You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சோமாலியா வான் தாக்குதலில் பொதுமக்கள் பலி: மன்னிப்பு கோரிய அமெரிக்க ராணுவம் மற்றும் பிற செய்திகள்
கடந்த பிப்ரவரி மாதம் சோமாலியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பொதுமக்கள் சிலர் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலின்போது இருவர் உயிரிழந்ததாகவும், மூன்று பேர் படுகாயம் அடைந்ததாகவும் அமெரிக்காவின் ஆஃப்ரிக்க படை தளபதி திங்கள்கிழமை அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அல் ஷபாப் என்னும் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த தாக்குதலில் வாழைப்பழ விவசாயி ஒருவரும், தகவல் தொடர்பு சேவைகளில் பணியாற்றும் ஒருவரும் உயிரிழந்ததாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.
''சோமாலியா நாட்டு மக்கள் மீது எங்களுக்கு நிறைய மதிப்பு உள்ளது, நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம் என அமெரிக்காவின் ஆஃப்ரிக்க படை தளபதி ஜென் ஸ்டிஃபன் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா எவ்வாறு அவ்வப்போது பொது மக்கள் தாக்கப்பட்டது குறித்தும் உயிரிழப்பு குறித்தும் அறிவிக்கிறதோ, அதேபோல ஒவ்வொரு அரை ஆண்டிற்கும் இனி அமெரிக்க ஆஃப்ரிக்க படைகளும் பொது மக்கள் உயிரிழப்புகள் குறித்து அறிக்கை வெளியிடும் எனவும் ஜென் ஸ்டிஃபன் கூறினார்.
ஆனால் சோமாலியாவில் நடந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், உண்மையான பலி எண்ணிக்கையை அமெரிக்கா மறைக்கிறது என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு குற்றம்சாட்டுகிறது.
மே 3க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - பிரதமர் நரேந்திர மோதி முதல்வர்களிடம் கூறியவை
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி காணொளி காட்சி மூலம் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்த பிரதமர் நரேந்திர மோதி, நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்களின் செயல்பாடு குறித்தும், பரிந்துரைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
விரிவாக படிக்க: நரேந்திர மோதி: மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?
கொரோனா வைரஸ்: பரஸ்பரம் குற்றம்சாட்டும் சீனா மற்றும் அமெரிக்கா தரப்புகள் - எது உண்மை?
கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில் இருந்து, இந்த வைரஸ் எங்கு உருவானது, இது எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கும் என்பது பற்றிய யூகங்கள் மற்றும் சதித்திட்டம் என்ற ரீதியிலான குற்றச்சாட்டுகள் ஆன்லைனில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் சீனாவின் ``கோழைத்தனமான உயிரி ஆயுதத் திட்டம்'' என்றொரு தகவலும் சமூக ஊடகங்களில் பரவியது. கனடா - சீன உளவுக் குழு ஒன்று கொரோனா வைரஸை வுஹானுக்கு அனுப்பியது என்ற ஆதாரமற்ற தகவலும் கூறப்படுகிறது.
மலேசியாவில் கோவிட் 19 தாக்கத்தின் போது எழுப்பப்படும் ரோஹிஞ்சாக்கள் விவகாரம்
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக 40 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் நூர் ஹிஷாம், கடந்த 24 மணி நேரத்தில் 95 கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தெரிவித்தார்.
மேலும் ஒரு நோயாளி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 99ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 5,820 என்றும், இவர்களில் 3,957 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்ட அவர், குணமடைந்தோர் விகிதம் 67.9 விழுக்காடு என்றார்.
செளதி அரேபியா: மரண தண்டனை, கசையடி - சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்த அரசர்
உலகமே கொரோனா வைரஸ் தடுப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தங்கள் நாட்டுச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது செளதி அரேபியா.
மைனராக இருந்த போது குற்றம் செய்த நபர்களுக்கு இனி மரண தண்டனை கிடையாது என சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது செளதி அரேபியா என்கிறது அந்நாட்டு மனித உரிமை ஆணையம்.
கசையடி தண்டனை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசர் சல்மான் கூறி இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.
விரிவாக படிக்க: மரண தண்டனை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த செளதி அரேபியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: