பருவநிலை மாற்றம்: கிரீன்லாந்தில் `வரலாறு காணாத அளவு' பனி கரைந்தது

    • எழுதியவர், மேட் மெக்ராத்
    • பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர்

கிரீன்லாந்தில் பனிக்கட்டிகள் இழப்பு கடந்த ஆண்டு மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது, முந்தைய உச்சத்தைவிட 15 சதவீதம் அதிகரித்தது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பனி உருகுவதில் 1948ல் இருந்து எடுக்கப்பட்டுள்ள பதிவுகளில் `வரலாறு காணாத அளவுக்கு' அங்கு உருகி இருப்பதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த கோடையின் போது, கிரீன்லாந்து பகுதியில் தடைபட்டு நின்ற உயர் அழுத்த மண்டலங்கள் தான் இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

ஆனால் கார்பன் வாயு உற்பத்தி அதிகரிப்பு காரணமாக, கிரீன்லாந்து பகுதி அதிகம் பனி உருகும் பகுதியாக மாறி வருகிறது என்று கட்டுரையாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளில் கிரீன்லாந்தில் அதிக அளவில் பனி உருகியதால் உலக அளவில் கடல்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

1990களில் இருந்ததைவிட இப்போது 7 மடங்கு அதிகமாக அங்கு பனி உருகிக் கொண்டிருக்கிறது என்று கடந்த டிசம்பரில் வெளியான கிரீன்லாந்து குறித்த முக்கியமான சர்வதேச அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அந்தப் பாணி அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று இன்றைய புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Grace மற்றும் Grace-FO செயற்கைக்கோள்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தியும், பருவநிலை மாடல்கள் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தியும் கடந்த ஆண்டு முழுக்க கிரீன்லாந்தில் 532 கிகா டன்கள் அளவுக்குப் பனி உருகியுள்ளது - அது 2012ல் இருந்ததைவிட அதிகம் என்று கட்டுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உலக அளவில் கடல் மட்டத்தை 1.5 மில்லி மீட்டர் அதிகரிப்பதற்கு இணையாக இந்த இழப்பு உள்ளது. கடல் மட்ட உயர்வில் ஆண்டு சராசரியில் இத 40 சதவீதமாக உள்ளது.

வட-மேற்கு கிரீன்லாந்து வழியாக 2019ல் பயணம் செய்தபோது பருவநிலை மாற்ற விஞ்ஞானி ஸ்டெபென் ஓல்சென் இந்தப் படத்தை எடுத்தார்.

பிரிட்டன் முழுக்க 2.5 மீட்டர் அளவுக்கு நீரால் மூடியதற்கு இணையானதாக, 2019 ஆம் ஆண்டில் பனி உருகியுள்ளது என்று டென்மார்க் பருவநிலை விஞ்ஞானி மார்ட்டின் ஸ்டென்டெல் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டும், 2012 ஆம் ஆண்டும் உயர் அழுத்த மண்டலப் பகுதிகள் கிரீன்லாந்து பகுதியில் உருவானதால் உருகும் நிலைமை அதிகரித்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

``கிரீன்லாந்தில் பனி உருகும் நிலை மேலும் மேலும் அதிகரிக்கும் காலக்கட்டத்தை நாம் எட்டியிருக்கிறோம்''என்று ஜெர்மனியில் பிரெமெர்ஹாவெனில் உள்ள ஆல்பிரெட் வெகேனர் கல்வி நிறுவனத்தின் முதன்மை கட்டுரையாளர் டாக்டர் இங்கோ சாஸ்ஜென் கூறியுள்ளார்.

``2012 அல்லது 2019 ஆம் ஆண்டு நிகழ்வு போல மற்றொரு நிகழ்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதுபோன்ற தீவிர உருகுதல் சூழ்நிலையில், பனி எப்படி தகவமைப்பு செய்து கொள்ளும் என்பது நமக்குச் சரியாகத் தெரியாது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

``நாம் அறிந்திராத, மறைந்துள்ள செயல்பாடுகள் ஏதும் இருக்கலாம் அல்லது மிகச் சரியாக இதுவரையில் விவரிக்கப்படாத தன்மை கொண்டவையாக அது இருக்கலாம். அது நமக்கு சில ஆச்சர்யங்களை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம்'' என்கிறார் அவர்.

2019ல் உருகிய பனியின் அளவு புதிய உச்சத்தைத் தொட்டது. 2018 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் உருகிய பனியின் அளவு 2003க்குப் பிந்தைய எந்த ஒரு இரண்டாண்டு காலத்தையும்விட குறைவாகவே இருந்தது.

கிரீன்லாந்தில் கோடை பருவம் மிக குளிராக இருந்ததும், இளவேனில் பருவம் கடும் பனிப்பொழிவு கொண்டதாக இருந்ததும் இதற்குக் காரணங்களாக இருந்தன என்று கட்டுரையாளர்கள் கூறுகின்றனர்.

இருந்தபோதிலும் 2019ல் மீண்டும் அதிக அளவுக்குப் பனி உருகி இருப்பது பெரும் கவலையைத் தருவதாக உள்ளது. கடந்த தசாப்தத்தில் ஐந்து ஆண்டுகளில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

``இதன் தொடரும் போக்கு தான் கவலை தருவதாக இருக்கிறது'' என்று கோபன்ஹேகனில் உள்ள டென்மார்க் வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ரூத் மோட்ராம் தெரிவித்தார். இவர் இந்த ஆய்வில் பங்கேற்கவில்லை.

``தற்போது கணிக்கப்படும் போக்கு மற்றும் இதர செயல்பாடுகள் உச்சபட்ச நிலையைக் குறிப்பிடுவதாக உள்ளன'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020ல் இதுவரையில் கிரீன்லாந்தில் சராசரி சூழ்நிலை நிலவுகிறது. சமீப ஆண்டுகளாக அதிக அளவில் பனி உருகுவதால், உலகம் முழுக்க தாழ்வான பகுதிகளில் வாழ்பவர்களின் நிலை அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது.

``2019 ஆம் ஆண்டுக்கான ஆய்வைப் பார்த்தால், பனிப் படிவம் அதிக இழப்புக்கு ஆட்பட்டிருப்பது தெரிகிறது. ஐ.பி.சி.சி.யின் மிக மோசமான சூழ்நிலைக்கான எச்சரிக்கை நிலையை ஒட்டியதாக இது இருக்கிறது'' என்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்டி ஷெப்பர்டு கூறுகிறார்.

``அதாவது 2100 ஆம் ஆண்டு வாக்கில், கிரீன்லாந்தின் தாக்கத்தால் மட்டும் உலக அளவில் கூடுதலாக 10 சென்டிமீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயருவதை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'' என்று கூறப்படுகிறது.

``தற்போதைய செயல்பாடுகளை கிரீன்லாந்து அரசு கண்காணித்து வரும் நிலையில், மோசமான பருவநிலை எச்சரிக்கைக்காக புதியதொரு நடைமுறையை நாம் கண்டறிந்தாக வேண்டும்'' என்றும் பேராசிரியர் கூறுகிறார்.

``இப்போதைய அளவில் கிரீன்லாந்தில் பனி உருகுவது தொடருமானால், இந்த நூற்றாண்டு இறுதிக்குள் ஆண்டுதோறும் 25 மில்லியன் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

பழைய நிலைக்குத் திரும்ப முடியாத பாதையில் கிரீன்லாந்து சென்று கொண்டிருக்கிறது என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது உலகில் உற்பத்தியாகும் கார்பன் காரணமாக கிரீன்லாந்து உருகிப் போகும் என்று சொல்லப் படுகிறது.

இந்தக் கண்ணோட்டம் சரியானதாக இருக்கும் என்று டாக்டர் சாஸ்ஜென் கூறுகிறார். ஆனால், கிரீன்லாந்தின் தலைவிதி இன்னமும் நமது கைகளில் உள்ளது என்கிறார் அவர்.

``உலக வெப்பமாக்கல் வரம்புகளுக்கும் கீழாக கார்பன் உற்பத்தியை நாம் குறைத்தால், கிரீன்லாந்து காரணமாக கடல் மட்டம் திடீரென உயர்வதைத் தடுக்க முடியும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

``அதாவது கரியமில வாயு உற்பத்தியை நாம் குறைத்து, உலக வெப்பமாதலைக் குறைத்தால், கிரீன்லாந்தில் பனி உருகும் வாய்ப்பும் குறையும்'' என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கட்டுரை Communications Earth & Environment என்ற இயற்கை குறித்த இதழில் வெளியானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: