You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூரிய கிரகணம்: எங்கு தெரியும், எப்படி தெரியும், எவ்வாறு பார்க்கலாம்?
- எழுதியவர், பா.காயத்திரி அகல்யா
- பதவி, பிபிசி தமிழ்
இன்று, டிசம்பர் 26ம் தேதி ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், சௌதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த சூரிய கிரகணத்தை காண முடியும். ஆனால், சூரிய கிரகணம் தெரியும் அளவு மற்றும் தெளிவு ஊருக்கு ஊர் மாறுபடலாம்.
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.
இன்றைய சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் (annular solar eclipse) என்றும் சொல்லப்படுகிறது.
அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.
இதன்போது சாதாரண கண்களில் சூரியனை காண்பது கடினம். எனவே, இந்த வளையத்தை நேரடியாக பார்க்கக் கூடாது.
அது கண்களின் விழித்திரையை பாதிக்கும். மேலும் சந்திரன் சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளிக்கும். அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடியும் என்று பிர்லா கோளரங்கத்தின் தொழில்நுட்ப அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஊட்டி, கோயம்பத்தூர், ஈரோடு, பாலக்காடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சென்னை உட்பட தென் இந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காணலாம்.
ஆனால் , சென்னையைவிட கோயம்பத்தூர், பாலக்காடு, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சூரிய கிரகணம் மிகவும் கடுமையாகவே காட்சி அளிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
இன்று, வியாழக்கிழமை (டிசம்பர் 26) தென்படக்கூடிய கிரகணம் இந்திய மற்றும் இலங்கை நேரப்படி காலை 08:08 மணி அளவில் துவங்கி, 11:19 மணிக்கு முடிந்துவிடும். சரியாக 09:35 மணி அளவில் சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும். இந்த முழு கிரகண வடிவம் சுமார் 3 நிமிடங்களுக்கு நிலைபெற்றிருக்கும்.
மேலும் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த கிரகணத்தை நேரடியாக காண்பது கடினம் என்பதால், சென்னை பிர்லா கோளரங்கத்தில் தொலைநோக்கி உதவியுடன், சூரிய கிரகணத்தின் பிரதிபலிப்பை திரையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தவிர சன் ஃபில்ட்டருடன் கூடிய கண்ணாடிகளை பயன்படுத்தியே இந்த கிரகணத்தைக் காண முடியும். இந்த கிரகணம் வழக்கம் போல் அல்லாமல் மூன்று மணி நேரம் தோன்றக்கூடிய நீண்ட கிரகணம் என்பதால் நேரடியாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: