You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கொரோனா வைரஸ் ஊரடங்கு பதின்ம வயதினர் மூளை வளர்ச்சியை பாதிக்க வாய்ப்பு'
பதின்ம வயதினர், தங்கள் நண்பர்களை நேரில் பார்க்க முடியாமல், பல மாதங்களாக வீட்டில் முடங்கி இருப்பதால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நீண்டகால பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என நரம்பியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் அதிக நேரம் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவழிப்பதால், சக மனிதர்கள் உடனான கலந்துரையாடல் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த இடைவெளி பல மோசமான எதிர்வினைகளை ஏற்படுத்தும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள தனிமையால், 10 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினர் எளிதாகப் பாதிக்கப்படக் கூடியவர்கள். இந்த வயதுடையவர்கள் தங்கள் குடும்பத்தினரைவிட தங்கள் நண்பர்களுடனே அதிக நேரம் செலவிட வேண்டும் எனக் கருதுவார்கள் என்றும், மூளை வளர்ச்சிக்கு பதின்ம வயது முக்கியமான காலமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வயதில்தான் மனநல பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஊரடங்கு காரணமாக சிறார்களும், மாணவர்களும் வீட்டிலே முடங்கியிருப்பதால், அவர்களின் ஆற்றல் மற்றும் வளர்ச்சி சற்று குறையலாம் என உளவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சாரா ஜேய்ன் ப்ளாகிமோர் கூறுகிறார்.
சமூக வலைத்தளங்களில் கூட முகத்தைப் பார்த்து நேருக்கு நேர் பேசும் வாய்ப்பு உலகில் உள்ள அனைத்து பதின்ம வயதினருக்கும் கிடைப்பதில்லை என்றும் பேராசிரியர் சாரா கூறுகிறார்.
சமூக இடைவெளி என்பது நிரந்தரமானதல்ல, இந்த நிலை மாறும். ஆனால் பல மாதங்களுக்குப் பதின்ம வயதினர் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலையை மாற்றத் தீர்வு காண வேண்டும் என்கிறார் பேராசிரியர் சாரா.
சமூக வலைத்தளத்தில் நீண்ட நேரம்
12 முதல் 15 வயதுடையவர்களில் பலருக்கு சமூக வலைத்தளங்களில் கணக்குகள் உள்ளன. இன்ஸ்டாகிராம் முதல் ஆன்லைன் விளையாட்டு வரை பலவற்றை அவர்கள் இணையத்தில் செய்கின்றனர். ஒரு சில டிஜிட்டல் தகவல் தொடர்பு மூலம் பதின்ம வயதினருக்கு ஓரளவு நன்மையும் உள்ளது என்கிறார் மருத்துவர் அமி ஒர்பன்.
"ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் தனிப்பட்ட வகையில் செய்தி அனுப்புவது அல்லது வேறு ஒரு நபரின் சமூக ஊடகக் கணக்கில் நேரடியாகப் பதிவிட்டு தொடர்பாடுவது போன்றவை தனிப்பட்ட விதத்தில் உறவுகளை மேம்படுத்தும்."
"அதே நேரம் சமூக வலைத்தளங்களில் யாரிடமும் பேசாமல், மற்றவர்களின் பதிவுகளை மட்டும் நீண்ட நேரம் பார்க்கும் பழக்கம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்," என்கிறார் ஒர்பன்.
இந்தியாவில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டுள்ள போதிலும் எப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்பதில் இன்னும் தெளிவு இல்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
________________________________________