2400 யானைகள், 18 ஆயிரம் கிலோ தந்தம் - அதிர்ச்சி தரும் கடத்தல்

கென்யாவில் உள்ள மொம்பாஸா துறைமுகம் வழியாக 2009 - 2014 ஆகிய காலகட்டங்களில் மட்டும் 18,000 கிலோ யானை தந்தம் கடத்தப்பட்டிருப்பதாக ஒரு அறிக்கை விளக்குகிறது.

இத்தனை கிலோ யானை தந்தங்களை உற்பத்தி செய்ய 2400 யானைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கை மதிப்பிடுகிறது.

ஆனால், இவை அனைத்தும் கடந்த காலம். இப்போது யானைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது என்கிறது உலக இயற்கை நிதியம்.

தந்தம் கடத்தலை தடுக்க

கென்யா யானை தந்தம் கடத்தலை கண்காணிக்க, தடுக்க புதிய முயற்சியை கையாள தொடங்கி உள்ளது.

கென்யாவில் உள்ள மொம்பாஸா துறைமுகம் வழியாகதான் அதிகளவில் யானை மற்றும் காண்டாமிருகம் தந்தங்கள் கடத்தப்படுவதால், இந்த துறைமுகத்துக்கு வரும் கொள்கலன்களை சோதனை செய்ய மோப்ப நாய்களை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

உலக இயற்கை நிதியத்தின் (WWF) கிழக்கு ஆஃப்ரிக்க ஒருங்கிணைப்பாளர் ட்ரீவ் மெக்வெ, "தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குதான் தந்தங்கள் அதிகளவில் கடத்தப்படுகிறது. மோப்ப நாய்கள் வந்தப்பின் இந்த துறைமுகம் வழியாக கடத்தப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. மனிதனின் உற்ற தோழனான நாய், கடத்தல்காரர்களின் கொடுங்கனவாக மாறி இருக்கிறது" என்கிறார்.

நாற்பது அடி அளவிலான கொள்கலனில் சிறிய அளவு தந்தங்கள் இருந்தாலும் இந்த மோப்ப நாய்கள் மோப்பம் பிடித்துவிடுகின்றன என்கிறார் ஆவர்.

ஆனால் கடத்தல்காரர்கள் புதிய புதிய வழிகளை கடத்தலுக்காக கையாண்டாலும், மனிதத்தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான இந்த வணிகத்தை தடுக்க புதிய வழிகளை நாங்களும் கையாள்வோம் என்று தெரிவித்தார்.

இரண்டாயிரம் கொள்கலன்கள்

மொம்பாஸா துறைமுகம் வழியாக தினமும் குறைந்தது 2000 கப்பல் கொள்கலன்கள் செல்கின்றன. இவை அனைத்தையும் இந்த மோப்ப நாய்கள் சோதிக்கின்றன.

நாய்களை கொண்டு கொள்கலன்களை சோதிக்கும் இந்த திட்டமானது உலக இயற்கை நிதியம், கென்ய வனஉயிர் சேவை அமைப்பு, வன உயிர் வணிக கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்படுகிறது.

தென் ஆஃப்ரிக்காவில் 25 ஆயிரம் கறுப்பு மற்றும் வெள்ளை காண்டாமிருகங்கள் மட்டுமே இருப்பதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் ஓராயிரம் காண்டாமிருகங்கள் முறைகேடாக வேட்டையாடப்பட்டிருப்பதாகவும் உலக இயற்கை நிதியம் மதிப்பிடுகிறது.

அதுபோல, தினமும் 55 யானைகள் தந்தங்களுக்காக கடத்தப்படுவதாகவும் அந்த அமைப்பு மதிப்பிடுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :