வியட்நாம் போர் நாயகனும் அமெரிக்க செனட்டருமான ஜான் மெக்கைன் காலமானார்

ஜான் மெக்கைன், வியட்நாம் போரின் நாயகனாகவும் பின்னர் அமெரிக்க செனட்டராகவும் இருந்த குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் இன்று காலமானார். அவருக்கு வயது 81.

கடந்த ஜூலை 2017-ல் அவருக்கு மூளையில் புற்றுநோய் கட்டி தீவிரமான அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போதிலிருந்து அவர் சிகிச்சை எடுத்துவந்தார்.

மெக்கைனின் குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமையன்று அவருக்கு சிகிச்சையளிப்பதை நிறுத்த முடிவு செய்தனர்.

ஆறு முறை செனட்டராகவும், 2008 -ம் ஆண்டு ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளராகவும் விளங்கினார்.

கடந்த ஜூலை 2017-ல் அவரது இடது கண்ணுக்கு மேல் இருந்த இரத்த உறைவை நீக்கும் அறுவை சிகிச்சையின்போது அவருக்கு, தீவிரமான மூளை புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

மெக்கைன் வியட்நாம் போரின்போது போர் விமானியாக திகழ்ந்தார். அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், போர்க்கைதியாக ஐந்து வருடங்கள் அவர் சிறையில் தனது வாழ்க்கையை கழித்தார். மெக்கைனை பிடித்துவைத்தவர்கள் அவரை சிறையில் கொடுமைப்படுத்தினர்.

மெக்கைன் மறைந்த செய்தி வெளிவந்ததும் அவருக்கு அஞ்சலிகள் குவிந்து வருகிறது.

தன்னை கடுமையாக விமர்சித்துவந்த மெக்கைன் மறைந்ததையடுத்து '' செனட்டர் ஜான் மெக்கைனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் நெஞ்சமும் பிரார்த்தனைகளும் உங்களுடன் இருக்கிறது'' என ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

சக குடியரசு கட்சி செனட்டரான லிண்ட்ஸே கிரஹாம் தனது ட்வீட்டில் '' அமெரிக்கா மற்றும் குடியரசு கட்சி தனது மிகச்சிறந்த சாம்பியன்களில் ஒருவரை இழந்துள்ளது. நான் என்னுடைய அன்புக்குரிய நண்பர்களில் ஒருவரையும், அறிவுரையாளரையும் இழந்துவிட்டேன் '' என குறிப்பிட்டுள்ளார்.

2008 அதிபர் தேர்தலில் மெக்கைனுடன் போட்டிபோட்ட வேட்பாளர்களில் ஒருவரான சாரா பலின், ஒரு உண்மையான அமெரிக்கரை உலகம் இழந்துவிட்டது என கூறி மெக்கைனுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

முன்னாள் துணை அதிபரும், மெக்கைனின் நெடுநாள் நண்பரும், அரசியல் எதிரியுமான ஜோ பைடன் ''மெக்கைன் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் முடியவில்லை. சில உண்மைகள் காலமற்றவை என்பதற்கு மெக்கைன் வாழக்கை ஒரு சாட்சி'' என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், மெக்கைனை வீழ்த்தியவருமான பராக் ஒபாமா தனது அறிக்கையில்,''ஜான் சந்தித்த சோதனைகள் நமக்கும் வைக்கப்பட்டிருக்கிறது அல்லது ஜான் காட்டிய தைரியத்தை நாமும் காட்ட வேண்டியிருந்தது. தைரியம் என்பது என்ன என்பதை அவர் நமக்கு காட்டினார். நானும் மிச்சேலும் எங்களது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :