மலேசியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது; சிங்கப்பூரில் என்ன நிலை?

Coronavirus and hydroxychloroquine

பட மூலாதாரம், Reuters

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று புதிதாக 277 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 270 பேர் குடிநுழைவு தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள்.

இதையடுத்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,247ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 1,573 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. எனவே மரண எண்ணிக்கை 115 என்பதில் மாற்றமில்லை.

இதற்கிடையே மலேசியாவில் நடப்பாண்டின் முதலாம் காலாண்டில் மட்டும் வேலை இழப்பு 42 விழுக்காடாக ஏற்றம் கண்டுள்ளதாக சமூக பாதுகாப்பு அமைப்பும் (சொக்சோ), பணிக்காப்பீட்டு அமைப்பும் தெரிவித்துள்ளன. அடுத்தடுத்த காலாண்டுகளில் வேலை இழப்பு விதிதம் 50, 75 விழுக்காடு என தொடர்ந்து அதிகரிக்கக் கூடும் என்றும் அவை எச்சரித்துள்ளன.

கடந்த 1997ல் தென்கிழக்கு ஆசிய நாடுகள் எதிர்கொண்ட பொருளாதார மந்த நிலையின்போது இருந்ததைவிட தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கக் கூடும் என்றும் இவ்விரு அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன.

சிங்கப்பூர் நிலவரம்

சிங்கப்பூர் நிலவரம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 24 மணி நேரத்தில் சிங்கப்பூரில் மேலும் 517 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,922ஆக அதிகரித்துள்ளது.

அண்மைய சில தினங்களாக சிங்கப்பூரில் சமூகப் பரவல் மூலம் யாருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில், நேற்று 7 பேருக்கும், இன்று 15 பேருக்கும் சமூகப் பரவல் மூலம் வைரஸ் தொற்றியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரில் இதுவரை 23,573 பேர் குணம் அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 24 என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வைரஸ் தொற்று ஏற்படாத சுமார் 32 ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூர் அரசு தற்காலிக வசிப்பிடங்களில் தங்க வைத்துள்ளது. விளையாட்டு அரங்குகள், ராணுவ முகாம்கள், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் குடியிருப்புக் கட்டடங்கள் ஆகியவற்றில் இந்த தற்காலிக வசிப்பிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் வெளிநாட்டு ஊழியர்களில் கிட்டத்தப்பட்ட பாதி பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளதாக சிங்கப்பூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துக்கான சோதனை மீண்டும் தொடக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை கட்டுப்படுத்துவதற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாடு உட்பட நடைமுறையில் உள்ள அனைத்து பரிசோதனைகளையும் தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ் தெரிவித்துள்ளார்.

"தற்போது கிடைத்துள்ள தரவின் அடிப்படையில், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்புவழிமுறையை கண்டறியும் சோதனை நெறிமுறையை மாற்ற எந்த காரணங்களும் இல்லை என்று சோதனை தரவு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்தது. எனவே, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாடு உட்பட, நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு செய்யப்படும் சோதனையின் அனைத்தையும் தொடர நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது," என்று இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

மலேரியா நோய்த்தடுப்புக்கு பயன்படும் ஒருவகை மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்புக்கும் பயன்படுத்தலாம் என்ற கருத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இதுதொடர்பான ஆய்வை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் நடத்தின. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பில் இந்த மருந்தால் எவ்வித பலனும் இல்லையென்றும், மாறாக இது நோயாளிகளுக்கு பக்க விளைவுகளையே ஏற்படுத்துவதாக எண்ணற்ற ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் வேளையில் இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்றால் என்ன?

ஹைட்ராக்சிகுளோரோகுயின் (Hydroxychloroquine) என்பது மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் க்ளோரோகுவின் மருந்தைப் போன்றதுதான்.

முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த மருந்து, கடந்த சில பதிற்றாண்டுகளாக வைரஸுக்கு எதிரான மருந்தாகவும் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த மருந்து குறித்து அளவுக்கு மிஞ்சிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

ஆய்வக பரிசோதனைகளின்போது, க்ளோரோகுவின் கொரோனோ வைரஸை தடுப்பதற்கான சமிக்ஞைகள் காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள் என பிபிசி சுகாதார செய்தியாளர் ஜேம்ஸ் கல்லகெர் கூறுகிறார்.

ஆனால், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் இந்த மருந்து எவ்வாறு வேலை செய்கிறது என்பது தொடர்பாக தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. சீனா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இதுதொடர்பான பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

உலகளவில் கோவிட்-19 பாதிப்பு நிலவரம் என்ன?

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவின்படி, இதுவரை உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 64,30,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,85,947ஆக உள்ளது.

கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 28,04,982ஆக உள்ளது.

உலக நாடுகளின் பாதிப்பு, மரணம் மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கையை கீழ்க்கண்ட பிபிசியின் சிறப்புப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய இரண்டிலுமே உலகளவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா தொடர்கிறது. அங்கு இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் 18 லட்சத்து 51 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒரு லட்சத்து ஏழு ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நிலவரம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9,304 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இதனையடுத்து இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,919-ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் இந்த தொற்றால் உயிரிழந்த 260 பேரையும் சேர்த்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,075ஆக உயிரிழந்துள்ளது. குணடமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,04,107ஆக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: