You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செளதி அரேபியா: மரண தண்டனை, கசையடி - சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்த அரசர்
உலகமே கொரோனா வைரஸ் தடுப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தங்கள் நாட்டுச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது செளதி அரேபியா.
மைனராக இருந்த போது குற்றம் செய்த நபர்களுக்கு இனி மரண தண்டனை கிடையாது என சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது செளதி அரேபியா என்கிறது அந்நாட்டு மனித உரிமை ஆணையம்.
கசையடி தண்டனை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசர் சல்மான் கூறி இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.
ஐ.நா குழந்தைகள் உரிமை பிரகடனத்தில் செளதி கையெழுத்திட்டுள்ளது. அந்த பிரகடனம் சிறுவர்கள் செய்யும் குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது என வலியுறுத்துகிறது.
மனித உரிமையும், செளதியும்
உலகிலேயே மனித உரிமை மோசமாக இருக்கும் நாடுகளில் செளதி அரேபியாவும் ஒன்று என்கின்றனர் செயற்பாட்டாளர்கள்.
கருத்து சுதந்திரம் இல்லாத நாடாக செளதி திகழ்கிறது. அதுவும் அங்கு அரசை பற்றி விமர்சிப்பது கைதுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் செயற்பாட்டாளர்கள்.
2019ஆம் ஆண்டில் மட்டும் செளதியில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்கிறது அம்னிஸ்டி இன்டெர்நேஷனல். இதில் குறைந்தது ஒருவராவது தாம் சிறு வயதில் செய்த குற்றத்திற்காக மரண தண்டனைக்கு உள்ளாகி இருப்பார் என்கிறது அந்த அமைப்பு.
மாற்றம்
சிறு வயதில் செய்த குற்றங்களுக்கு இனி அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படுவார்கள் என்கிறது மனித உரிமை ஆணையத்தில் தலைவர் அவாத் வெளியிட்டுள்ள அறிக்கை.
அரசரின் ஆணையானது தண்டனை சட்டத்தில் நவீன மாற்றங்களைக் கொண்டு வர வழிவகுக்கும் என்றும் அவாத் கூறி உள்ளார்.
எப்போது இந்த சட்டத் திருத்தங்கள் அமலாகும் என்று தெரியவில்லை.
செளதி அரேபியா சில மாற்றங்களைச் செய்ய முன் வந்திருந்தாலும், பல மனித உரிமை மீறல்களில் செளதி அரசு தொடர்ந்து ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம்தான் உள்ளன. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி இஸ்தான்புலில் கொல்லப்பட்டதை அடுத்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. இன்றும் பல மனித உரிமை செயற்பாட்டாளர்கள் செளதி சிறையில்தான் உள்ளனர்.
கடந்த வாரம் செளதியின் முக்கிய மனித உரிமை செயற்பாட்டாளரான அப்துல்லா உடல்நல பிரச்சனை காரணமாக சிறையில் இறந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: