சஞ்சு சாம்சனின் அதிரடியில் வென்ற ராஜஸ்தான் - ப்ளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா?

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸில் தொடங்கியது வெற்றி

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டு இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது.

ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 (36) ரன்கள், டேவிட் வார்னர் 37 (32) ரன்கள் எடுத்தனர்.

அதகள பந்துவீச்சு

ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜெய்தேவ் உனட்கட், ஸ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், ஓஷேன் தாமஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதனையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 161 ரன்களை எட்டியது.

இதன்மூலம் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணியில், அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 48 (32) ரன்கள் விளாசினார். மேலும் லிவிங்ஸ்டன் 44 (26) ரன்கள், ரஹானே 39 (34) ரன்கள், ஸ்டீவன் சுமித் 22 (16) ரன்கள் எடுத்தனர்.

ஐதராபாத் அணியில் கலீல் அகமது, ஷகிப் அல் ஹசன், ரஷீத் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஹைதராபாத், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் தற்போது 10 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் எஞ்சிய இரண்டு ஆட்டங்களிலும் வென்று, ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :