You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் தீ: என்ன நடந்தது என அமெரிக்கா, ரஷ்யா தகவல்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) புதிதாக அனுப்பப்பட்ட ரஷ்ய கலன் (module) ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக திடீர் கோளாறு ஏற்பட்டது என்று அதை நிர்வகிப்பவர்கள் தெரிவித்துள்னர்.
இந்தக் கோளாறு கட்டுப்பாட்டுக் குழுவினரால் சரிசெய்யப்பட்டது என்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் நன்றாக இயங்குவதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த வேறு ஒரு கலனில் இருந்த உந்துகை கருவிகள் இயக்கபட்டபோது இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது.
இந்த திடீர் விபத்து நிகழ்ந்தபோது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த ஏழு விண்வெளி வீரர்களுக்கும் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்று அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வியாழன்று ரஷ்யாவின் 'நௌகா' (Nauka) கலன் ஐ.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்ட சில மணி நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தீ உண்டானது எப்படி?
இந்தக் கலனின் உந்துவிசை உண்டாகும் கருவிகள் இயக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக தீயைக் கக்கத் தொடங்கின, இதனால் ஐ.எஸ்.எஸ் அது நிலைநிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து 45 டிகிரி கோணத்தில் நகர்ந்தது என்று நாசா தெரிவித்துள்ளது.
மீட்பு நடவடிக்கைகளுக்கு பின்னர் ஐ.எஸ்.எஸ் பழைய நிலைக்கே வந்து விட்டதாகவும், நன்றாக இயங்குவதாகவும் நாசா கூறுகிறது.
இந்தக் கோளாறு ஏற்பட்டபோது ஐ.எஸ்.எஸ் உள்ளே இருந்த விண்வெளி வீரர்கள் உடனான தகவல் தொடர்பு பல நிமிடங்களுக்கு துண்டித்துப்போனது.
எனினும், ஒரு நொடிக்கு அரை டிகிரி கோணத்தில் மட்டுமே ஐ.எஸ்.எஸ் நகர்ந்ததால், அதை உள்ளே இருந்தவர்களால் உணர முடியவில்லை.
13 மீட்டர் நீளமும் 20 டன் எடையும் உள்ள நௌகா கலன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்ய பகுதிகளுக்கு கூடுதல் அம்சமாகியுள்ளது.
இது 2007ஆம் ஆண்டே விண்ணில் ஏவப்பட்டிருக்க வேண்டும் . ஆனால், இதை உருவாக்குவதில் இருந்த தொழில்நுட்ப மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் அடுத்தடுத்து தாமதம் ஏற்பட்டது.
கஜகஸ்தானில் உள்ள பைகோனுர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இது கடந்த வாரம் ஏவப்பட்ட பின்னரும் இதில் உந்துகை சிக்கல்கள் இருந்தன. அதை மாஸ்கோவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டாளர்கள் சரி செய்தனர்.
இறுதியாக திட்டமிடப்பட்ட அதே தேதியில் இது ஐ.எஸ்.எஸ் உடன் விண்ணில் இணைக்கப்பட்டது.
இந்தப் புதிய கலன் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதால் ஐ.எஸ்.எஸ்-இன் வசிப்பிடப் பகுதி 70 கியூபிக் மீட்டர் அளவுக்கு பெரிதாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்