நியாண்டர்தால் பற்களில் தொடரும் ஆராய்ச்சி: நவீன மனிதர்களோடு கலந்திருக்கலாம் என தகவல்

பட மூலாதாரம், JOURNAL OF HUMAN EVOLUTION
வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பற்கள் ஜெர்ஸி தீவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. அப்பற்கள், நியாண்டர்தால் மற்றும் தற்போதைய நவீன மனித இனக்குழு கலந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
1910 - 1911 கால கட்டத்தில் லா கோட்டே டி செயின்ட் ப்ரெலேடே என்கிற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 13 பற்களையும் பிரிட்டன் நிபுணர்கள் மீண்டும் ஆய்வு செய்திருக்கிறார்கள்.
அப்பற்கள் நீளமானதாக இருந்தன, நியாண்டர்தால் இனக்குழுவின் பற்களாகவே கருதப்பட்டன. ஆனால் மறு ஆய்வுக்கு உட்படுத்திய போது, அப்பற்களில் தற்கால மனிதர்களின் குணநலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இப்பற்கள் கடைசிகால நியாண்டர்தால் மனித எச்சங்களைக் குறிக்கலாம்.
நியாண்டர்தால் இனம் எப்படி காணாமல் போனது என்பதற்கான காரணத்தைக் கூட வெளிப்படுத்தலாம்.
நியாண்டர்தால் மனிதர்கள் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தார்கள். மேற்கு ஐரோப்பியா முதல் சைபீரியா வரை பல பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள்.
நியாண்டர்தால் மனிதர்கள் பொதுவாகவே கொஞ்சம் குட்டையாகவும், தற்கால மனிதர்களை விட வலுவாகவும் இருந்தார்கள்.
இறுதியாக நியாண்டர்தால் மனிதர்கள் சுமாராக 40,000 ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்கள். ஹோமோ செபியன்ஸ் என்றழைக்கப்பட்ட நவீன கால மனித இனக் குழு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு வந்து வாழத் தொடங்கினார்கள்.
இந்த இரண்டு இனக் குழுக்களும் சுமாராக 5,000 ஆண்டுகள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம்.
இதற்கு முன், இந்த பற்கள் நியாண்டர்தால் இனக்குழுவைச் சேர்ந்த ஒரு தனி மனிதரின் பற்கள் எனக் கருதப்பட்டது. ஆனால் புதிய ஆராய்ச்சியில் இப்பற்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆடவர்களுடையதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த பற்களைக் குறித்து மேலதிகமாக தெரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் கம்ப்யூடட் டோமோகிராபி என்கிற ஸ்கேனைச் செய்திருக்கிறார்கள்.
இரு இனக்குழுவும் முதாதயர்களாக இருக்கலாம்
இந்த பற்கள் எல்லாவற்றிலுமே நியாண்டர்தால் இனக்குழுவின் குணநலன்கள் காணப்படுகின்றன. ஆனால் அதன் வடிவங்கள், தற்கால நவீன மனித இனக்குழுவோடு ஒத்துப் போகின்றன.

பட மூலாதாரம், JOURNAL OF HUMAN EVOLUTION
நவீனகால மனித இனக்குழுவும், நியாண்டர்தால் இனக்குழுவும் 45,000 ஆண்டுகளுக்கு முன் ஒரே காலகட்டத்தில் ஐரோப்பாவின் சில பகுதிகளில் வாழ்ந்திருக்கலாம் என்பதால், லா கோட்டே தனிநபர்களிடம் காணப்படும் வழக்கத்துக்கு மாறான குணநலன்கள், நியாண்டர்தால் மற்றும் நவீன கால மனித இனக்குழுவினர் என இருவருமே முதாதயர்களாக இருக்கலாம் என்கிறது" என லண்டனில் இருக்கும் 'நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தைச்' சேர்ந்த பேராசிரியர் மற்றும் இவ்வாராய்ச்சியின் தலைவர் க்ரிஸ் ஸ்ட்ரிங்கர் கூறுகிறார்.
அப்போது இந்த தனிநபர்கள் உயிரோடு இருந்தார்கள். இந்தப் பகுதியில் அப்போது தட்பவெப்பநிலை இப்போது இருப்பதை விட குளிர்ச்சியாக இருந்தது, கடல் மட்டம் கூட 10-க்கும் மேற்பட்ட மீட்டர் தாழ்வாகவே இருந்தது.
"இந்த பகுதியில் பள்ளத்தாக்குகள் முட்டுச் சந்துகள் போல இருப்பதாலும், பல்வேறு குழிகள் இருப்பதாலும் வேட்டையாட அருமையான இடமாக இருந்திருக்கலாம்" என்கிறார் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் 'இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்கியாலஜி'-யைச் சேர்ந்த முனைவர் மேட் போப். இந்த ஆராய்ச்சித் தாளை எழுதியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பற்கள் 48,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். நியாண்டர்தால் இனக் குழு அழிந்ததாகக் கருதப்படும் 40,000 ஆண்டுகளோடு இது நெருக்கமாக இருக்கிறது.
எனவே, நியாண்டர்தால் இனக் குழு அழிவதற்கு பதிலாக, அவ்வினக் குழு, நவீன கால மனித இனக்குழுவால் உறிஞ்சிக் கொள்ளப்பட்டார்களா?
"மற்ற கருத்துக்களோடு, இந்த கருத்தையும் நாம் தீவிரமாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மரபணுக் கலவை குறித்து நமக்கு தெளிவான புரிதல் ஏற்படும் போது இது வெளிப்படும்" எனக் கூறுகிறார் முனைவர் போப்.
"அந்தப் பற்களில் இருந்து மனிதர்களின் பழங்கால டி.என்.ஏ மரபணுக்களை எடுப்பதன் மூலம், இந்த இனக்குழு கலப்பு என்கிற யோசனையை சோதித்துப் பார்க்கலாம். அது தொடர்பான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன" என்கிறார் பேராசிரியர் ஸ்ட்ரிங்கர்.
பிற செய்திகள்:
- விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லையில் தடுக்கப்பட்ட தமிழக எம்.பி.க்கள் - காவல்துறையுடன் வாக்குவாதம்
- ஈஷா சிங்: தடைகளை சுட்டுத்தள்ளும் இந்திய இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை
- INDIA Vs ENGLAND: முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடரில் யாருக்கு வெற்றி?
- மியான்மர் ஆட்சிக்கவிழ்ப்பு: ஐ.நா பொதுச் செயலர் கண்டனம், ராணுவத்தால் ஃபேஸ்புக் முடக்கப்பட்டதாக தகவல்
- "பசிக்கின்றதா..எடுத்துக்கோங்க..." - ஆதரவற்றோருக்கு இலவசமாக பிரியாணி வழங்கும் பெண்
- 'எனது திராவிட நாட்டுக்கு உரிமை கேட்கிறேன்' - நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா
- அமேசான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












