You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருவளர்ச்சிக்காக வயாகரா கொடுத்து சோதனை: 11 குழந்தைகள் உயிரிழப்பு
நெதர்லாந்தில் ஆய்வு ஒன்றுக்காக கர்ப்பிணி பெண்களுக்கு வயாகரா மாத்திரைகள் கொடுத்ததில், 11 சிசுக்கள் உயிரழந்தன. இதையடுத்து அந்த ஆய்வு உடனடியாக நிறுத்தப்பட்டது.
ஆண்மை குறைபாட்டுக்கு தரப்படும் வயாகரா மாத்திரைகள், இந்த சோதனையின்போது நஞ்சுக்கொடி சரியாக வளர்ச்சியடையாத கர்ப்பிணிப் பெண்களுக்குத் தரப்பட்டது. அவர்களின் கருவில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியை இது ஊக்குவிக்கும் என்று இந்த மாத்திரை தரப்பட்டாலும் சிசுக்களின் நுரையீரலை மோசமாக இது பாதித்ததால் குழந்தைகள் இறந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
நடந்ததை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வதற்கு முழு விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வின்போது ஏதாவது தவறாக நடந்துவிட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
நோய்வாய்ப்பட்ட குழந்தைகள்
இதே போன்ற ஆய்வுகள் பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்தபோது இதுபோன்ற பிரச்சனைகள் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், அந்த ஆராய்ச்சிகளினாலும், எந்த பலனும் கிடைக்கவில்லை.
கடந்த 2010இல் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சை முறைகள், சோதனை ரீதியாக மட்டுமே பயன்படுத்த வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
வளர்ச்சியடையாத நஞ்சுக்கொடியால் ஏற்படுகின்ற கருவளர்ச்சி குறைபாடு, தற்போது எந்த சிகிச்சையும் இல்லாத ஒரு நிலையில் உள்ளது.
அதாவது, கருவளர்ச்சியடையாமல் உரிய காலத்திற்கு முன்னரே பிறக்கும் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறப்பதால், அவை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
நோய்வாய்ப்பட்ட நிலையில் தாயின் வயிற்றில் உருவாகும் இந்த குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் அல்லது கர்ப்ப காலத்தை நீட்டிக்கும் மருத்துவ முறை உண்டாக்கப்படும் பட்சத்தில், அதுவே இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.
இரு குழுக்கள்
சமீபத்தில் நெதர்லாந்தில் நடத்தப்பட்ட சோதனை வரும் 2020ஆம் ஆண்டுவரை, அந்நாட்டிலுள்ள 11 மருத்துவமனைகளில் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
மொத்தம் 93 பெண்களுக்கு சில்டெனாபிலும் (வயாகராவின் பொதுப்பெயர்), மீதமுள்ள 90 பேருக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத மருந்தும் கொடுக்கப்பட்டது.
இவற்றில் வயாகரா கொடுக்கப்பட்டு பிறந்த 17 குழந்தைகளுக்கும், வீரியம் இல்லாத மருந்து கொடுக்கப்பட்ட பெண்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் பிறந்த பிறகு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது.
இதில் வயாகரா கொடுக்கப்பட்ட பெண்களுக்கு பிறந்த பதினோரு குழந்தைகள் நுரையீரல் பிரச்சனைகளின் காரணமாக உயிரிழந்தன.
வயாகரா கொண்டு கருவளர்ச்சியை முழுமையாக்கும் ஆராய்ச்சியை பிரிட்டனில் மேற்கொண்ட குழுவில் இடம்பெற்றிருந்தவரும், அந்த சோதனையால் குழந்தையின் கருவளர்ச்சி மேம்படவில்லை என்று தெரிவித்தவருமான லிவர்பூல் பல்கலைகழக பேராசிரியர் சர்க்க்கோ அல்பயர்விக், "நெதர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகள் எதிர்பாராதது" என்று கூறியுள்ளார்.
"இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்வதற்கு நாம் இச்சமயத்தில் கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
"நெதர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையை ஒத்து பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற சோதனைகளில் இதுபோன்ற பிரச்சனைகள் எதிர்கொள்ளப்படவில்லை என்பதால் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை தேவைப்படுகிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :