You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு: ரோபோக்களிடம் வேலையைப் பறிகொடுக்கும் பத்திரிகையாளர்கள்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய எம்.எஸ்.என் வலைத்தளத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சிலரை வேலையிலிருந்து அனுப்பிவிட்டு அவர்களுக்கு பதிலாக செய்திகளை தேர்தெடுக்க தானாக இயங்கும் அமைப்பை பயன்படுத்த போவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
எம்.எஸ்.என் வலைதளத்தில் செய்தி நிறுவனங்களின் செய்திகளை தேர்ந்தெடுப்பது, தலைப்புகளை வைப்பது அதற்கேற்ற புகைப்படங்கள் வைப்பது போன்ற வேலைகளை தற்போது பத்திரிகையாளர்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த செய்தி தயாரிப்பு வேலையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் அந்நிறுவனம் இனி செய்யவுள்ளதாக சிலர் சியாட்டல் டைம்ஸிடம் கூறியுள்ளனர்.
இது தொழில் ரீதியான பரிணாம வளர்ச்சி என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது.
”மற்ற நிறுவனங்களை போல மைக்ரோசாஃப்ட்டும் வழக்கமாக தொழில் ரீதியான பரிணாம வளர்ச்சியை செய்து வருகிறது. இது சில இடங்களில் முதலீடுகளை அதிகரிக்கும். சிறிது காலத்திற்கு பிறகு நிறைய பேரை வேலையை விட்டு அனுப்ப காரணமாக அமையலாம். ஆனால் இந்த முடிவு கோவிட்-19ஆல் எடுத்த முடிவு அல்ல,” என மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது.
மற்ற நிறுவனங்களை போல பிற செய்தி நிறுவனங்களுக்கு அவர்களின் செய்தியை வலைத்தளத்தில் பயன்படுத்த மைக்ரோசாஃப்ட்டும் பணம் வழங்கி வருகிறது.
ஆனால் எந்த செய்தி வர வேண்டும் அது எவ்வாறு தெரிய வேண்டும் என்பதை முடிவு செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பத்திரிகையாளர்களை வைத்துள்ளது.
சுமார் 50 ஒப்பந்த செய்தி தயாரிப்பாளர்கள் ஜூன் மாதத்தில் தங்கள் வேலையை இழப்பார்கள் என சியாட்டல் டைம்ஸ் கூறியுள்ளது. மற்ற முழு நேர பத்திரைகையாளர்கள் இருப்பார்கள் எனவும் சியாட்டல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
”எங்கள் வேலையை ஓர் இயந்திரம் பார்த்துவிடும் என நினைப்பது நியாயமானதல்ல. ஆனால் அதுதான் நடக்கிறது”, என்று சியாட்டல் டைம்ஸ்க்கு இதனால் பாதிக்கப்படும் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
வேலையை விட்டு அனுப்பப்பட்ட சில பத்திரிகையாளர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதழியலுக்கான கோட்பாடுகளை முழுவதும் அறிந்திருக்காது, இதனால் தவறான செய்திகள் வெளியிட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளனர்.
வேலையை விட்டு அனுப்பப்படுபவர்களில் 27 பேரை பிரிட்டனின் பி.ஏ மீடியா வேலைக்கு எடுத்துள்ளது என கார்டியன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் , ”நான் தானியங்கி மற்றும் செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எவ்வாறு நம் வேலைகள் பறிபோகும் என்பதை பற்றி படித்து கொண்டிருப்பேன். இப்போது என்னுடைய வேலையையே அது எடுத்துக்கொண்டது,” என்று கூறினார்.
ரோபோட் இதழியல் எனக் கூறப்படும் இந்த முறையை செலவை குறைப்பதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயல்படுத்தி பார்க்கிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய கூகுள் நிறுவனமும் சில திட்டத்தில் முதலீடு செய்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: