You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குழந்தைகள் எவ்வளவு நேரம் மின்னணு திரைகளில் செலவிடலாம்? - உலக சுகாதார நிறுவனம் வழங்கும் அறிவுரைகள்
- எழுதியவர், மிச்சேல் ராபர்ட்ஸ்
- பதவி, பிபிசி
குழந்தைகளை தொலைக்காட்சி அல்லது மற்ற மின்னணு திரைகளை வெகுநேரம் பார்ப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று தனது புதிய வழிகாட்டுதலில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு வயது கூட நிறைவடையாத குழந்தைகளை எவ்வித உடல் அசையும் இன்றி வெகுநேரம் கணினி விளையாட்டுகள் போன்றவற்றில் செலவிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று அந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், இரண்டிலிருந்து நான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணிநேரம் மட்டுமே மின்னணு திரைகளில் நேரத்தை செலவிடுவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பிரிட்டன் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில், குழந்தைகள் உறங்க செல்வதற்கு சில மணிநேரத்திற்கு முன்பிலிருந்தே மின்னணு திரைகளை அவர்களுக்கு காண்பிக்க கூடாது என்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறதே தவிர, இதுவரை வரையறுக்கப்பட்ட நேரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
குழந்தைகளின் குறும்புத்தனத்தை கட்டுப்படுத்த முடியாத பெற்றோர்கள், அவர்களை தொலைக்காட்சி பெட்டி, திறன்பேசி உள்ளிட்ட மின்னணு திரைகளை கொண்ட கருவிகளின் முன்பு உட்கார வைப்பது அவர்களின் அறிவு வளர்ச்சியை மட்டுப்படுத்துவதுடன், பிற்காலத்தில் உடல் பருமன் போன்ற நீண்டகால பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.
குழந்தைகளின் உடல் ரீதியான செயல்பாடு, நடத்தை மற்றும் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேவையான தூக்கம் ஆகியவை பற்றி உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்களை வழங்குவது இதுவே முதல் முறையாகும்.
மின்னணு திரைகளை போன்று, குழந்தைகள் கார் இருக்கை, நாற்காலி போன்றவற்றில் அதிகபட்சம் ஒரு மணிநேரத்திற்கு மேல் செலவிட கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தை வளர்ப்பிற்கான முக்கிய அறிவுரைகள்
- குழந்தைகளை ஒரு நாளில் பல்வேறு முறையில் உடல் ரீதியாக சுறுசுறுப்பு மிக்க நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணிநேரம் குழந்தைகளை பெற்றோர் அரவணைத்து வைத்திருக்க வேண்டும்.
- குழந்தைகள் எவ்வித உடல் அசைவுமின்றி மின்னணு திரைகளில் நேரத்தை செலவிட அனுமதிக்காதீர்.
- பிறந்தது முதல் மூன்று மாதங்கள் வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 14-17 மணிநேரம் உறங்குவதை உறுதிசெய்யுங்கள்.
- கார் இருக்கைகள், நகரும் தள்ளு வண்டிகள் போன்றவற்றில் குழந்தைகள் தொடர்ந்து அதிகபட்சம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக செலவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒன்று முதல் இரண்டு வயது குழந்தை வளர்ப்பிற்கான வழிகாட்டுதல்கள்
- ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று மணிநேரம் உடல் இயக்கத்தை உறுதிசெய்தல்
- உடல் அசைவற்ற நிலையில் இருக்கும் ஒரு வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு மின்னணு திரைகளை காண்பிக்காதீர்கள். இரண்டு வயதான குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணிநேரம் மின்னணு திரைகளில் செலவிடலாம்.
- ஒரு நாளைக்கு 11-14 மணிநேர தூக்கத்தை உறுதிசெய்யவேண்டும்
- குழந்தைகள் தொடர்ந்து அதிகபட்சம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இயக்கமற்று இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
மூன்று மற்றும் நான்கு வயதிற்குட்பட்ட குழந்தைகளை வளர்ப்பதற்கான அறிவுரைகள்
- ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று மணிநேர உடல் இயக்கத்தையும், நாளைக்கு ஒருமுறையாவது மிகுந்த சுறுசுறுப்புடனும் இருக்குமாறும் பார்த்துக்கொள்ளுங்கள்.
- அதிகபட்சம் ஒரு மணிநேரம் வரை எவ்வித உடல் இயக்கமுமின்றி மின்னணு திரைகளில் செலவிடலாம்.
- ஒரு நாளைக்கு 10-13 மணிநேர தூக்கத்தை உறுதிசெய்தல்
- தொடர்ந்து அதிகபட்சம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இயக்கமற்று இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கண்ட அறிவுரைகள் பல்வேறு ஆதாரங்களை மையமாக கொண்டே உருவாக்கப்பட்டிருந்தாலும், மின்னணு திரைகளில் குழந்தைகள் செலவிட வேண்டிய நேரம் குறித்த புரிதலுக்கு இன்னும் பல கட்ட ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
குழந்தைகளின் தொல்லை தாங்க முடியவில்லை என்ற எண்ணத்தின் காரணமாக அவர்களுக்கு திறன்பேசி, கையடக்க கணினி போன்றவற்றை கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டுமென்று கூறுகிறார் இந்த வழிகாட்டு குறிப்புகளை எழுதிய குழுவை சேர்ந்த ஒருவரான மருத்துவர் ஜுனா வில்லும்சென்.
"குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கான வழிகளை கண்டறிவதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்று மருத்துவர் ஜுனா கூறுகிறார்.
குழந்தைகளின் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான தொலைக்காட்சி நிகழ்த்திகளும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்க்கும்போது பராமரிப்பவரும் உடனிருப்பது அவசியம்.
மின்னணு காலத்திற்கேற்ற குழந்தை வளர்ப்பு குறிப்புகள்
- குழந்தைகள் எவ்வளவு நேரம் மின்னணு திரைகளில் செலவிடலாம்; எவற்றையெல்லாம் பார்ப்பதற்கு அனுமதியுண்டு என்று திட்டமிட்டு தெளிவுற குழந்தைகளுக்கு விளக்குங்கள்
- குழந்தைகள் இணையதளத்தில் என்ன செய்கிறார்கள் என்பது குறித்தும், என்ன பார்க்கிறார்கள் என்பது குறித்தும் விளங்க வையுங்கள்.
- குழந்தைகளிடம் அவர்களுக்கு தெரிந்த நண்பர்களுடன் சமூக இணையதளங்களில் தொடர்புகொள்வதற்கு ஊக்குவியுங்கள்.
- இணையத்தில் ஒன்றை கிளிக் செய்வதற்கு முன்னர் சிந்திக்க வேண்டியதன் அவசியம் குறித்து குழந்தைகளுக்கு கற்பியுங்கள்.
- குழந்தைகள் தெரிந்தோ, தெரியாமலோ தவறான விடயங்களை இணையதளங்களில் பார்ப்பதை தடுக்கும் மென்பொருள்களை பயன்படுத்துங்கள்.
- சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை பகிர்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து குழந்தைகளுக்கு தெளிவாக விளக்குங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்