You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுந்தர் பிச்சை: ஆல்ஃபபெட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி இவர்தான்
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவரான லாரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் தங்கள் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆல்ஃபபெட்டின் முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் பதவியிலிருந்து இவர்கள் விலகினாலும் நிறுவனத்தின் உறுப்பினர்களாக லாரி மற்றும் ப்ரின் தொடருவார்கள் என கூறப்பட்டுள்ளது.
எனவே தற்போது கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை கூடுதலாக ஆல்ஃபபெட்டின் தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்ற இருக்கிறார்.
கூகுள் நிறுவனத்தை மறுசீரமைக்கும் ஒரு முயற்சியில் ஆல்ஃபபெட் நிறுவனம் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆக்கப்பட்டது. தாய் நிறுவனமாக்கப்பட்ட ஆல்ஃபபெட்டின் தலைமை நிர்வாகியாக லாரி பேஜும், தலைவராக செர்கே ப்ரினும் பொறுப்பு வகித்தனர்.
தொடர்ந்து, கூகுளின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை பொறுப்பேற்றார்.
”இரண்டு நிர்வாக இயக்குநர்களும், ஒரு தலைவரும் தேவையில்லை”
புதிய முயற்சிகளை தொடங்குவதற்காக இந்த முயற்சி என்று லாரி மற்றும் ப்ரின் கூறினர்.
ஆனால், செவ்வாய்க்கிழமையன்று தங்களது வலைப்பூ தளத்தில் இருவரும் ஆல்ஃபபெட் நிறுவனத்தில் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தனர்.
அந்த கடிதத்தில், அவர்கள் போர்ட் உறுப்பினராகவும், பங்குதாரராகவும் மற்றும் இணை நிறுவனர்களாகவும் தொடர்ந்து செயல்படப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிர்வாக அமைப்பை எளிமையாக்குவதற்கான ஒரு இயல்பான நேரமிது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆல்ஃபபெட் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இனி இரண்டு நிர்வாக இயக்குநர்களும், ஒரு தலைவரும் தேவையில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், "ஒரு பெருமை மிகுந்த பெற்றோர் போல அன்பையும், அறிவுரையையும் கொடுத்துவிட்டு தூரத்திலிருந்து விஷயங்களை கவனித்துக் கொள்வோம். நிறுவனத்தை வழிநடத்தி செல்ல சுந்தர் பிச்சையை காட்டிலும் சிறந்த நபர் வேறு யாரும் இருக்க முடியாது," என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
”பேஜ் மற்றும் ப்ரின்னுக்கு நன்றி”
47 வயதாகும் சுந்தர் பிச்சை இந்தியாவில் பிறந்து பொறியியல் பயின்றவர். அதன்பின் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சுந்தர் பிச்சை, தான் மிகவும் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்தார். பேஜ் மற்றும் ப்ரின்னுக்கு தனது நன்றியையும் அவர் தெரிவித்து கொண்டார்.
"நாங்கள் அனைவரும் உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த எங்களின் நிறுவனர்கள் உதவி செய்துள்ளனர். இது ஒரு வலுவான அடித்தளம். அதில் தொடர்ந்து நாங்கள் கட்டுமானிப்போம். அடுத்து நாம் எங்கே செல்வோம் என தெரிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருக்கிறேன். உங்கள் அனைவருடனும் எனது பயணத்தை தொடர்வதற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்று சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்