You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பூமியின் ஓசோன் படலத் துளை தானாக மூடியது - மீண்டும் உண்டாக வாய்ப்புண்டா?
பூமியின் வட துருவ பகுதியிலுள்ள ஓசோன் படலத்தில் சென்ற மாதம் கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை தானே மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் வட துருவ பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் மிகப் பெரிய துளையை கண்டறிந்துள்ளதாக கடந்த மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் கோப்பர்நிகஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவையகத்தின் (CAMS) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இது விரைவில் வடக்கு அரைக்கோளத்தில் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை காணாத மிகப்பெரிய துளையாக வளர்ந்தது.அந்த துளை கிரீன்லாந்து நாட்டின் அளவுக்கு பரந்து விரிந்து இருந்ததாக அப்போது கூறப்பட்டது.இந்நிலையில், "வட துருவத்தின் ஓசோன் படலத்தில் இந்தாண்டு கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை முடிவுக்கு வந்தது" என்று காம்ஸ் தனது ட்விட்டரில் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் ஓசோன் படலம் முக்கியமானது?
சூரியனிலிருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் பூமியின் நிலப்பரப்பை அடையாமல் காக்கும் இயற்கையாக அமைந்த பாதுகாப்பு கட்டமைப்பே ஓசோன் படலம்.
வளிமண்டலத்தின் மூன்றாவது அடுக்கான ஸ்ரெட்டோஸ்பியரில்தான் ஓசோன் மிகுந்து காணப்படுகிறது.
அதாவது, பூமியிலிருந்து சுமார் 10 முதல் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு உட்பட்ட வளிமண்டல அடுக்குகளில் காணப்படும் ஓசோன், பூமியை பல்வேறுபட்ட கதிர்வீச்சு தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து வருகிறது.
இப்படிப்பட்ட ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்படுவதால் பூமியில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன; உயிரிகளின் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது; இதனால் மனிதர்களுக்கு தோல் புற்றுநோய், கண்புரை போன்ற பிரச்சனைகளும் ஏற்படக் கூடும்.
பூமியின் துருவ பகுதிகளின் ஓசோன் படலத்தில் துளை ஏற்படுவது இது முறையல்ல. ஆனால், "இதன் மூலம், முதல் முறையாக ஆர்டிக் பகுதியின் ஓசோனில் மிகப் பெரிய துளை ஏற்பட்டதாக கூற முடியும்" என்று காம்ஸ் கூறுகிறது.
துளை மறைந்தது எப்படி?
வட துருவ பகுதியில் நிலவி வரும் அசாதாரணமான வானிலையே இந்த துளை வேகமாக வளர்ந்து, குறுகிய காலத்தில் மறைந்ததிற்கு காரணம் என்று காம்ஸ் கூறுகிறது.
வட துருவத்தில் பல வாரங்களுக்கு வீசும் "கடுமையான துருவ சுழல்கள்" வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி, துளை உண்டாவதற்கு காரணமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
என்னதான் அந்த துளை தற்போது தானாகவே மூடிக்கொண்டாலும், வானிலை நிலைமைகள் மாறினால் மீண்டும் துளை உண்டாவதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
"வட துருவத்தில் வழக்கத்திற்கு மாறாக வலுவான மற்றும் நீண்ட காலமாக துருவ சுழல் ஏற்பட்டதே அதன் ஓசோன் படலத்தில் துளை ஏற்பட்டதற்கான காரணமே தவிர, இதற்கும் கொரோனா வைரஸின் காரணமாக உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என்று காம்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
"வளிமண்டலத்தில் ஓசோனின் அளவு குறைந்து வருவதால் ஏற்பட்ட இந்த துளை, குறிப்பிட்ட பகுதியின் வருடாந்திர வானிலை மாற்றத்தினால்தான் மறைந்துள்ளது; ஆனால், இது நிரந்தரம் அல்ல. எனினும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் ஓசோன் படலம் மெல்ல மீண்டு வருகிறது என்று நம்பலாம்."
அண்டார்டிகாவில் தொடரும் ஓசோன் படல பாதிப்புகள்
வட துருவத்தை பொறுத்தவரை வேண்டுமென்றால் ஓசோன் படலத்தில் துளை ஏற்படுவது அசாதாரணமான நிகழ்வாக இருக்கலாம்.
ஆனால், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அண்டார்டிகா மேலே இருக்கும் ஓசோன் படலத்தில் ஒவ்வோர் ஆண்டும் இதைவிட மிகப் பெரிய துளைகள் ஏற்பட்டு வருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் துளைகளின் அளவு வேறுபட்டாலும், அவை விரைவில் மறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
1996இல் குளோரோஃப்ளூரோகார்பன்கள் தடைசெய்யப்பட்டதிலிருந்து ஓசோன் படலம் மெல்ல மீண்டு வருகிறது.
உலக வானிலை அமைப்பின்படி, அண்டார்டிக் பகுதியிலுள்ள ஓசோன் துளை, கடந்த இரு பத்தாண்டுகளில் சுமார் 1% முதல் 3% வரை சுருங்கியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: