You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Lockdown5: கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு இந்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய விதிமுறைகள்
கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே, அடுத்த ஒரு மாத காலத்துக்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அவற்றை 15 புள்ளிகளாகத் தொகுத்து வழங்குகிறோம்.
- கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்.
- முதல் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என மூன்று கட்டங்களாக நிலைமைக்கு ஏற்ப தளர்வுகள் கொண்டுவரப்படும்.
- நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
- மற்ற பகுதிகளில் ஜூன் 8ஆம் தேதியில் இருந்து வழிபாட்டுத் தளங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்கப்படும்.
- பள்ளிக் கல்லூரிகள் திறப்பது குறித்து மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு ஜூலை மாதம் முடிவெடுக்கப்படும்.
- அத்தியாவசிய காரணங்களைத் தவிர, மக்கள் வெளியே நடமாடுவதற்கான நேரம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை என்பது, காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை என்று மாற்றப்படுகிறது.
- சர்வதேச விமானப் போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, திரையரங்குகள், விழா மன்றங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், மதுபான விடுதிகள், பொதுக் கூட்டங்கள், மத வழிபாட்டுக் கூட்டங்கள், கலாசார நிகழ்வுகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கான தடை தொடர்கிறது. சூழ்நிலைக்கேற்ப இவற்றுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
- 65 வயதுக்கும் அதிகமான முதியவர்கள், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள், கர்ப்பிணிகள், வேறு உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் ஆகியோர் அத்தியாவசிய மற்றும் மருத்துவக் காரணங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும்.
- மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக எந்த சிறப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை.
- பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்.
- திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 50 பேர் கலந்து கொள்ளலாம். இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது.
- முடிந்த வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அலுவலகங்கள் அனுமதிக்க வேண்டும். வேலைக்கு வரும் நபர்களுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்பட வேண்டும். பணியிடங்களில் போதிய சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.
- கொரோனா தொற்று அபாயத்தை அறிய உதவும் இந்திய அரசின் 'ஆரோக்கிய சேது' செயலியை செல்பேசியில் நிறுவ நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவுரை வழங்க வேண்டும்.
- நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து சூழ்நிலைக்கேற்ப மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் முடிவு செய்யலாம்.
- இந்திய எல்லையில் அமைந்துள்ள மாநிலங்கள் அண்டை நாடுகளுக்கு செல்லும் சரக்கு வாகனப் போக்குவரத்தைத் தடை செய்யக்கூடாது.
பிற செய்திகள்:
- ஊரடங்கு தளர்வு: தமிழக அரசுக்கு வல்லுநர்கள் அளித்துள்ள ஆலோசனை என்ன?
- கொரோனா பொது முடக்கம்: மே 31க்குப் பிறகு இந்தியாவில் என்ன நடக்கும்?
- மோதி 2.0 : 5 ட்ரில்லியன் பொருளாதாரம், 100 லட்சம் கோடி முதலீடு - எங்கே செல்லும் இந்தப் பாதை?
- கட்சியில் இருந்து நீக்கிய மொகிதின்; சவால் விடுக்கும் மகாதீர் : மலேசிய அரசியல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: