ஃபேஸ்புக்கின் எதிர்காலம் என்ன ஆகும்?

    • எழுதியவர், பிரையன் லஃப்கின்
    • பதவி, பிபிசி

இண்டியானா பல்கலைக்கழகத்தில் 2004ல் இளம் மாணவனாக படித்துக்கொண்டிருந்த போதுதான் என் வயதை ஒத்தவர்களுக்கு என ஒரு வலைத்தளம் வந்துள்ள தகவலை முதன்முதலாக அறிந்தேன். அப்போதெல்லாம் ஏஓஎல் இன்ஸ்டன்ட் மெசஞ்சரில் நண்பர்களுடன் பேசுவதுதான் என் பொழுதுபோக்கு.

ஃபேஸ்புக் பற்றி தெரியுமா...அதில் இணைந்திருக்கிறாயா....அது கல்லூரி இளைஞர்களுக்கான புதிய தளம் என நண்பர்கள் கூறினர்.

இந்நிலையில் கால இயந்திரத்தை சற்றே முன் நோக்கி ஏப்ரல் 2018க்கு ஓட்டி வந்து பார்க்கிறேன். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தனது ஃபேஸ்புக் தளம் குறித்து பதில் அளித்து திருப்தி ஏற்படுத்த முயன்றார் அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க். மாணவர்கள் தொடர்பு கொள்ள என ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம்

தற்போது மேற்கத்திய ஜனநாயக நாட்டு அரசுகளின் நிலைத்தன்மைக்கு ஒரு சவாலாக மாறிவிட்டது என்ற அச்ச உணர்வை போக்க அவர் போராடினார்.

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்தவில்லை என்பதை அவர் மறுத்தார். அதே சமயம் பொய் செய்திகளை பரப்புவதற்கும் தேர்தல் முடிவில் மாற்றம் செய்வதையும் தகவல் திருட்டையும் தடுக்க தமது நிறுவனம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதையும் மார்க் ஒப்புக்கொண்டார்.

கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் லட்சக்கணக்கான ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்களின் ஒப்புதல் இன்றி வணிக நோக்கில் பயன்படுத்தியதாக கடந்த மார்ச்சில் சர்ச்சை எழுந்தது.

இந்த புகார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் அடி ஆதாரத்தையே அசைத்ததுடன் தனது வணிக நடைமுறை களையே மாற்றிக்கொள்ளும் நிலைக்கு ஃபேஸ்புக் தள்ளப்பட்டது.

தவறுக்கு மன்னிப்பு கேட்கும் தனது நெடும்பயணத்தில் இறுதிக் கட்டமாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் கிடுக்கிப்படி கேள்விகளுக்கும் ஆளாக வேண்டிய நிலை மார்க்கிற்கு ஏற்பட்டது. தகவல் திருட்டை தடுக்க புதிய சட்டதிட்டங்களையும் ஐரோப்பா இயற்ற உள்ளது.

14 ஆண்டுகளுக்கு முன் ஃபேஸ்புக் பற்றி கேள்விப்பட்டதை பார்க்கும்போது இப்போது நிறைய மாறிவிட்டது. ஃபேஸ்புக்கின் முதல் சில ஆயிரம் பயனாளிகளில் ஒருவர் என்ற வகையில் பல மாற்றங்களை அறிகிறேன். சில அம்சங்களில் அது ஆச்சரியமூட்டுவதாகவும் சில வேதனையூட்டுவதாகவும் உள்ளது. மைஸ்பேஸ் போன்ற போட்டியாளர்களை வீழ்த்தியும் பல்வேறு புகார்களை கடந்தும் ஃபேஸ்புக் எப்படி நிமிர்ந்து நிற்கிறது.

இவ்வாறாக சென்றுகொண்டிருக்கும் ஃபேஸ்புக்கிற்கு எதிர்காலத்தில் ஏதேனும் முற்றுப்புள்ளி இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. இருக்காது என்பதற்கே அதிக வாய்ப்பிருப்பது தெரிகிறது.

மைஸ்பேஸ் மற்றும் ஃப்ரெண்ட்ஸ்டர்

சமூக தள தகவல் பகிர்விற்கு மக்கள் தயாராக இல்லாதபோது களமிறங்கியதும் முழுமையானதாக இல்லாததும் ஃப்ரெண்ட்ஸ்டரின் தோல்விக்கு காரணம் என்கிறார் பெர்னி ஹோகன். ஆக்ஸ்ஃபோர்டு இணையதள மையத்தில் முதுநிலை ஆராய்ச்சி நிபுணர் இவர்.

அதே சமயம் ஃபேஸ்புக் உலகளவில் சிறகு விரிக்க மைஸ்பேஸ், ஃப்ரெண்ட்ஸ்டர் உதவினாலும் அதன் வெற்றிக்கு அருகில் இவற்றால் நெருங்க கூட முடியவில்லை.

ஃபேஸ்புக் தன்னை எளிமையாக மாற்றிக்கொள்ள உதவிய அந்த தற்போதைய தொழில்நுட்பம் 2000 ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாக வில்லை. 2004ல் இணையத்தின் வேகம் அதிகரித்ததும் மற்ற நிறுவனங்கள் எதிர்கொண்ட தொழில்நுட்ப கட்டுப்பாடுகளும் ஃபேஸ்புக்கிற்கு வழி ஏற்படுத்த உதவின. 1990களின் தொடக்கத்தில் நமது பெயரை இணையத்தில் பகிர்ந்துகொள்ளவே தயக்கம் காட்டிய நிலையில் தற்போது செல்ஃபி போன்ற பெயர்கள் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியிலேயே இடம்பெற்றுவிட்டன. மைஸ்பேஸும் ஃப்ரெண்ட்ஸ்டரும் நமது சமூகத்தை சமூக தள பயன்பாட்டிற்கு தயார்படுத்தின என்கிறார் செயற்கை நுண்ணறிவியல் துறை நிபுணர் டிம் ஹ்வாங். இந்த வகையில் இணையதளத்திற்கு அடையாளம் தரும் நிறுவனமாக ஃபேஸ்புக் இயல்பாகவே மாறிவிட்டது என்கிறார் பெர்னி.

2000 ஆண்டுகளின் மத்தியில் திறமையான பொறியாளர்களை சிலிகான் வேலியிலிருந்து ஃபேஸ்புக் தேர்வு செய்தது. இது நிறுவனத்தின் அபார வளர்ச்சிக்கு உதவியதாக கூறுகிறார் ஹ்வாங். வளரும் நாடுகளில் குறைந்த விலையிலான மொபைல் ஃபோன்கள் மக்களை சென்றடைந்ததும் ஃபேஸ்புக்கின் வளர்ச்சிக்கு மற்றொரு காரணம் என்கிறார் ஹ்வாங். பல நாடுகளில் ஃபேஸ்புக்தான் இணையதளம் என பலரும் இன்னும் நினைத்துக்கொண்டிருப்பதாக கூறுகிறார் ஹ்வாங்.

மொபைல்ஃபோன்களின் சக்தியை குறைத்து மதிப்பிட முடியாது என்கிறார் ஹ்வாங். சமூக வலைத்தளங்களின் எழுச்சிக்கு மொபைல் ஃபோன்களின் பங்கு பெரிது என்கிறார் அவர். செய்திகளை அறிவதற்கும் தகவல் தொடர்பிற்கும் மொபைல்கள் வெகுவாக உதவின என்கிறார் அவர்.

ஃபேஸ்புக் பிரபலமான நிலையில் அதன் வளர்ச்சியில் ஏற்பட்டத் தொய்வு குறித்த பேச்சுகளும் தொடங்கின. ஃபேஸ்புக்கை மிக அதிகமாக பயன்படுத்துபவர்களின் அளவு 2015 - 2017க்கு இடையில் 80% அளவுக்கு குறைந்ததாக ஆய்வுகள் வெளியாகின. கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா பிரச்னைக்கு முன்பே இத்தொய்வு கணிக்கப்பட்டது.

வாஷிங்டனில் கடந்த ஏப்ரலில் தம் நிறுவனம் மீதான புகார் குறித்து வாக்குமூலம் அளித்தார் மார்க் ஜுக்கர்பெர்க். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பிற்கு பிரசார ஏற்பாட்டு நிறுவனம் 8.7 கோடி ஃபேஸ்புக் பயனாளிகள் தகவல்களை பெற்றது தொடர்பாக மார்க் பதிலளித்தார்.

ஃபேஸ்புக் மக்களின் தேவைகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப இயங்குவதாக கூறுகின்றனர் உளவியலாளர்கள். டெலிட் ஃபேஸ்புக் என்பது போன்ற ஹேஷ்டேக் பிரச்சாரங்கள், தனிப்பட்ட தகவல் களவு என பல தடைகள் வந்தபோதிலும் ஃபேஸ்புக் வலுவாகவே உள்ளது. இது போன்ற தளங்களுக்கு மக்களின் உணர்வுபூர்வமான ஆதரவும் உள்ளது. இதில் அவர்கள் ஆலோசனைகளை கேட்கிறார்கள், பரிந்துரைகளை கேட்கிறார்கள்...இதன் மூலம் அவர்கள் சமூக மூலதனம் அடைகிறார்கள் என்கிறார் விஸ்கான்ஸின் பல்கலைக்கழக தகவல் தொடர்பியல் இணைப் பேராசிரியர கேடலினா தோமா.

பெரும்பாலான ஃபேஸ்புக் பயனாளிகள் அதை பயன்படுத்துவதால் பாதகங்களை விட சாதகங்களையே அதிகம் காண்கின்றனர். பழைய நண்பர்களை கண்டுபிடிப்பதிலிருந்து புதிய வேலையை தேடுவது வரை..வியாபாரத்தை விரிவாக்குவது வரை... பயன்படுகிறது ஃபேஸ்புக். மோசடி நடந்துள்ளதாக உலகளவில் தலைப்பு செய்திகள் வெளியானாலும் இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறையவில்லை. நமது உள்ளங்கையில் இணையதள வசதி உள்ள ஸ்மார்ட்ஃபோன் உள்ளவரை ஃபேஸ்புக் போன்றவை நம் வாழ்வின் இணை பிரியா அங்கமாக நீடிக்கப்போவது நிச்சயம் என்கிறார் ஹோகன். ஒருவரின் விருப்பத்தையே தமது ஆதாயமாக மாற்றிக்கொள்கின்றன சமூக ஊடகங்கள். நாங்கள் விளம்பரங்கள் மூலம் பயன்பெறுகிறோம் என மக்கள் மன்றத்திலேயே ஒப்புக்கொண்டார் ஜுக்கர்பெர்க். இணையதள வசதிகொண்ட மொபைல் ஃபோன்களின் வருகையே ஃபேஸ்புக்கை மென்மேலும் உயர்த்தியது.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா பேரிடிக்கு பின்னரும் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக 8.7 கோடி பேரிடம் நிறுவனரே மன்னிப்பு கேட்ட பின்னரும் மக்களின் விரல்கள் ஃபேஸ்புக்கை வருடுவதை நிறுத்தவில்லை. ஃபேஸ்புக் வணிகம் இன்னும் சூடுபிடிக்கும் என கூறுகிறார் நியூயார்க் பல்கலைக்கழக மார்க்கெட்டிங் துறை பேராசிரியர் ஸ்காட் கல்லோவே. 220 கோடி பேர் மூழ்கிக்கிடக்கும் ஃபேஸ்புக்கை விட விளம்பரதாரர் களுக்கு வேறு நல்ல இடம் என்ன கிடைத்துவிடும் என கேள்வி எழுப்புகிறார் ஸ்காட்.

ஆனால் ஃபேஸ்புக்கிலிருந்த சில தரப்பினர் வெளியேறும் சூழலும் உள்ளது.

22 வயதுக்குட்பட்டவர்கள் ஸ்நாப்சாட் போன்ற படித்தவுடன் அழிந்துவிடும் தகவல் தொடர்புகள் கொண்ட புதிய சமூக தள வசதிகளை விரும்பத்தொடங்கிவிட்டனர். தங்கள் பெற்றோர் உலாவும் ஃபேஸ்புக் பக்கம் அவர்கள் செல்வதில்லை. 2017ம் ஆண்டில் 25 வயதுக்குட்பட்ட 28 லட்சம் இளைஞர்கள் ஃபேஸ்புக்கை விட்டு விலகியுள்ளனர். 2018ல் இதைவிட அதிகம் பேர் வெளியேறியிருப்பார்கள் என்கிறது இ மார்க்கெட்டர் என்ற ஆய்வு நிறுவனம். ஆனால் வயதானவர்கள், மூத்த குடிமக்கள் ஃபேஸ்புக்கை சார்ந்திருப்பார்கள். ஆனால் இது எல்லாவற்றையும் விட ஃபேஸ்புக்கை இயங்க அனுமதிப்பதில் நாடுகளின் அரசுகள் என்ன முடிவெடுக்க போகின்றன என்பதுதான் அத்தளத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும்.

ஃபேஸ்புக்கை அழிக்கப்போவது எது என்பது தற்போது நம் முன் உள்ள கேள்வி அல்ல என்கிறார் எம்.ஐ.டியின் சமூக அறிவியல் கல்வி பேராசிரியர் ஷெர்ரி டர்க்கில். ஃபேஸ்புக்கை சரியாக பயன்படுத்துவதால் மக்களுக்கு என்ன கிடைக்கும் என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி என்கிறார் ஷெர்ரி. ஃபேஸ்புக்கில் தம் தகவல்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என விரும்புகிறார்கள் என்கிறார் ஷெர்ரி. ஃபேஸ்புக்கின் பிரமாண்டமும் அதனிடம் உள்ள பணமும் எந்த போட்டியாளரையும் இழுத்துமூட வைத்துவிடும் அல்லது விலைக்கு வாங்கிவிடும் என்கிறார் கல்லோவே. இன்ஸ்டாகிராமையும் வாட்சப்பையும் இதற்கு உதாரணமாக காட்டுகிறார் கல்லோவே.

இப்போது ஃபேஸ்புக் நம் வாழ்க்கையில் அவசியமாகி விட்டநிலையில் அதிலிருந்து வெளியேறும் நிலை இப்போது இல்லை என்கிறார் கல்லோவே. ஒரு நிறுவனத்துக்குப் பதிலாக பல நிறுவனங்கள் இருந்தால், அது புத்தாக்கத்தைத் தூண்டி வேலைவாய்ப்பை அதிகரிப்பதன் மூலம் சந்தைக்கும், பொருளாாதாரத்துக்கும் நன்மை செய்யும் என்று மக்கள் உணர்ந்தால் அதன் மூலம் ஃபேஸ்புக்கின் மேலாதிக்கம் குறையலாமே தவிர, ஒரேயடியாக ஃபேஸ்புக் சரிந்து காணாமல் போவது சாத்தியமில்லை என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :