பெருங்கடல்களை 30 ஆண்டுகளில் மீட்டெடுக்க முடியும் - என்ன சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்?

மீன்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மேட் மேக் கிராத்
    • பதவி, சுற்றுசூழல் செய்தியாளர்

பல தசாப்த காலங்களாக பெருங்கடல்களை குப்பைகளை கொட்டும் இடமாக மனிதர்கள் பாவித்து வந்தாலும், பெருங்கடல்கள் விரைவில் தங்களை மீட்டெடுக்கும் ஆற்றல் கொண்டவை என புதிய அறிவியல் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மூன்று தசாப்தங்களில் பெருங்கடல்களை முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்று நம்புகின்றனர் விஞ்ஞானிகள். காலநிலை மாற்றமும் தற்போது உள்ள பாதுகாப்பு நடைமுறைகளை மதிப்பிடுவதும்தான் கடலை முழுமையாக மீட்டெடுப்பதில் உள்ள பெரிய சவால் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பல நூறு ஆண்டு காலமாகவே கடல் மனிதர்களால் மாசு அடைந்து வருகிறது. ஆனால் மனிதர்களால் கடல் மாசடைந்து வருகிறது என்பதை கடந்த 50 ஆண்டுகளில் தான் நாம் உணர்ந்துள்ளோம்.

மீன் மற்றும் பல கடல் வாழ் உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன. கடலில் எண்ணெய் கசிவு ஏற்படுவது மற்றும் பல வகையான மாசுபாட்டால் கடலில் ஒருவித நச்சுத் தன்மை கலந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர்.

கடந்த சில தசாப்தங்களாக, காலநிலை மாற்றத்தின் விளைவாக பவளப்பாறைகளின் தன்மை மாறிவருகின்றன. கடலிலும் அமிலத்தன்மை அதிகரிப்பதை உணர முடிகிறது. இந்த தகவல் கடந்த ஆண்டு காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழுவின் சிறப்பு அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆய்வுகள் தற்போது நிலவும் பிரச்சனைகள் குறித்து கூறுகின்றன இருப்பினும் கடல்கள் தங்களை குறிப்பிட தகுந்த அளவில் மீட்டெடுத்திருக்கின்றன.

சில திமிங்கலங்களை வர்த்தக ரீதியாக வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டதிலிருந்து அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அழிவு நிலையில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை 2000ஆம் ஆண்டு 18சதவீதமாக இருந்தது அதுவே 2019ஆம் ஆண்டு 11.4 சதவீதமாக குறைந்துள்ளது என்கிறது பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழு

செளதி அரேபியாவை சேர்ந்த கடல் அறிவியலாளர் பேராசிரியர் கார்லோஸ் கூறுகையில், ''கடல் வாழ் உயிரினங்கள், அவற்றை சார்ந்து வாழும் மக்கள் மற்றும் அவர்களின் சுற்றுச்சூழலை மேம்படுத்த கடந்த கால பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மையப்படுத்தி ஆய்வு மேற்கொள்கிறோம். எனவே ஆதாரங்களுடன் தீர்வு காண முடியும். உலகளவில் ஆதாரங்களுடன் கூடிய பாதுகாப்பு பரிந்துரைகளை வழங்க முடியும்''. என்கிறார்.

"கடல் வளத்தை மீண்டும் கட்டியெழுப்ப நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும், மேலும் மூன்று தசாப்தங்களுக்குள் இந்த இலக்கை அடைய முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்'' என்றார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

பெருங்கடலை மீட்டெடுக்க ஒன்பது அம்சங்களை முக்கிய ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டனர் : உப்பு சத்து நிறைந்த நிலப்பரப்பு, சதுப்பு நிலங்கள், கடலில் உள்ள புல் வகைகள், பவளப்பாறைகள், கடல் சிப்பிகள், கடற்பாசி வகைகள், மீன் வகைகள், மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள், கடலில் மிகவும் ஆழத்தில் உள்ள நிலப்பரப்பு உள்ளிட்டவையே ஆகும்.

2050ம் ஆண்டிற்குள் கடல்களை பாதுகாக்க முடியும் என நம்பும் விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், MANU SAN FELIX

உயிரினங்களை பாதுகாத்தல், புத்திசாலித்தனமாக அவற்றை சரியான நேரத்தில் உணவாக உட்கொள்ளுதல் மற்றும் வாழ்விடங்களை மீட்டெடுப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர்.

முக்கியமான கடல் உயிரினங்களை மீட்டெடுப்பதற்கான திறன்களும் நிபுணத்துவமும் தற்போது எங்களிடம் உள்ளது. கடல் சிப்பிகள், கடலின் அடி ஆழத்தில் உள்ள சதுப்பு நிலங்கள், கடல் உப்பு நிறைந்த பகுதிகள் உள்ளிட்டவை கடலை சுத்தமாக வைத்திருக்கும். மேலும் கடல் வாழ் உயிரினங்களுக்கு அவை உணவாகவும் அமைகின்றன.

கடல் பாதுகாப்பிற்கு பெரிய சவாலாக அமையப்போவது பருவநிலை மாற்றம் தான். பருவநிலை மாற்றத்தால் கடலில் நீர் மட்டம் உயர்ந்து, கடல் நீரில் அமிலத்தன்மையும் அதிகரிக்கின்றன. ஏற்கனவே நிகழ்ந்த வெப்பமயமாதலினால் பவளப் பாறைகள் இனி உருவாகுமா என்ற சந்தேகம் உள்ளது. கடலில் கலக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை முழுமையாக நிறுத்தவும் விரைவில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொரோன வைரஸ்

2050ம் ஆண்டிற்குள் 10 முதல் 20 பில்லியன் டாலர்கள் வரை ஓவ்வொரு ஆண்டும் கடல் சுத்திகரிப்பிற்காக நிதி ஒதுக்க வேண்டும் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலருக்கும் 10 டாலர்கள் வரை லாபம் ஈட்ட முடியும் என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகின்றன.

தற்போது உலகில் உள்ள பல அரசாங்கங்கள் வெவ்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் கடல் சுத்திகரிப்பு என்பது நாம் நிச்சயம் அடைய கூடிய குறிக்கோளாக அமையும் என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட அறிஞர்கள் பலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: