அமெரிக்காவில் மாசுபடுத்தும் வாயு வெளியாவது பெருமளவு வீழ்ச்சி: கொரோனா காரணம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மேட் மெக்ராத்
- பதவி, சூழலியல் செய்தியாளர்
கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா வைரஸால் அமெரிக்காவின் பசுமை இல்ல வாயு உமிழ்வு முதல் முறையாக கடந்த 1990-ம் ஆண்டு உமிழ்வளவுக்கு சரிந்திருக்கிறது.
ரோடியம் என்கிற ஆராய்ச்சிக் குழுவின் முதற்கட்ட மதிப்பீட்டில், அமெரிக்காவின் பசுமை இல்ல வாயு உமிழ்வு ஒட்டுமொத்தமாக 10 சதவீதம் சரிந்திருப்பதாக் குறிப்பிடுகிறது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படும் மிகப்பெரிய சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து துறை தான் கொரோனா கட்டுப்பாடுகளால் அதிகம் பாதிக்கப்பட்டது. அதே துறை தான் பசுமையில்ல வாயு உமிழ்வில் கடந்த 2019-ம் ஆண்டை விட 15 சதவீதம் குறைந்த அளவுக்கு பசுமை வாயுவை வெளியிட்டிருக்கிறது.
மின்சார உற்பத்தியில் நிலக்கரி பயன்பாட்டளவு குறைந்திருப்பதால் எரிசக்தி துறையின் பசுமையில்ல வாயு உமிழ்வும் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் 2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் இறந்து போயிருக்கிறார்கள்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. எனவே கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், அமெரிக்காவில் பொருளாதார நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முழுமையாக நின்றன. இது பசுமை இல்ல வாயு உமிழ்வில் பெரிய நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சர்வதேசப் பயணங்கள் மற்றும் அவசியமற்ற பயணங்கள் மீதான கட்டுப்பாடுகளால் போக்குவரத்துத் துறையின் எரிபொருள் தேவை பெரிய அளவில் குறைந்தது.
பயணக் கட்டுப்பாடுகள் உச்ச கட்டத்திலிருந்தபோது, விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் தேவை, கடந்த 2019-ம் ஆண்டை விட 68 சதவீதம் குறைந்தது. பெட்ரோலின் தேவை 40 சதவீதம் குறைந்தது.
பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் மெல்ல விலக்கப்பட்ட பின், இந்த இரு எரிபொருளின் தேவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கியது. ஆனால் கடந்த டிசம்பர் 2020-ல் கூட விமான எரிபொருளின் தேவை, 2019 டிசம்பரில் இருந்ததை விட 35 சதவீதம் குறைந்திருக்கிறது.
மின்சரத்துக்கான தேவை இரண்டு சதவீதம்தான் குறைந்தது, ஆனால் மின்சாரத் துறையின் பசுமை இல்ல வாயு உமிழ்வு 10 சதவீதத்துக்கு மேல் சரிந்திருக்கிறது.
"மின்சார உற்பத்திக்கு நிலக்கரியைப் பயன்படுத்துவது தொடர்ந்து குறைந்ததுதான் இந்த சரிவுக்கு பிரத்யேக காரணம்" என்கிறது ஓர் அறிக்கை.
பல தசாப்த காலமாக நிலக்கரி கோலோச்சிய பிறகு, 2020-ம் ஆண்டில் கூட இயற்கை எரிவாயு மற்றும் அணுசக்திக்குப் பிறகு, மின்சார உற்பத்திக்கு அமெரிக்கா அதிகம் பயன்படுத்துவது நிலக்கரியைதான்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி 18 சதவீதம் பங்களிக்கிறது. நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 20 சதவீதமாக இருக்கிறது என அவ்வறிக்கை கூறுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டுக்கான முதல் கட்ட தரவுகளின் படி, அமெரிக்காவின் பசுமையில்ல வாயு உமிழ்வு, கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு, 1990 அளவுக்குக் கீழ் சென்றிருக்கிறது என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.
கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது பசுமையில்ல வாயு உமிழ்வின் அளவு 6.3 சதவீதம் குறைந்தது. தற்போது 2020-ம் ஆண்டில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பசுமையில்ல வாயு உமிழ்வு 10.3 சதவீதமாக குறைந்திருக்கிறது.
உலக அளவில் பருநிலை தொடர்பான விவாதங்களில், அமெரிக்கா 2005-ம் ஆண்டைத் தான் தன்னுடைய அடிப்படை மதிப்பீடு ஆண்டாகக் கூறும்.
2020-ம் ஆண்டில் வெளியான பசுமையில்ல வாயுவை, 2005-ம் ஆண்டோடு ஒப்பிட்டால் 21.5 சதவீதம் குறைவு. இது 2009 கோபன்ஹேகன் ஒப்பந்தத்தில் அமெரிக்கா தனக்கு தானே வைத்துக் கொண்ட பசுமையில்ல வாயு உமிழ்வு இலக்கை இது மிஞ்சிவிட்டது.
2005-ம் ஆண்டு பசுமையில்ல வாயு வெளியீட்டு அளவைவிட 26 - 28 சதவீதம் குறைப்பதாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா உறுதியளித்தது. பிறகு அந்த ஒப்பந்தத்தில் இருந்தே அமெரிக்கா வெளியேறியது வேறு.

பட மூலாதாரம், Getty Images
"பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய அமெரிக்கா பணியாற்றியதாக கடந்த ஆண்டை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது" என்கிறது அறிக்கை.
"கடுமையான பொருளாதார பாதிப்புகள் மற்றும் ஏகப்பட்ட மனித உயிரிழப்புகள் இந்த கொரோனா வைரஸால் ஏற்பட்டிருப்பதால், இது கொண்டாட்டத்துக்கான காரணமல்ல".
2021-ம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் 3 - 4 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பசுமையில்ல வாயு உமிழ்வும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
பிற செய்திகள்:
- Ind Vs Aus 4வது டெஸ்ட்: களமிறங்கிய தமிழ்நாடு வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர்
- “கொரோனா தொற்று மாதக்கணக்கில் நோய் எதிர்ப்பு திறனை வழங்கலாம்”
- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த வீரர்களாக இருவர் தேர்வு, ஒரு காளை உயிரிழப்பு
- அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேறியது: பதவி நீக்கம் இருக்குமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












