சந்திரயான் - 2 நிலவில் தரையிறங்கும்போது என்ன சவால்களை எதிர்கொள்ளும் ?

சந்திரயான்-1 விண்கலன் இந்தியா ஏவியதைத் தொடர்ந்து, சந்திரயான்-2 விண்கலன் கடந்த ஜூலை 22ம் தேதி இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் சீறிப்பாய்ந்தது.
சந்திரயான்-2 நிலவுப் பயணத் திட்டம் இரண்டு பெண்களின் தலைமையில் நடைபெற்றிருப்பதாலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலவு பயணத் திட்டத்தின் இயக்குநராக ரித்து கரிதாலும், பணித் திட்டத்தின் இயக்குநராக எம்.வனிதாவும் பணியாற்றியுள்ளனர்.

பட மூலாதாரம், iSRO
01. சந்திரயான் 2 - சிறப்பு என்ன?
சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை கொண்ட விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் (ஆர்பிட்டர்) ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் (லேண்டர்) ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும்.
நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருகின்ற சுற்றுவட்டக் கலனில் இருந்து, நிலவில் தரையிறங்கும் கலன் 'விக்ரம்' பிரியுந்து நிலவின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கும். அதன் பிறகு இந்த விக்ரம் கலனில் இருந்து பிறகு 'பிரக்யான்' உலாவி வௌியில் வந்து நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்ளும்.
சுமார் 1000 கோடி இந்திய ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள சந்திரயான்-2 திட்டம் தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்கள் நிலவில் இருப்பது பற்றியும், 'நிலவு'நடுக்கம் (புவியில் நடந்தால் 'நில நடுக்கம்'. நிலவில் நடந்தால் 'நிலவு நடுக்கம்') தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யும்.
02. சந்திரயான் 2: எப்போது ஏவப்பட்டது?
இந்தியாவின் நிலவை நோக்கிய லட்சிய பயணத் திட்டத்தின் ஒரு பகுதிதான் சந்திரயான்-2.
இந்த விண்கலனை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 2019ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவுவதாக முதலில் திட்டமிடப்பட்டது.
ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜூலை 22-ம் தேதி, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட்டது.

03. சந்திரயான் 2: நிலவில் தரையிறங்கும் தொழில்நுட்பம் (soft landing)
சந்திரயான்-2 விண்கலன் நிலவின் தென் துருவ பகுதியில், தரையிறங்கும். விண்கலம் சுமூகமாக, மெதுவாக ஒரு கிரகத்தில் தரையிறங்குவது என்பது அனுப்பப்படும் கலன் சேதமடையாமல் இருப்பதை குறிக்கிறது.
இதனை வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டால், நிலவில் விண்கலனை சுமூகமாக தரையிறக்குகின்ற தொழில்நுட்பத்தை கொண்டுள்ள நான்காவது நாடாக இந்தியா மாறும்.
இந்த தொழில்நுட்பத்தை இப்போது சோதனை செய்து பார்ப்பது நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் அடுத்த பயணத்திட்டத்திற்கு ஊக்கமூட்டுவதாக அமையும்.
04. சந்திரயான் 2: இந்த விண்கலத்தில் என்ன கருவிகள் உள்ளன?
இந்த விண்கலத்தில் 13 கருவிகளை இந்தியா பொருத்தியுள்ளது. இவற்றை தவிர நாசாவின் இன்னொரு கருவியை இந்தியா கட்டணம் எதுவும் பெறாமல் அனுப்பி வைத்துள்ளது.
இவை அனைத்தும் நிலவின் தென்துருவத்திலுள்ள இடத்தை மிகவும் நெருங்கி செல்கின்றன.
இதற்கு முன்னர் நடைபெற்ற நிலவுப் பயணத் திட்டங்கள் அனைத்தும் நிலவின் மத்தியரேகை பிரதேசத்தையே அடைந்துள்ளன.
தென் துருவத்திற்கு அருகில் எந்தவொரு விண்கலனும் தரையிறக்கப்படவில்லை என்பதால், தென்துருவத்தில் தரையிறங்கும் சந்திரயான்-2 அனுப்பும் தகவல்கள் புதியவையாக இருக்கும்.
நிலவிலுள்ள மெல்லிய காற்று மண்டலத்தை ஆய்வு செய்கின்ற கருவி ஒன்றும் உள்ளது. பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதுபோல நிலவில் நிலவு நடுக்கம் நிகழ்வது ஆய்வு செய்யப்படும்.
நிலவின் மேற்பரப்பில் வைக்கப்படும் கருவி நிலவிலுள்ள தட்பவெப்பம் பற்றி தகவல் அளிக்கும். நிலவிலுள்ள மண்ணை ஆராய்வதற்கு ரோவர் ஊர்தியில் கருவியுள்ளது.

05. சந்திரயான் 2: இந்தியாவுக்கு இதனால் என்ன பயன்?
இந்தியாவின் கொடியை சந்திரயான் கொண்டு சென்று நிலவில் இறங்குவதால் சிறப்பு பெறுகிறது. இந்தியாவின் பெருமையாகவும் இது கருதப்படுகிறது.
செவ்வாய் கிரகம், சிறு கிரகங்களில் விண்கலனை தரையிறங்க செய்கின்ற மற்றும் நிலவுக்கு மனிதனை அனுப்புகிற தொழில்நுட்ப வாய்ப்புகளை இது வழங்குவதாக அமையும்.
இந்தியா நிபுணத்துவம் பெற விரும்புகிற முக்கிய தொழில்நுட்பம் இதுவாகும்.
06. சந்திரயான் 2: இந்த பயண திட்டத்திலுள்ள சவால் என்ன?
நிலவு பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு ஈர்ப்பு விசை மிகக் குறைவு. காற்று மண்டலம் கிடையாது. நிலவில் தரையிறங்கும் முதல் முயற்சி இந்தியாவால் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தரையிறங்க பாராசூட்டுகளை பயன்படுத்தமுடியாது.
எனவே, நிலவில் தரையிறங்குவது, ஆய்வு ஊர்தி கொண்டு ஆய்வு மேற்கோள்வது மிகவும் கடினமானவை. இதற்கு முன்னர் முயற்சித்த பாதி திட்டங்கள் தோல்வியில் முடிந்துள்ளன. அனைத்து பணிகளும் கணினியால் கட்டுப்படுத்தப்படும்.

நிலவில் தரையிறங்கும் கலனும், ரோவர் ஊர்தியும், சுற்றுவட்ட கலனில் இருந்து பிரியும் 15 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை.
07. சந்திரயான் 2: நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்?
சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப்பட்டபோது, சந்திரயான்-2 விண்கலன் 2014ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர், ரஷ்யா இதில் ஒத்துழைத்து நிலவில் இறங்கும் கலனை வழங்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஷ்ய விண்வெளி நிறுவனத்தோடு ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக இது நடைபெறவில்லை.
எனவே, நிலவில் தரையிறங்கும் கலனை இந்தியாவே உருவாக்க முடிவு செய்ததால் சந்திரயான் 2 விண்கலனை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், ISRO
08. சந்திரயான் 2: விக்ரம் தரையிறங்கும் கலன் எப்போது பிரிந்தது?
சந்திரயான் விண்கலத்தின், 'விக்ரம்' தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து செப்டம்பர் 2ம் தேதி பிரிந்தது.
09. சந்திரயான் 2:விக்ரம் லெண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலை எப்போது தொடங்குகிறது?
இந்திய நேரப்படி, செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.10 மணி முதல் விக்ரம் லெண்டர் நிலவில் தரையிறங்குவது நேரலையில் ஒளிபரப்பப்படும்.

10. சந்திரயான் 2:விக்ரம் லெண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் எங்கு காணலாம்?
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பப்படும். இஸ்ரோ இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
மேலும், இஸ்ரோவின் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் நேரலை ஒளிப்பரப்பாகும்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












