''மலையளவு துக்கம் வந்தாலும், நேரு குடும்பத்தினர் கண்ணீர் விடுவதில்லை"

    • எழுதியவர், ரெஹான் ஃபஜல்
    • பதவி, பிபிசி

1947ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. ஒரே நாடாக இருந்த இந்தியா பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று இரண்டாக பிரிந்தபோது, இருதரப்பிலும் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. அதன் விளைவு? இரு நாட்டு மக்களும் பிரச்சனைகளை எதிர்கொண்டனர், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

பாகிஸ்தானின் லாகூரோ, இந்தியாவின் டெல்லியோ, மக்களுக்கு ஏற்பட்ட சோதனைகளும், வேதனைகளும் அளவிட முடியாதவை, என்றென்றும் நீங்கா வடுக்களை ஏற்படுத்தியவை. பொதுமக்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன, தாக்கப்பட்ட மக்கள் காயங்களுடன் ரத்தம் வழிய பாதுகாப்பு தேடி ஓடினார்கள்.

டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் முஸ்லிம்களின் கடைகள் கொள்ளையிடப்படும் தகவல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு கிடைத்தது. உடனே அவர் அங்கு சென்றபோது, காவல்துறையினர் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

முஸ்லிம்களின் கடைகளை குறிவைத்த இந்து மற்றும் சீக்கிய மக்களில் சிலர் அங்கிருக்கும் பொருட்களை சூறையாடினார்கள்.

அதைப் பார்த்த நேரு சீற்றத்தில் சினந்தெழுந்தார். தன்னருகே நின்றிருந்த போலிசாரின் கையிலிருந்த தடியை பிடுங்கி, கொள்ளையிட்டவர்களை விரட்டினார். நேரு நேரடியாக களத்தில் இறங்கி செயல்பட்டது ஒரு முறை மட்டுமல்ல.

முன்னாள் ஐ.சி.எஸ் அதிகாரியும், பல்வேறு நாடுகளில் இந்திய தூதராக பணிபுரிந்தவருமான பத்ருதின் தையப்ஜி 'Memoirs of an egoist' என்ற தனது சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"பழைய டெல்லியில் உள்ள அகதி முகாம்களுக்கு செல்ல முயலும் முஸ்லிம்களை அவர்கள் செல்லும் வழியில் மிண்ட்டோ பாலத்தின் அருகே வழிமறித்து கொலை செய்கின்றனர் என்ற தகவலை நேருவிடம் சொன்னேன். நான் சொன்னதை கேட்டதும் வெகுண்டெழுந்த நேரு, விரைவாக மாடிப்படிகளில் ஏறிச் சென்றார். திரும்பி வந்த அவரது கையில் தூசி படிந்த கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த அவருடைய தந்தை மோதிலால் நேருவுடைய துப்பாக்கி அது".

"அன்று இரவு நானும் அவரும் முகாமுக்கு செல்லும் முஸ்லிம்கள் போல பழைய அழுக்கான ஆடைகளை அணிந்துக்கொண்டு செல்லவேண்டும். அங்கு எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், தாக்குதல்தாரிகளை சுட்டுத் தள்ளவேண்டும் என்று சொன்னார் நேரு.

இதைக் கேட்ட எனது சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. ஒரு சுதந்திர நாட்டின் பிரதமருக்கு இதுபோன்ற பிரச்சனையை களையெடுக்க வேறு வழிகளும் இருக்கிறது என்று பொறுமையாக புரிய வைத்தேன்"

நேருவின் கோபமே அவரது உயிருக்கு உலைவைக்கும் என்ற பயம் மவுண்ட்பேட்டனுக்கு எப்போதுமே இருந்தது. எனவே நேருவை கண்காணிப்பதற்காக அவர் சில வீரர்களை நியமித்திருந்தார்.

ஜாகிர் ஹுசைனை காப்பாற்ற மெய்க்காவலர்கள் இல்லாமல் சென்ற நேரு

இதேபோல், நாடு சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்கள் முன்பு, இரவு 11 மணியளவில் ஜாமியா மிலியா இஸ்லாமிய கல்லூரியின் தலைவர் முனைவர் ஜாகிர் ஹுசைன், நேருவின் நண்பரான முகம்மது யூனுசுக்கு அச்சத்துடன் தொலைபேசியில் அழைப்புவிடுத்தார். ஜாகிர் ஹுசைன் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சமயத்தில் யூனுஸ் நேருவின் வீட்டிலேயே தங்கியிருந்தார். கலவர கும்பல் ஒன்று கல்லூரியின் முன்பு திரண்டிருப்பதாகவும், அவர்களின் நோக்கம் சரியானதாக தோன்றவில்லை என்ற ஜாகிர் ஹுசைனின் அச்சத்தை நேருவிடம் தெரிவித்தார் யூனுஸ்.

'Persons, Passions and Politics' என்ற தனது புத்தகத்தில் மொஹம்மத் யூனுஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார், "தொலைபேசியில் தகவலை கேட்டதும் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த நேருவிடம் ஓடிச்சென்று இதனை தெரிவித்தேன். உடனே காரை வரசொன்ன நேரு, என்னையும் உள்ளே உட்காரச் சொன்னார்.

நேருவின் பாதுகாவலர்கள் யாரும் காரில் இல்லை. ஜாமியா மிலியா கல்லூரியை நாங்கள் சென்றடைந்தபோது, அங்கிருந்த மாணவர்களும், பணியாளர்களும் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளே அடைக்கலமாகியிருந்தார்கள். கலவரக் கும்பல் அவர்களை சூழ்ந்திருந்தார்கள்.

அங்கு நேரு சென்றதும் அவரை அடையாளம் கண்டுகொண்ட கலவரக்காரர்கள் நேருவை சுற்றி வளைத்தனர். நேரு சற்றும் பயப்படாமல் அவர்களை நோக்கி உரத்தக்குரலில் கூச்சலிட்டார்.

பாதுகாப்பில்லாமல் கலவரக் கும்பலுக்கு மத்தியில் நேரு சென்ற தகவல் வைஸ்ராய் மவுண்ட்பேட்டனுக்கு தெரிந்துவிட்டது. உடனே இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட சில வாகனங்களுடன், தனது மெய்க்காவலர்களையும் நேருவின் பாதுகாப்புக்கு அனுப்பிவிட்டார் மவுண்ட்பேட்டன். மெய்க்காவலர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது, நேருவை சுற்றி கும்பல் நிற்பதை பார்த்தார்கள்.

'ஜவஹர்லால் நேரு ஜிந்தாபாத்' என்று அவர்கள் சமோயோஜிதமாக குரல் எழுப்பிகொண்டே சென்றதும், கலவரக்காரர்கள் சுதாரித்துக் கொண்டார்கள். பிரதமரிடம் மன்னிப்பும் கேட்டார்கள். கல்லூரிக்குள் சென்ற நேரு ஜாகிர் ஹூசைனுக்கு ஆறுதல் அளித்தார்.

ஒருபோதும் அழக்கூடாது

நேருவின் ஒன்றுவிட்ட சகோதரரும், அமெரிக்காவிற்கான இந்திய தூதராக பணியாற்றியவருமான பி.கே. நேரு 1935ஆம் ஆண்டு ஒரு ஹங்கேரிய பெண் ஃபோரியை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு முன், குடும்பத்தினரை சந்திப்பதற்காக அவர் ஆனந்தபவனத்திற்கு ஃபோரியை அழைத்துச் சென்றார்.

கதராடை அணியும் குடும்பத்தினரை சந்திக்க மிக்க ஆவலுடன் காதலர்கள் சென்றார்கள். ஆனால் அப்போது கல்கத்தாவின் அலிபூர் சிறையில் நேரு இருந்தார். எனவே, தனது வருங்கால மனைவியை கல்கத்தாவிற்கு அழைத்துச் சென்றார் பி.கே. நேரு.

கைதியாக சிறையில் நேருவை பார்த்தபோது, நேர்மையானவராக, இணக்கமானவராகவும், ஆங்கிலேயரைப் போன்ற தோற்றத்தையும் கொண்ட அவர், எந்த சட்டத்தையும் மீறமுடியும் என்பதை ஃபோரியால் நம்பமுடியவில்லை.

நேருவிடம் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, சிறையில் இருந்து வெளியேறும்போது, ஃபோரியால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குடும்பத்திற்கு கடிதம் எழுத நேரு அனுமதிக்கப்பட்ட காலம் அது.

'Nice Guys Finish Second' என்ற தனது சுயசரிதையில் பி.கே. நேரு இவ்வாறு எழுதுகிறார், "அடுத்த மாதம் ஆனந்தபவனிற்கு வந்த கடித உறையில் எங்களுக்கான ஒரு கடிதமும் இருந்தது. இப்போது நீயும் நேரு குடும்பத்தின் உறுப்பினர். நேரு குடும்பத்தின் சில வரைமுறைகளை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எங்கள் இருவருக்கும் நேரு எழுதியிருந்தார். ".

"என்னை சந்தித்துவிட்டு செல்லும்போது, உங்கள் கண்கள் ஈரமானதை பார்த்தேன். எப்போதும் ஒன்றை மட்டும் மறந்துவிடாதே. மலையளவு துக்கம் வந்தாலும், நேரு குடும்பத்தினர் கண்ணீர் விடுவதில்லை."

"அதே கடித உறையில் இருந்த இந்திரா காந்திக்கான கடிதத்தில், குடும்பத்தின் புது மருமகளை பிடித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார் ஜவஹர்லால் நேரு."

நெறிமுறை? என்ன நெறிமுறை?

1949- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பர்மாவின் முதல் பிரதமர் 'யூ நூ' திடீர் பயணமாக டெல்லி வந்தார். அன்று ஞாயிற்றுக் கிழமை. அப்போது வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றிய ஒய்.டி.குண்டேவியா ஷார்ட்ஸ் அணிந்துக் கொண்டு நீச்சல் பயிற்சிக்காக ஜிம்கானா கிளப்புக்கு செல்வதற்காக தனது காரில் ஏறி அமர்ந்தார்.

அப்போது வீட்டில் இருந்த தொலைபேசி ஒலித்தது. நேரு உங்களை உடனே சந்திக்க விரும்புகிறார் என்று நேருவின் செயலர் ஏ.வி.பை கூறினார். தனது மனைவியை அரை மணி நேரம் காத்திருக்கச் சொன்ன குண்டேவியா, அணிந்திருந்த உடையுடன் நேருவை சந்திக்க சென்றார்.

"என்னை அந்த ஆடையில் பார்த்த நேரு, எங்கிருந்து வருகிறாய்? விமான நிலையத்திற்கு போகவில்லையா என்று கேட்டார். அப்போதுதான் டீஷர்ட், ஷார்ட்சுடன் இருப்பதையும், என் தோளில் துண்டு இருப்பதையும் உணர்ந்தேன். நீச்சல் பயிற்சிக்காக சென்றுக் கொண்டிருந்தேன் என்று தர்ம சங்கடத்துடன் நேருவிடம் கூறினேன்" என Outside the Archive என்ற தனது புத்தகத்தில் குண்டேவியா குறிப்பிட்டுள்ளார்.

யூ நூவை வரவேற்க பாலம் விமான நிலையத்திற்கு செல்லவில்லையா என்று கேட்டார். அவர் ஒரு மணிநேரத்தில் இந்தியா வருவதாக இருந்தது. நான் செல்லவேண்டிய அவசியம் இல்லை என்று நெறிமுறைகளுக்கான ப்ரோட்டாகால் துறையினர் கூறியதை பிரதமரிடம் குறிப்பிட்டேன்.

"நெறிமுறை? ப்ரோட்டாகால்? என்ன அவசியம் அதற்கு என்று கர்ஜித்தார் பிரதமர். நீ மட்டும்தான் அவரை இதற்கு முன்னர் சந்தித்திருக்கிறாய், என்னுடன் காரில் ஏறு, பாலம் விமானம் செல்லவேண்டும் என்று உத்தரவிட்டார் அவர்".

"அரைகுறை ஆடையுடன் எப்படி வருவது என்று கேட்டேன். இப்படியே வா என்று சொல்லிவிட்டார். வேறு வழி? நானும் அவருடனே ஏறக்குறைய ஓடிச்சென்று காரில் ஏறிக்கொண்டேன். நேருவுடன் என்னை அந்தக் கோலத்தில் விமான நிலையத்தில் பார்த்த அனைவருக்கும் வியப்பு ஏற்பட்டதை மறக்கமுடியாது".

"யூ நூவை நேருவுக்கு அறிமுகப்படுத்திவிட்டு வேறொரு காரில் வீட்டுக்கு வந்துவிட்டேன். இரண்டு பிரதமர்களும் பயணித்த காரில் பின்புற இருக்கையில் என்னுடைய துண்டும், நீச்சல் உடையும் இருந்தது. அடுத்த நாள் காலை எனது அலுவலக மேசையின்மீது என்னுடைய நீச்சல் உடை மற்றும் துண்டு இருந்த பொட்டலம் ஒன்று இருந்தது" என்று குறிப்பிடுகிறார் குண்டேவியா.

நேருவுக்கும் எட்வினாவுக்கும் இடையில் காதல்

மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினாவை நேருவுக்கு மிகவும் பிடிக்கும். இருவரும் காதலித்தார்கள் என்றும் கூறப்படுவதுண்டு. 1949ஆம் ஆண்டு, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக லண்டனுக்கு நேரு சென்றார். அந்த சமயத்தில் இந்திய தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த குஷ்வந்த் சிங் அலுவலகத்திற்கு சென்றபோது, அவரது மேஜையின் மீது 'உடனே என்னை சந்திக்கவும்' என்று இந்திய ஹை கமிஷனர் கிருஷ்ண மேனனின் குறிப்பு காத்துக்கொண்டிருந்தது.

"Truth, Love and Little Melis" என்ற தனது சுயசரிதையில் குஷ்வந்த் சிங் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "அவரை சென்று சந்திப்பதற்கு முன்னர், நேரு பற்றிய செய்திகள் எதாவது பத்திரிகைகளில் வெளியாகியிருக்கிறதா என்று பார்த்தேன். டெய்லி ஹெரால்ட் பத்திரிகையில் நேரு மற்றும் லேடி மவுண்ட்பேட்டனின் மிகப்பெரிய படம் வெளியாகியிருந்தது. அதில் இரவு உடை அணிந்திருக்கும் எட்வினா, நேருவுக்கு கதவைத் திறந்துவிடுகிறார்.

அந்த புகைப்படத்தின் கீழே, "லேடி மவுண்ட்பேட்டனின் நள்ளிரவு விருந்தாளி" என்று எழுதப்பட்டிருந்தது. அந்த குறிப்பிட்ட நாளில், மவுண்ட்பேட்டன் லண்டனில் இல்லை என்றும் கூறப்பட்டது.

மேனனின் அறைக்கு நான் சென்றவுடன், இன்றைய ஹெரால்ட் பத்திரிகை பார்த்தீர்களா? பிரதமர் உங்கள் மீது மிகவும் கோபமாக இருக்கிறார் என்று கூச்சலிட்டார் அவர்.

இதில் நான் செய்வதற்கோ, என்மீது கோபப்படுவதற்கோ எதுவும் இல்லை, விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு நேரடியாக செல்வதற்குப் பதிலாக பிரதமர் லேடி மவுண்ட்பேட்டனின் வீட்டிற்கு செல்வார் என்று எனக்குத் தெரியுமா?" என்று நான் பதிலளித்தேன்.

எட்வினாவுடன் கிரேக்க உணவகத்திற்கு சென்றார் நேரு

குஷ்வந்த் சிங் இது பற்றி மேலும் எழுதுகிறார், "இரண்டு நாட்கள் நேருவின் கண்ணில் படாமல் தப்பித்துக்கொண்டேன். மாநாட்டில் பரபரப்பாக இருந்த அவர் நடந்ததையும் மறந்துவிட்டார்.

ஆனால் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், அவர் கிரேக்க உணவகத்தில் இரவு உணவிற்காக எட்வினா மவுண்ட்பேட்டனை சென்றிருந்தார்.

நேருவையும் எட்வினாவையும் அடையாளம் கண்டுகொண்ட உணவக உரிமையாளர், தனது உணவகத்திற்கு விளம்பரம் தேடுவதற்காக பத்திரிகைகளுக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்தார்.

அடுத்த நாள், இருவரும் ஜோடியாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகிவிட்டன. எனக்கு மீண்டும் திட்டு விழப்போகிறது என்று புரிந்துவிட்டது. அலுவலகத்தை அடைந்த போது, மேனனின் குறிப்பு என் மேசையில் இருந்தது. அதில், பிரதமர் உடனே என்னை சந்திக்க விரும்புவதாக கூறப்பட்டிருந்தது.

நேரு தங்கியிருந்த க்ளைரிஜேஸ் ஹோட்டலுக்கு சென்றேன். நேருவின் செயலாளர் மத்தாய், அறைக்கு செல்லுமாறு பணித்தார்.

நான் கதவைத் தட்டியதும், நேரு உள்ளே வரச்சொன்னார். "நீங்கள் என்னை அழைத்ததாக சொன்னார்கள்" என்றேன். "நீ யார்?" என்பது அவரின் முதல் கேள்வி. "லண்டனில் உங்களுடைய மக்கள் தொடர்பு அதிகாரி" என்று சொன்னேன். என்னை தலை முதல் கால் வரை பார்த்த நேரு, "உங்கள் விளம்பரம் மிகவும் விசித்திரமாக உள்ளது!" என்றார்.

நேருவுடன் செல்லும் கைப்பெட்டி

நேரு எப்போது பயணம் மேற்கொண்டாலும், அவருடன் ஒரு கைப்பெட்டியும் செல்லும். அவருடைய பாதுகாப்பு அதிகாரியின் எஃப். ருஸ்த்மஜியின் அதை எடுத்துச் செல்வார்.

நேருவின் உடையில் பாக்கெட் இருக்காது. எனவே பாக்கெட்டில் வைக்கவேண்டிய பொருட்கள் அனைத்தும் அந்த ஃப்ரீஃப்கேஸில் வைக்கப்பட்டிருக்கும்.

நேருவின் கைப்பெட்டியில் அவரது சிகரெட் பெட்டி, (ஸ்டேட் எக்ஸ்பிரஸ் 555) லைட்டர், அந்த சமயத்தில் அவர் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம், பதிலளிக்க வேண்டிய கடிதங்கள், தொண்டை சரியில்லாவிட்டால் பயன்படுத்தக்கூடிய 'சுக்ரெட்ஸ்' ஒரு பாக்கெட் மற்றும் புத்தகங்களில் குறிப்புகளை எழுதுவதற்காக பென்சில்கள் இருக்கும்.

நேரு செல்லும் இடத்திற்கெல்லாம் அவருடைய மழைக்கோட்டும் எடுத்துச் செல்லப்படும் என்று "I Was Nehruj Shadow" என்ற புத்தகத்தில் ருஸ்த்மஜி குறிப்பிட்டுள்ளார்.

எதையும் வீணாக்காதே

எதையும் வீணடிப்பது நேருவுக்கு பிடிக்காது. அவர் வீட்டில் இருந்து கிளம்பும்போது, குழாய் எதாவது திறந்திருப்பதை கவனித்தால், வண்டியோட்டியை அனுப்பி குழாயை மூடிவிட்டு வரச் சொல்வார். அதன்பிறகே வண்டி கிளம்பும்.

"நேருவின் செளதி அரேபிய பயணத்தின்போது, அவருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருந்த அறையில் அவரே விளக்குகளை அணைத்துக் கொண்டிருந்ததை நானே பார்த்தேன்" என்கிறார் ருஸ்த்மஜி.

இந்த பயணத்தைப் பற்றி குறிப்பிடும் மொஹம்மத் யூனுஸ் தனது புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார், "உறங்கச் செல்வதற்கு முன்பு புத்தகம் படிக்கும் விருப்பம் கொண்டவர் நேரு. எனவே அவருக்கு மேசை விளக்கு ஓன்றுவேண்டும் என்று கேட்டார். அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கிறதோ என்று நினைத்த பணியாள், அதிக வெளிச்சம் கொண்ட விளக்கை எடுத்துவந்தார். அந்த வெளிச்சத்தை குறைப்பதற்காக ஒரு துணி கொண்டு மூடினேன். ஆனால் அந்த வெளிச்சத்தால் நான் போட்ட துணி ஏறக்குறைய எரிந்தே போய்விட்டது."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :