You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திர கிரகணம்: எங்கெல்லாம் தெரியும்? எப்போது, எப்படி காணலாம்?
- எழுதியவர், கிருத்திகா கண்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம், ஜூன் 5ஆம் தேதி மற்றும் ஜூன் 6ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழவுள்ளது.
இந்திய நேரப்படி, ஜூன் 5ஆம் தேதி இந்திய / இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணி முதல், சனிக்கிழமை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும்.
ஆசியா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்ரிக்கா ஆகிய கண்டங்களில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும்.
தெளிவான வானிலை இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் இந்த கிரகணத்தை முழுமையாகக் காணமுடியும்.
சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளியை நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும். நாளை நிகழப்போகும் கிரகணம், முழுமையான கிரகணம் அல்ல.
சந்திர கிரகணத்தின்போது, நடுவில் இருக்கும் 'அம்ரா' (Umbra) எனப்படும் பூமியின் நிழலின் உட்பகுதி நிலவின் மேற்பகுதி மீது விழும்.
அவ்வாறு விழும் நிழல், நிலவை முழுமையாக மறைப்பதால், நிலா சிவப்பு நிறத்தில் தெரியும். அதுவே 'பிளட் மூன்' (குருதி நிலவு) என்று அழைக்கப்படுகிறது.
பெனம்ரா சந்திர கிரகணம் என்றால் என்ன?
நாளை, ஜுன் 5ஆம் தேதி இரவு முதல் நிகழப்போகும் சந்திர கிரகணம், பெனம்ரா (Penumbra) சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கிரகணத்தின்போது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை.
கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். அவ்வாறு விழுவதால், சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியும்.
புறநிழல் என்பது பூமியின் நிழலின் வெளிப்பகுதியாகும்.
இதே போன்ற 'புறநிழல் நிலவு மறைப்பு' எனப்படும் சந்திர கிரகணம்தான் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதியும் நிகழ்ந்தது.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, பிர்லா கோளரங்கத்தின் தொழில்நுட்ப அலுவலர் பாலகிருஷ்ணன், "இது பெனம்ரா கிரகணம் (புறநிழல் நிலவு மறைப்பு) என்பதால், சந்திரன், பௌர்ணமி நிலவு போலவே காட்சி அளிக்கும். நிலவின் வண்ணத்தில் ஏற்படும் மாற்றத்தை நம்மால் முழுமையாக பார்க்க முடியாது." என்கிறார்.
"இத்தகைய கிரணத்தின்போது, சூரியனின் ஒளி, சிறிதளவு நிலவில் நேரடியாக விழும். அதனால், நிலவின் வண்ணத்தின் ஏற்படும் மாற்ற பெரிதாக நம் கண்களுக்கு தெரியாது," என்று விளக்குகிறார்.
நாளை சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் (கதிரவ மறைப்பு) இரண்டு வாரங்களில் நிகழவுள்ளது.
அது ஜூன் 21ஆம் தேதி காலை 9.15 முதல் மதியம் 3.04 வரை நிகழும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: