இணையதள சேவையை முடக்கி போராட்டங்களை ஒடுக்கும் இரான் மற்றும் பிற செய்திகள்

கடந்த மாதம் எரிபொருள் விலையை இரான் அரசு உயர்த்தியதற்கு எதிராக அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது. அதில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக வரும் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடத்த அந்நாட்டு மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இரானின் சில பகுதிகளில் இணைய சேவைகளை அரசு முடக்கியுள்ளது. இதனை அந்நாட்டின் இணைய கண்காணிப்பு சேவை நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

அதிகாரபூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் குறைந்தது 304 பேர் உயிரிழந்ததாகவும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது. ஆனால் சுமார் 1,500 பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாட தடை

இலங்கையின் தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால், இரண்டு இனங்கள் என்ற பொருளை வெளிப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சிஏஏ-க்கு எதிரான போராட்டம்: இந்தியாவை விட்டு வெளியேறும் ஜெர்மன் மாணவர்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை ஐ.ஐ.டி.யில் போராடிய ஜெர்மன் மாணவர் ஜேக்கப் லின் டென்தல், விசா விதிகளை மீறியதாக கூறி ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டார்.

புதன்கிழமை அன்று டெல்லி விமானநிலையத்தில் பேசிய அவர், "திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொள்ளலாம் என முடிவெடுத்தது திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு அல்ல. என் நண்பர்கள் இந்த சட்டம் மக்கள் விரோதமானது என்றார்கள். மக்களின் போராட்டம் என்னை அசைத்துப் பார்த்தது. போராட்டத்தில் பங்கெடுத்தது திடீரென எடுக்கப்பட்ட முடிவு. மனிதநேயத்துக்கு எதிரான எந்த குற்றத்தையும் ஆதரித்துவிடக் கூடாது என்ற செய்தியை தெரிவிக்கத்தான் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன்,"என்றார்.

3000 தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாற திட்டம்

தலித் மக்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் காரணமாக 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்துக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாக தலித் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. எனினும், அவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

தமிழ் புலிகள் கட்சியின் இந்த முயற்சியை இந்து அமைப்புகள் விமர்சித்துள்ளன.

''முதற்கட்டமாக, ஜனவரி 5ஆம் தேதி, கட்சி உறுப்பினர்களான 100 பேர் இஸ்லாமியராக மாற திட்டமிட்டுள்ளோம், இதில் சிலர் சுவர் இடிந்த சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்தவர்கள். இதற்கான பெயர் பட்டியலை தயாரித்து வருகிறோம். இந்து மதத்தின் அடையாளத்தால் தலித் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள், இஸ்லாம் மதத்தை ஏற்று அதன் அடையாளங்களை பெற்றால் அனைவரையும் போல சமமாக தலித்துகளும் நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இஸ்லாம் மதத்திற்கு மாறும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,'' என தமிழ் புலிகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.

சூரிய கிரகணம் : 2019க்கு பிறகு 2031ல் தான் மீண்டும் நிகழும்

டிசம்பர் 26ம் தேதி ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.

இன்றைய சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் (annular solar eclipse) என்றும் சொல்லப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :