஆகவே அவர்களுக்குக் காலில் வீக்கம் இருக்கும். ஆனால் ஒட்டகச் சிவிங்கிகளின் கால்கள் மெலிந்தே காணப்படுகின்றன.
ஒட்டகச் சிவிங்கிகளுக்கு இந்தப் பிரச்னை வருவதில்லை என்பது தெரிகிறது. "அதிக ரத்த அழுத்தம் இருந்தாலும் அவற்றின் கால்கள் வீங்குவதில்லையே? அவை எப்படி அழுத்தத்திலிருந்து தப்பிக்கின்றன?" என்று கேட்கிறார் டென்மார்க்கின் ஆர்ஹௌஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இதய இயக்கவியல் நிபுணர் கிறிஸ்டியன் ஆல்க்ஜேயர். 2021 ஆனுவல் ரெவ்யூ ஆஃப் பிசியாலஜி (Annual Review of Physiology) சஞ்சிகையில் இவர் ஒட்டகச் சிவிங்கிகளின் ரத்த அழுத்தம் பற்றி எழுதியிருக்கிறார்.
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு செவிலியர்கள் ஒரு நீண்ட சாக்ஸை அணிவிப்பார்கள். இவை இறுக்கமாகத் தசையைப் பிடித்துக்கொள்வதால் திசுக்களில் தண்ணீர் சேர்வதில்லை. கிட்டத்தட்ட ஒட்டகச் சிவிங்கிகளின் உடலிலும் இதுபோன்ற ஓர் அமைப்பு இருக்கிறது. இவற்றின் கால்களில் ஓர் அடர்த்தியான இணைப்புத் திசு இருக்கிறது. வேறு ஒரு காரணத்துக்காக மயக்க மருந்து தரப்பட்டிருந்த நான்கு ஒட்டக சிவிங்கிகளின் கால்களில் சலைன் திரவத்தை ஏற்ற முயற்சி செய்தார் கிறிஸ்டியன். அதே ஊசியைக் கழுத்தில் செலுத்துவது இலகுவாக இருந்தது. காலில் ஊசி போடுவதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. அதை வைத்து இந்த இணைப்புத் திசுகக்ள் நீர் சேராமல் தடுக்கின்றன என்று கண்டுபிடித்தார்.
ஒட்டகச் சிவிங்கிகளின் முட்டிகளில் உள்ள தமனிகளின் சுவர் தடிமனாக இருப்பதாகவும், அதுவும் ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது எனவும் கிறிஸ்டியன் உள்ளிட்டோர் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் கால்களில் ரத்த அழுத்தம் குறைகிறது. தோட்டத்துக்கு நீரூற்றும் ஹோஸ் பைப்பில் உள்ள ஒரு சின்ன வளைவுக்கு அடுத்து நீரோட்டம் குறைந்து, அழுத்தமும் குறையும்.
அதைப் போல இது செயல்படுகிறது. ஆனால் இவற்றைத் தேவையானபோது திறந்து மூடி ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வசதி ஒட்டகச் சிவிங்கிகளிடம் உண்டா என்று தெரியவில்லை. அப்படி ஓர் அமைப்பு இருப்பதை கற்பனை செய்துபார்க்க நன்றாக இருக்கிறது. ஆனால் அது உண்டா என்று தெரியவில்லை" என்கிறார் கிறிஸ்டியன்.
கிறிஸ்டியனுக்கு இன்னொரு கேள்வியும் உண்டு. தண்ணீர் குடிக்க இவை தலையைக் குனியும்போது, திடீரென்று ரத்த அழுத்தம் குறையும். அதனால் மோசமான தலைசுற்றல் ஏற்படும். ஆனால் ஒட்டகச் சிவிங்கிகள் மயங்கிவிழுவதில்லை, அது ஏன்?
தலைசுற்றல் இல்லை
இதுபோன்ற திடீர் மாற்றங்களை சமன் செய்யும் அமைப்பு ஒட்டகச் சிவிங்கிகளின் உடலில் உண்டு. மயக்க மருந்து தரப்பட்ட ஒட்டகச் சிவிங்கிகளில், தலை கீழே இருக்கும்போது கழுத்தில் உள்ள ரத்த நாளங்களில் நிறைய ரத்தம் சேர்கிறது. கிட்டத்தட்ட ஒரு லிட்டர் வரை இங்கு ரத்தம் சேர்கிறது. இதனால் இதயத்துக்குப் போகும் ரத்தம் குறைந்து, இதயத்தின் அழுத்தமும் குறைகிறது. தலை தூக்கப்படும்போது அந்த ரத்தம் மீண்டும் இதயத்துக்கு வந்து மூளைக்குப் பயணிக்கிறது.
ஒட்டகச் சிவிங்கிகள் விழித்திருக்கும்போதும் இது நடக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் நடமாடிக்கொண்டு இருக்கும் ஒட்டகச் சிவிங்கிகளின் உடலில் அவர் சென்சார்கள் பொருத்தியிருக்கிறார், தரவுகளுக்காகக் காத்திருக்கிறார்.
ஒட்டகச் சிவிங்கிகளின் இந்த உடல் அமைப்பிலிருந்து நமக்கு ஏதாவது மருத்துவ ஆதாயங்கள் கிடைக்குமா? இதுவரை நேரடியாக எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அது நடக்கும் என்கிறார் பார்பரா. மனிதர்களின் உயர் ரத்த அழுத்தம் பற்றிய புரிதல்கள் இதிலிருந்து கிடைக்கவில்லை என்றாலும், ரத்த அழுத்தம் பற்றிய நம் பார்வையை மாற்றி சில புதிய தீர்வுகளை நோக்கி நாம் பயணிக்க இது ஒரு வாய்ப்பு தருகிறது.
பிற செய்திகள்:
- திருடிய பணத்தில் 2,000 கோடி ரூபாயை திருப்பி தந்த கிரிப்டோகரன்சி ஹேக்கர் - ஏன்?
- பருவநிலை மாற்ற ஆபத்து: மீத்தேன் வாயுவுக்கு கடிவாளம் போட்டால் கொஞ்சம் வாய்தா வாங்கலாம்
- எஸ்.பி. வேலுமணி வீட்டில் ரெய்டு: வேலூரா புழலா? அதிமுக கூட்டத்தில் காரசார விவாதம்
- ஆப்கானிஸ்தான் அரசு - தாலிபன் போர் 20 ஆண்டுகளாக நீடிப்பது ஏன்? - விரிவான பின்னணி
- டோக்யோ ஒலிம்பிக்: நிர்வாணமாக குளிக்குமாறு இந்தியர்களிடம் கூறப்பட்டது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்