You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடல்நலம்: ஹார்ட் அட்டாக், கார்டியாக் அரெஸ்ட் - வேறுபாடு என்ன?
கார்டியாக் அரெஸ்ட் (இதய நிறுத்தம்) என்றால் என்ன? எப்படி அது ஹார்ட் அட்டாக்கிலிருந்து (மாரடைப்பு) வேறுபடுகிறது?
இதயத் தமனிகள் ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட ரத்தத்தை இதயத்துக்கு கொண்டு செல்லும். ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இதயத் தமனிகளில் (கொரோனரி ஆர்ட்டரி) ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் உண்டாவதுதான் மாரடைப்பு. மாரடைப்பு ஏற்படும்போது இதயத்துக்குச் செல்லும் ரத்தம் தடைபட்டாலும் இதயம் தொடர்ந்து துடித்துக்கொண்டுதான் இருக்கும்.
ஆனால், இதய நிறுத்தம் ஏற்படும்போது இதயம் துடிப்பதையே நிறுத்திவிடும்.
மாரடைப்பை உண்டாக்கும் தடுப்புகள் ரத்தக்குழாய்களில் உண்டாகப் பல ஆண்டுகள் ஆகும்.
ஹார்ட் (heart.org) இணையதளத்தின் தகவலின்படி, கார்டியாக் அரெஸ்ட் என்பது உடலில் எந்தவொரு எச்சரிக்கையையும் காட்டாமல் திடீரென்று ஏற்படுவது.
மாரடைப்பு ஏற்பட்ட சற்று நேரத்தில் இதய நிறுத்தம் உண்டாக வாய்ப்புண்டு என்கிறது இந்த இணையதளம். இதயத்தின் தசைகள் தடித்தல் போன்ற பிற இதய நோய்களும் இதய நிறுத்தம் உண்டாகக் காரணமாகும்.
இதயத்தில் ஏற்படும் மின் இடையூறுகள்தான், பொதுவாக, கார்டியாக் அரெஸ்ட்டுக்கு காரணம். இந்த இடையூறு, இதயத் துடிப்பில் ஆதிக்கம் செலுத்தி, அதன் நிகழ்வுத் தன்மையில் குறிக்கிடுகிறது.
இது இதய ரத்த ஓட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி, மூளை, இதயம் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தம் செல்வதை தடுக்கிறது.
கார்டியாக் அரெஸ்டால் பாதிக்கப்பட்டவர்கள், அடுத்த சில நொடிகளில் தங்கள் சுயநினைவை இழக்கிறார்கள்.
சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அளிக்காவிட்டால், கார்டியாக் அரெஸ்ட் சில விநாடிகளில் அல்லது சில நிமிடங்களில் மரணத்தை கொண்டு வரும்.
கார்டியாக் அரெஸ்ட்டால் ஏற்படும் மரணங்கள் தவிர்க்க முடியாததா?
அமெரிக்காவை சேர்ந்த மூத்த மருத்துவர் செளரப் பன்சால், பிபிசியிடம்,"இது சோகமான ஒன்று. பொதுவாக கார்டியாக் அரெஸ்ட் வரும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள்" என்கிறார். "கார்டியாக் அரெஸ்டை மரணத்திற்கு, முந்தைய கடைசி கட்டம் என்று கூறலாம். இதன் பொருள் என்னவென்றால், இதயம் தன் துடிப்பை நிறுத்தி, மரணத்தை கொண்டுவருவது."
என்ன காரணத்தினால் ஏற்படுகிறது?
பன்சால் விளக்குகிறார், "இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவாக பிரதான மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) இதற்கு காரணமாக இருக்கலாம்".
கார்டியாக் அரெஸ்ட்டுக்கு ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா?
பெரும் பிரச்னை என்னவென்றால், கார்டியாக் அரெஸ்ட் எந்த அறிகுறிகளையும் காட்டாது. திடீரென்று ஒருவருக்கு ஏற்படும் என்பதுதான்.
இதயத்தில் மின் செயல்பாடுகள் மோசமடைந்து, இதய துடிப்பை நிறுத்தும்.
கார்டியாக் அரெஸ்ட்டுக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக சில இதயம் சம்பந்தமான நோய்கள், கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் சாத்தியத்தை அதிகப்படுத்தும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்