கொரோனா வைரஸ் சிகிச்சை: கபசுரக் குடிநீரை யார் எவ்வளவு பருகலாம்?

கொரோனா தொற்றின் பிரதான அறிகுறியான காய்ச்சல் மற்றும் சளியை சமாளிக்க அருந்தப்படும் சித்த மருத்துவ குடிநீரான கபசுரக் குடிநீர் பருகும் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படியே பொது மக்கள் அதை அருந்தவேண்டும் என்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் கபசுரக்குடிநீரின் பயன்பாடு குறித்த விரிவான ஆய்வு நடைபெற்றுவருகிறது.

ஆரோக்கியமான குழந்தைகள், முதியவர்கள், இளம் வயதினர், கொரோனா நோயாளிகள் என ஒவ்வொருவருக்கும் கபசுரக்குடிநீரை பருகுவதற்கான அளவை மருத்துவர்கள் வகுத்துள்ளனர்.

இதுகுறித்து பிபிசி தமிழின் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மீனாகுமாரி விரிவாக பேசினார். பேட்டியிலிருந்து:

கபசுரக்குடிநீரை யார் எவ்வளவு பருகலாம்?

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் தினமும் கபசுரக் குடிநீர் பருகவேண்டும். மற்றவர்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய அளவு மாறுபடும். ஒரு வியாதியின் தாக்கம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தாது. ஒவ்வொருக்கும் உடல்நிலை வித்தியாசமானது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறிகள் தென்படும் நபர்கள் ஆகியோர் தினமும் மூன்று வேளை 40 எம்.எல்(ml) பருகவேண்டும்.

மருத்துவர்கள், மருத்துவமனையில் பணிபுரிவோர், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் என அதிகளவிலான பொது மக்களோடு அன்றாடம் பணிபுரிவோர், பாதிக்கப்பட்டவர்களோடு அதிக நேரம் செலவிடுவோர்கள் தினமும் ஒரு வேளை 40 முதல் 50 எம்.எல் பருகலாம்.

பாதிக்கப்பட்டவர்களோடு நேரடி தொடர்பில் இருப்பவர்கள், பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என்ற நிலையில் இருப்பவர்கள் தினமும் இருவேளை 40 முதல் 50 எம்.எல் பருகலாம்.

ஆரோக்கியமானவர்கள், கொரோனா அறிகுறிகள் வருவதை தடுக்க முதலில், தொடர்ச்சியாக ஒரு வாரம் பருகலாம். உணவுக்கு பின்னர் ஒரு வேளை 40 முதல் 60 எம்.எல் வரை பருகலாம். இரண்டாவது வாரம் முதல், ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை ஒரு வேளை அதே அளவு பருகலாம்.

குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பத்து எம்.எல். கொடுக்கலாம். ஐந்து முதல் 10 வயதுள்ள குழந்தைகளுக்கு 20 எம்.எல் அளவும், 10 வயதில் இருந்து 18 வயது வரை உள்ளவர்களுக்கு 30 எம்.எல் வரை கொடுக்கலாம்.

கொரோனாவின் அறிகுறிகளை தடுப்பதற்காக கபசுரக்குடிநீரை பருகலாம் என தமிழக அரசு அறிவித்தது. கபசுரக்குடிநீர் புதிய மருந்தா? இதன் பயன்பாடு எப்போது தொடங்கியது?

கொரோனா பரவலுக்கு முன்பே கபசுரக்குடிநீர் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவுவதற்கு முந்தைய காலத்தில், காய்ச்சல் மற்றும் சளியை குறைக்க நோயாளிகளுக்கு இந்த மருந்தை அளித்தோம்.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இல்லை என்ற நிலையில், அதன் அறிகுறிகளை கட்டுப்படுத்தினால் கொரோனா தாக்கம் குறையும் என்பதால் கபசுரக் குடிநீரை பரிந்துரைத்தோம். டெங்கு தாக்கத்தின் போது நிலவேம்பு குடிநீர் அறிமுகம் ஆனது போலவே, பொது மக்களிடம் தற்போது கபசுரக் குடிநீரின் பயன்பாடு தொடங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கபசுரக் குடிநீரின் ஆற்றல் குறித்த ஆய்வுக்காக எலிகளுக்கு அந்த மருந்து அளிக்கப்பட்டது. விலங்கு நல குழுமத்தின் அனுமதியோடு ஆய்வு செய்தோம். 2000 எம்.எல். அளவு வரை பருகிய எலிகளுக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

இந்த சோதனை நல்ல முடிவுகளை தந்ததால், பின்னர் சித்த மருத்துவ நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 450 பேர் தற்காப்புக்காக அருந்தினோம். அதன் பலனால் நாங்கள் தற்காப்போடு உள்ளோம்.

இதனை தொடர்ந்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு கபத்தை குறைக்க கபசுரக் குடிநீர் அளிக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 13 மையங்களில் 20,000 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் அளிக்கப்பட்டு, அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆவணப்படுத்தி வருகிறோம்.

கபசுரக்குடிநீர் அல்லாமல் பிற மூலிகை கஷாயங்களின் பயன்பாடு குறித்து சொல்லுங்கள்.

சித்த மருத்துவத்தை பொறுத்தவரை, உணவே மருந்து என்பதை அடிப்படையாக கொண்டது. மூலிகை செடிகளில் இருந்து எடுக்கப்படும் பொருட்களை கொண்டு மருந்து தயாரிக்கிறோம். மூலிகை கலவைகளை பலவிதமாக பகுத்து சோதனை செய்த பின்னர்தான் ஒரு மருந்தை தர முடியும். இதற்கென நிபுணர் குழு உள்ளது.

தற்போது கபசுரக் குடிநீர் குறித்த ஆய்வு நடைபெறுகிறது. அதேபோல 15 விதமான மருந்து கலவைகளை கொண்டு ஆய்வு செய்கிறோம். வேப்பிலை மற்றும் மஞ்சளின் கலவையின் பரிசோதித்து வருகிறோம்.

கொரோனாவுக்கு முக்கிய அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் சளி. மூச்சுக் காற்று சீராக இருக்கவேண்டும். மூச்சுக் குழாய் செயல்பாடு சீராக இருக்கவேண்டும். கபசுரக் குடிநீர் போலவே ஆடாதோடை மணப்பாகு பயன்படுத்தலாம்.

பொது மக்கள், வீட்டில் இஞ்சி, எலுமிச்சை கலவை சாரை தினமும் இருவேளை தேநீருக்கு பதிலாக அருந்தலாம். பலவகையான மூலிகைகளை அதுகுறித்த விவரங்கள் தெரியாமல் அருந்தகூடாது. இந்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல் மற்றும் மருத்துவரின் துணையோடு ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்றவாறு மூலிகை கஷாயங்களை பயன்படுத்துவது நல்லது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: