You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தானாக ஒலியை பதிவு செய்த செக்ஸ் பொம்மை செயலியால் அதிர்ச்சி
நவீன செக்ஸ் பொம்மைகள் தயாரிப்பு நிறுவமான லவென்,அதிர்வுகள் எனப்படும் வைப்ரேட்டர்கள் செயல்படும்போது, அச்செயலி நிறுவப்பட்டுள்ள செல்பேசிகளில் தானே ஒலியை பதிவு செய்து சேமிக்கும் குறைபாடிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது.
தனது செல்பேசியில் மிக நீண்ட ஒலி பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த ரெட்டிட் என்னும் சமூக வலைதளத்தின் பயனாளர் ஒருவர் கூறியிருந்ததை தொடர்ந்து இதுகுறித்து லவென்ஸ் நிறுவனத்துக்கு தெரியவந்தது.
ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், குறைபாடு ஏற்பட்டிருந்த செயலியில் பதிவு செய்யப்பட்டிருந்த கோப்புகள் மற்ற கருவிகளுடன் பகிரப்படவில்லை என்றும், மேலும் அப்பிரச்சனை தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இணையத்துடன் இணைக்கப்பட்ட மின்னணு கருவிகளிலுள்ள அபாயங்களை இப்பிரச்சனை எடுத்துக்காட்டுவதாக இதுகுறித்து கருத்து தெரிவித்த வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார்.
தானாக பதிவாகிய ஒலி
லவென்ஸின் தயாரிப்புகளை அச்செயலி பதியப்பட்டுள்ள செல்பேசியில் உள்ள ப்ளூடூத் வழியாக கட்டுப்படுத்த முடியும். அதாவது அச்செயலியில் உள்ள திறன்பேசிகளின் ஒலிவாங்கிகள் அல்லது மைக்ரோபோன்களை பயன்படுத்தி அருகிலுள்ள ஒலியை கேட்பதன் மூலம் அவற்றில் எதை பதிவு செய்வது என்பதை இனங்கண்டு முடிவு செய்கிறது.
ஆனால், அச்செயலியின் மூலம் பதிவு செய்யப்படும் ஒலியை பற்றிய விஷயம் தெளிவுப்படுத்தப்படவில்லை. "பயனாளர்களின் சிறிதளவு தகவலை பதிவு செய்யும் வகையில் எங்கள் அமைப்பை உருவாக்கியுள்ளோம்" என்று அந்நிறுவனத்தின் தனியுரிமை கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது திறன்பேசியை மொத்தமாக கோப்பு நீக்கம் செய்ய முயற்சித்த பயனர் ஒருவர், தனது லவென்ஸ் செயலியின் பயன்பாட்டு பதிவுகள் கோப்பாக சேமிக்கப்பட்டிருப்பதை கண்டு, கடந்த வியாழக்கிழமை அன்று இப்பிரச்சினையை எழுப்பினார்.
"நான் கடைசியாக செயலியை பயன்படுத்தி எனது செக்ஸ் அதிர்வியை பயன்படுத்தியபோது பதிவு செய்யப்பட்ட முழு ஆறு நிமிட ஒலியை கொண்ட கோப்பை கண்டேன்."
"நான் எப்போதுமே அதிர்வியை பயன்படுத்தும் முழு நேரத்தையும் அதை கோப்பாக பதிவு செய்வதை விரும்பியதில்லை" என்று அப்பயனர் தெரிவித்துள்ளார்.
புகார் எழுப்பப்பட்டதன் மறுநாளே அதற்கு பதிலளித்த லவென்ஸ், அப்பிரச்சனையானது "சிறிய பிழையின்" காரணமாக ஆண்ட்ராய்டு இயங்குதள செயலியில் மட்டும் ஏற்பட்டதாகவும், மேலும், "எவ்வித தகவலும் அல்லது தரவும் தங்களது சர்வர்களுக்கு அனுப்பப்படுவதில்லை" என்றும் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம்
ஸ்டாண்டர்ட் இன்னோவேஷன் என்னும் மற்றொரு இணையத்தோடு இணைக்கப்பட்ட செக்ஸ் பொம்மைகள் தயாரிப்பு நிறுவனம், அதன் செயலி பயனாளர்கள் குறித்த தகவல்களை அந்நிறுவனத்துக்கு அனுப்பியதாக புகார் எழுப்பப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இவ்வருடத்தின் தொடக்கத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மில்லியன் பவுண்டுக்கும் அதிகமான தொகையை இழப்பீடாக வழங்கியது.
லவென்ஸ் நிறுவனத்தின் பிழை மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் குறைவானதுதான் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"பயனரின் தகவல்களை பதிவு செய்வதென்பது விவேகமற்றது. ஆனால், இப்பிரச்சனையின் அளவு ஒருவரின் செல்பேசி மற்றவரால் திருடப்படும்போதுதான் தீவிரமாகிறது" என்று பென் டெஸ்ட் பார்ட்னர்ஸ் என்ற ஆய்வு நிறுவனத்தின் கென் முன்ரோ தெரிவித்துள்ளார்.
செக்ஸ் பொம்மைகள் உள்ளிட்ட இணையத்தோடு இணைக்கப்பட்ட மின்னனு கருவிகளின் பயன்பாட்டாளர்கள் அதிலுள்ள அபாயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று முன்ரோ குறிப்பிட்டுள்ளார்.
"கேமரா மற்றும் ஒலிவாங்கியை பயன்படுத்தும் எந்த மின்னணு கருவியானாலும் அது பயனரின் தனிப்பட்ட தகவல்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வாய்ப்புள்ளது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்