கொரோனா வைரஸ் நமது கனவுகளை எப்படி மாற்றியுள்ளது? அதை கட்டுப்படுத்துவது எப்படி?

    • எழுதியவர், பூஜா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய முடக்க நிலை அமல்படுத்தப்பட்டு பல வாரங்களாகிறது. அப்போது முதல், அந்த நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கு வினோதமான கனவுகள் வருகின்றன.

“மருத்துவமனையில் நான் இருக்கிறேன். நள்ளிரவு நேரத்தில் மருத்துவர் ஒருவர் எனது கையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்” என்று கூறுகிறார் எலிசா ஏஞ்சல்ஸ்.

“அடுத்த சில கணங்களில் நான் வெறும் ஒரு கையோடு மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறேன். அந்த மருத்துவர் என் கையை வைத்து ஓடியாடி விளையாடுவதை நான் பார்த்ததாக நினைவு.”

இதே போன்று அடுத்தடுத்த நாட்களில் தனது பணம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை இழப்பது போன்ற கனவு வந்ததாக எலிசா கூறுகிறார்.

இதுபோன்ற வினோதமான கனவால் எலிசா மட்டுமல்ல, பலரும் தூக்கத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலின் காரணமாக ஒட்டுமொத்த உலகின் போக்கே மாறியுள்ளது. குறிப்பாக, உலகின் 175க்கும் மேற்பட்ட நாடுகளில் முடக்க நிலை அமல்படுத்தப்பட்ட பின்பு, இதுபோன்ற வினோதமான கனவுகள் வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.

கவலை மற்றும் மன அழுத்தம்

கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் உச்சத்தை உடைந்த மார்ச் மாதம் முதல் இதுபோன்ற கனவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியரான டீய்ட்ரே பாரெட் ஆராய்ச்சி செய்து வருகிறார்.

“ஆழ்ந்த கவலையையோ அல்லது மன அழுத்தத்தையோ விளைவிக்கும் விடயங்கள் வினோதமான கனவுகளுக்கு காரணமாக இருக்கின்றன. எனது ஆய்வில் பங்கேற்றவர்களுக்கும் இதே நிலைதான்” என்று அவர் கூறுகிறார்.

சிலருக்கு கொரோனா வைரஸுடன் தொடர்பு உள்ளதை போன்ற கனவுகள் வந்துள்ளன. “Contagion திரைப்படத்தை பார்த்தவுடன், எனக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு உள்ளதாக கனவு கண்டேன்.”

“எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வலியில் துடித்து, கண்கள் இருள்வதை போன்று உணர்ந்தேன். என் உயிர் பிரிவதை போன்று கனவு வந்தது. அதன் பிறகு, என் மீது ஏதோ விழுந்தவுடன், நோய் அறிகுறிகள் மெல்ல விலகி, நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டேன். ஆனால், அது எப்படி சாத்தியமானது என்று எனக்கு தெரியவில்லை.”

9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கர்கள், இராக் ஆக்கிரமிப்பிற்குப் பின் குவைத் மக்கள் உள்ளிட்ட பல்வேறு தருணங்களினால் மக்களின் மனதில் ஏற்பட்ட அழுத்தத்தையும், அதனால் வந்த கனவுகளையும் டீய்ட்ரே ஆய்வு செய்துள்ளார்.

ஆனால், கொரோனா வைரஸை ஒட்டி மக்களுக்கு ஏற்பட்டு வரும் கனவுகள் மற்றவற்றுடன் வேறுபட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

கண்ணுக்கு தெரியாத எதிரி

"இது ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரி, இந்த வைரஸிற்கான உருவகங்கள் மிகவும் பொதுவானவை” என்று அவர் கூறுகிறார்.

“எனது ஆய்வுகளில் திரளான பூச்சிகள், சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம் உள்ளிட்டவற்றை கனவுகளில் கண்டவர்கள் ஏராளம்.”

முடக்க நிலையின் காரணமாக வீட்டில் இருப்பதால், பலரும் நீண்ட நேரம், அலாரம் கூட வைக்காமல் தூங்குவதும், கனவை மீட்டெடுத்து விவரிப்பதற்கு தேவைக்கும் அதிகமான நேரம் இருப்பதும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார் டீய்ட்ரே.

“நீண்ட பணிநேரத்தாலும், அழுத்தம் நிறைந்த சமூக வாழ்க்கையாலும் தூக்கத்தை இழந்தவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்தி இயல்புக்கு அதிகமாக உறங்குகின்றனர்.”

இவரது ஆய்வின் பகுதியாக இருந்த இன்னொருவரின் கனவில், நல்ல பகல்நேர பொழுது, கொடுங்கனவாக மாறுகிறது.

“நான் பூங்காவில் நண்பர்களுடன் மேசையில் அமர்ந்து அரட்டையடித்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென பெரும் சத்தத்துடன் வானில் தோன்றிய ஒரு மிகப் பெரிய துப்பாக்கி, வானில் அங்குமிங்கும் வட்டமடித்து கொண்டே தரையில் இருந்த பலரையும் சுட்டுக்கொண்டே வந்தது.”

“ஒரு கட்டத்தில், அது எங்களை நோக்கி வர தொடங்கிய உடன், நான் அங்கிருந்து ஓடி, மறைந்துகொள்ள ஆயத்தமானேன்.”

அறிவியல் இவ்வளவு வளர்ந்த பின்பும் கூட, ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னமும் வியப்பு நிறைந்த ஒன்றாக விளங்கும் மூளையின் விசித்திரமான, அதே வேளையில் நமது வாழ்க்கையில் தொடர்புடைய மற்றும் தொடர்பற்ற விடயங்களை கண்முன்னே நிறுத்தும் ஒன்றாக கனவு உள்ளது. ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் பில்லியன்கணக்கானோர் கனவுகளை காண்கின்றனர்.

இத்தாலியில் கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையால் அந்த நாட்டு மக்களிடையே கனவுகளை நினைவுகூரும் விகிதம் மிகப் பெரிய அளவில் அதிகரித்திருப்பதாக அதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள லூய்கி டி ஜென்னாரோ கூறுகிறார்.

தூக்கநிலை

மன அழுத்தத்தின் காரணமாக தூக்கத்தின் தரம் குறைவதாலும் இதுபோன்ற கனவுங்கள் ஏற்படக் கூடும் என்று அவர் கருதுகிறார்.

இதன் காரணமாக பலர் இரவுநேரத்தில் தூக்கத்திலிருந்து அடிக்கடி விழிப்பதாக அவர் கூறுகிறார். மேலும் கண் அசைவுறும் தூக்கநிலையும் (REM) இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

REM நிலையில் ஒருவர் தூங்கும்போது அடிக்கடி கண்கள் அசைந்துகொண்டே இருக்கும். மேலும், சுவாசித்தலிலும், உடல் இயக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டு அஸ்டோனியா எனப்படும் ஒருவித செயல்பாடற்ற நிலையை உடல் அடைகிறது. சுமார் 90 நிமிடம் நீடிக்கும் இந்த வகை நிலையின்போது, ஒருவர் மூளையில் கனவுகள் தூண்டப்படுகின்றன.

REM நிலையின்போது விழிப்பவர்களுக்கு அவர்களது தூக்கம் குறித்த பெரும்பாலான விவரங்கள் நினைவிலேயே இருக்கின்றன.

“பெருந்தொற்றுக்கு எதிரான உணர்ச்சிபூர்வமான ஒரு வகை பதிலீடுதான் இதுபோன்ற கனவுகள். சமீபகாலமாக கொடுங்கனவுகளை காண்போரின் எண்ணிக்கையில் பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.”

கனவில் ஆதிக்கம் செலுத்தும் நடப்புகள்

நம் அன்றாட அனுபவங்கள் நம் கனவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். நமது அனுபவம் எவ்வளவு உணர்வுபூர்மாக இருக்கிறதோ, அதே அளவுக்கு நமது கனவுகளும் இருக்கும்.

குறிப்பாக, கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையின் முன்களத்தில் பணியாற்றுபவர்களுக்கு எளிதில் கொடுங்கனவுகள் ஏற்படக் கூடும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் செயலி ஒன்றை சமீபத்தில் இத்தாலி அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த செயலின் செயல்பாடு குறித்த செய்தியை படித்த இளம்பெண் ஒருவருக்கு அதுகுறித்த கனவு வந்தது.

“நான் உறக்கத்தில் இருந்து எழுந்தவுடன், என் நெற்றியில் ஏதோ விசித்திரமாக ஒன்று இருப்பதை போன்று கனவு கண்டேன். கழிவறைக்கு சென்று கண்ணாடியில் பார்த்துக்கொண்டே என் நெற்றி அருகே இருந்த முடிகளை சரிசெய்தபோது, அங்கு மூன்று பட்டன்கள் இருந்தன.”

“இரண்டு பட்டன்களில் சிவப்பு நிறத்திலும், மற்றொன்றில் பச்சை நிறத்திலும் விளக்குகள் எரிந்தன. பச்சை நிற விளக்கு ஒரு ஜிபிஎஸ் கருவி என்றும், அதை கொண்டு ஒருவரின் நடவடிக்கைகள் ஆராயப்படுவதாகவும் யாரோ என்னிடம் கூறினர். சிவப்பு விளக்கு எதற்காக என்று எனக்கு தெரியாது, இருந்தாலும் அதை அழுத்தினேன், உடனே தூக்கத்தில் இருந்து விழித்துவிட்டேன்.”

கனவுகளை பதிவுசெய்ய ஒரு இணையதளம்

கலிஃபோர்னியாவை சேர்ந்த எரின் கிராவ்லி என்ற பெண் தொடங்கியுள்ள idreamofcovid என்ற இணையதளத்தில் தனது கனவு குறித்து அந்த இத்தாலிய பெண் பதிவு செய்துள்ளார்.

எரின் விஞ்ஞானியோ அல்லது ஆராய்ச்சியாளரோ அல்ல. ஆனால், புதிய இயல்பாக உருவெடுத்துள்ள சமூக விலகல் நிலையால் மக்களிடையே மாறி வரும் கனவுகளை தொகுக்க விரும்பியதாக அவர் கூறுகிறார்.

தனது இணையதளத்தில் பதியப்பட்டுள்ள பலரது கனவுகளின் போக்கை முதலாக கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்று எரின் கூறுகிறார்.

நேர்மறையான கனவுகள்

கொரோனா வைரஸ் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள அச்சத்தால் மக்களுக்கு இதுபோன்ற கொடுங்கனவுகள் மட்டுமே வருகின்றன என்று கூற முடியாது.

“குறிப்பிடத்தக்க அளவிலான மக்களுக்கு நேர்மறையான கனவுகளும் வருகின்றன. இது கேட்பதற்கு விசித்திரமாக இருக்கலாம், ஆனால் உண்மைதான்” என்கிறார் டீய்ட்ரே பாரெட்.

“சுற்றுச்சூழல் மாசுபாடு அற்ற எதிர்காலம் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதை போன்றும் சிலருக்கு கனவுகள் வருகின்றன.”

டெல்லியை சேர்ந்த நீரு மல்ஹோத்ராவும் அதில் ஒருவர்.

“முடக்க நிலை தொடங்கியதில் இருந்து, மிகவும் ஆடம்பரமான ஹோட்டல்கள் எனது கனவுகளில் வருகின்றன. அதுபோன்ற ஹோட்டல்களை நான் இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்துள்ளேன்.”

“அந்த அறைகளில் பெரிய ஜன்னல்கள் இருந்தன. அதை திறந்தால் கடலோ அல்லது பச்சை பசேலென்ற நிலப்பரப்போ உள்ளது. என் மனநிலை மகிழ்ச்சியாகவும் பரவசமாகவும் இருக்கிறது. சுற்றிலும் நிறைய பேர் இல்லை; பெரும்பாலான நேரங்களில் மனிதர்களே இல்லை."

வேண்டிய கனவை பெற முடியுமா?

மனதுக்கு அமைதியான, அருமையான கனவுகளை காண்பது எப்படி என்பது குறித்து டீய்ட்ரேவிடம் கேட்டபோது, “நீங்கள் உறங்கியவுடன் எப்படிப்பட்ட கனவுகளை காண விரும்புகிறீர்கள் என்பது குறித்து உங்களுக்கு நீங்களே பரிந்துரைக்கலாம்.”

“உங்களுக்கு பிடித்த நபர், இடம் அல்லது வேறெதாவது ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள் அல்லது கனவு காண்பதை போன்று நினைத்துக்கொண்டு அந்த காட்சிகளை கண்முன்னே நிறுத்துங்கள். குறிப்பாக, நீங்கள் உறங்க தொடங்குவதற்கு முன்பு விரும்பும் கனவு குறித்து உங்களுக்கு நீங்களே சொல்லுங்கள்.”

“இந்த உத்தியை பயன்படுத்தினால், உங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மூளை அதற்கேற்றவாறு கனவுகளை ஏற்படுத்த கூடும்.”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: